மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 பிப் 2022

சிறப்புக் கட்டுரை: இந்தியாவில் பட்டினி என்பது தீர்க்க முடியாத பிரச்சினையா?

சிறப்புக் கட்டுரை: இந்தியாவில் பட்டினி என்பது தீர்க்க முடியாத பிரச்சினையா?

மிருதுளா சாரி

மார்ச் மாதம் 19ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வேளாண் துறை இணை அமைச்சர் பர்சோட்டம் ரூபாலா, இந்திய கலாச்சாரம் பற்றி பாடம் எடுத்தார். “பெண் நாய்கள் குட்டி போட்டால், ஷிரா உணவை அவற்றுக்கு அளிக்கும் பாரம்பரியம் நம் கிராமங்களில் உள்ளது” என்று அறிக்கை மூலமான பதிலில் குறிப்பிட்டிருந்தவர், “இத்தகைய பாரம்பரியம் கொண்டுள்ள நாட்டில், வெளியிலிருந்து வந்து நம் பிள்ளைகள் பட்டினியில் இருப்பதாகச் சொல்வதைக் கருத்தில் கொள்ளக் கூடாது” என்று கூறினார்.

உலகப் பசிக் குறியீட்டில் இந்தியா தொடர்ந்து பின்தங்கிவருவது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் இவ்வாறு கூறினார். உலக அளவில் அதிக உணவு உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான இந்தியாவால் ஏன் தனது சொந்த மக்களுக்கு உணவை விநியோகிக்க முடியவில்லை என ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் கேள்வி எழுப்பியிருந்தார்.

உலகப் பசிக் குறியீட்டு விவரங்களை அரசு கோரியிருப்பதாகவும், இவை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர்தான் அவரது சொந்த அமைச்சகம், தேசிய குடும்ப ஆரோக்கிய சர்வே ஐந்தாம் சுற்றின் முதல்கட்டம் தொடர்பான பகுதி தகவல்களை வெளியிட்டிருந்தது. 13 மாநிலங்களில், ஐந்தாண்டுகளுக்கு முன் இருந்ததைவிட தற்போது குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசித்திருக்கும் மக்கள்

பல்வேறு இடங்களிலிருந்து கிடைக்கும் புள்ளி விவரங்கள் கவலை அளிக்கின்றன. 45 முதல் 64 சதவிகிதம் வரையான கிராமப்புற ஏழை இந்தியர்கள் ஊட்டச்சத்து மிக்க உணவைப் பெற வழியில்லாமல் இருக்கின்றனர். 2018இல் ஐந்து வயதுக்குட்பட்ட 8.8 லட்சம் குழந்தைகள் அகால மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் 69 சதவிகிதத்தினர் ஊட்டச்சத்து குறைபாட்டினால் இறந்துள்ளனர். கோவிட் தாக்கத்துக்கு மத்தியில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளது பற்றி பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது நிச்சயம் கவலை அளிப்பதுதான். ஏனெனில், பத்தாண்டுகளுக்கு முன் நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன், 2013இல் இந்தியா தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது. இந்தச் சட்டம் ஏற்கனவே இருந்த பல திட்டங்களை ஒன்றிணைத்து உணவைச் சட்டபூர்வமான உரிமையாக உருவாக்கியது. மதிய உணவுத் திட்டம், ரேஷன் பொருட்கள் விநியோகத் திட்டம் உள்ளிட்டவை இதில் அடங்கும். ஏற்கனவே கோடிக்கணக்கான மக்கள் இந்த திட்டங்கள் மூலம் பயன்பெற்று வந்தாலும் இதைச் சலுகையாக அல்லாமல் உரிமையாக மாற்றியது சட்டம்.

இருப்பினும் மக்கள் பசியால் இறக்கின்றனர். 2020இல் மோடி அரசு திடீரெனப் பொது முடக்கத்தை அறிவித்தபோது, லட்சக்கணக்கான மக்கள் வேலையில்லாமல், உணவு இல்லாமல் தவித்தனர். ஆனால், பசி பட்டினி என்பது கோவிட் பாதிப்புக்கும் முன் இருக்கும் பிரச்சினை. உதாரணத்துக்கு ஜார்க்கண்டில் 2017முதல் 2020 வரை 30 பேர் பட்டினியால் இறந்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் பட்டினி தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் செயற்பாட்டாளர்கள் இருக்கின்றனர். பல மாநிலங்களில் இல்லை.

பட்டினிச் சாவு என்னும் பெரும் பிரச்சினை

உண்மை என்னவென்றால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் பஞ்சம், பெருந்தொற்று இல்லாமலேயே மக்கள் பட்டியால் இறக்கின்றனர். நாம் நினைப்பதைவிட இந்தப் பிரச்சினை மோசமாகலாம் என்பதைப் பொது முடக்கம் உணர்த்தியுள்ளது. அரசே இதற்கு மூலகாரணம்.

ஆனால், அரசு பொறுப்பைத் தட்டிக்கழிப்பதும் பழைய உத்திதான். இந்தப் போக்கு கோவிட்டுக்கு முன்பே இருந்தது. ஆங்கிலேயர் காலத்திலிருந்து உருவானது. 1876இல் சென்னை மாகாணத்தில் பெரும் பஞ்சம் வந்து லட்சக்கணக்கானோர் பட்டினியால் இறந்ததாக வரலாற்றாசிரியர் மைக் டேவிஸ் குறிப்பிடுகிறார். ஆனால், இந்த நெருக்கடியைத் தீர்க்க ஆங்கிலேயே அரசு பெரிதாக எதுவும் செய்யவில்லை.

பின்னர் பிரச்சினை கடுமையானபோது இதற்குத் தீர்வாக அமல் செய்யப்பட்ட உணவுப் பொருள் விநியோகத் திட்டம் மிக மோசமாகச் செயல்படுத்தப்பட்டது. பஞ்சத்துக்கு நடுவே ஆங்கிலேய அரசு உப்பு வரியையும் விதித்தது. அதன் பிறகு, பட்டினி கமிஷன், பட்டினிக் குழு என நிலைமை கொஞ்சம் மேம்பட்டது. 1908 முதல் 1943 வரை போக்குவரத்து, வர்த்தக விவசாயம் அறிமுகமானபோது நிலைமை கொஞ்சம் சீரானது. ஆனால் அதற்குள் பாதிப்பு தீவிரமாகியிருந்தது.

இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்தில் ரேஷன் முறை கொண்டுவரப்பட்டது. இந்தியாவிலும் இதேபோன்ற முறை கொண்டுவரப்பட்டது. நம்முடைய பொது விநியோக முறைக்கு இது முன்னோடி எனலாம். ஆனால் உணவு ஒதுக்கீடு சொற்பமாக இருந்தது. இதனிடையே போரால் உணவு இறக்குமதி பாதிக்கப்பட்டு வங்காளத்தில் பெரும் பஞ்சம் உண்டானது.

சுதந்திரத்துக்குப் பிந்தைய நிலவரம்

சுதந்திரத்துக்குப் பிறகு உணவுப் பொருட்கள் விலை மீதான கட்டுப்பாடு ஊழலுக்கு வழிவகுக்கும் என மகாத்மா காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். இந்திய அரசு உணவு கொள்முதல் வழிகளையும் பரிசீலனை செய்தது. இதற்காகக் குழுக்கள் அமைக்கப்பட்டன. 1948இல் உணவுப் பொருட்கள் மீது மீண்டும் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. அடுத்த வந்த ஆண்டுகளில் மேலும் பல கொள்கைக் குளறுபடிகள் உண்டாயின.1965இல், விவசாய விலைகள் கமிஷன் அமைக்கப்பட்டு, விவசாயச் செலவுகள், விலைகள் கமிஷனாக அது பின்னர் மாறியது.

அதே நேரத்தில் அரசு இந்திய உணவு கார்ப்பரேஷனையும் உண்டாக்கியது. உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்து பொது விநியோக முறையில் அளிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. பசுமைப் புரட்சி நாட்டில் உணவுப் பொருட்கள் விநியோகத்தைச் சீராக்க உதவினாலும், 1972இல் மாபெரும் வறட்சி தாக்கியது. 1991வரை பல இந்தியர்கள் பட்டினியைத் தவிர்க்க முடிந்த நிலையில் தாராளமயமாக்கல் அமலுக்கு வந்தது.

பொருளாதாரச் சீர்திருத்தம் காரணமாக இந்தியா பல மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. பொது விநியோகத்துக்குச் செலவிடப்படும் தொகை மிக அதிகம் என உலக வங்கி நெருக்கடி அளித்தது. மானியம் சுமை எனக் கூறப்பட்டது. மத்திய அரசு இதில் மாற்றங்களைக் கொண்டுவரத் தொடங்கியது. மாநிலங்கள் பொது விநியோகத் திட்டத்தைக் கட்டுப்படுத்தின. எல்லா மாநிலங்களிலும் இத்திட்டம் ஒரே விதமான பலன் அளிக்கவில்லை. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் சீராக இருந்தது. 1997இல் தமிழகத்தில் எதிர்ப்பு காரணமாக இலக்கு சார்ந்த பொது விநியோக முறையைக் கைவிட வேண்டியிருந்தது. 1997 முதல் 2013 வரை, மாநில அரசுகள் விரிவான திட்டத்தை வழங்கவில்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் மட்டுமே மானிய உணவுப் பொருட்களைப் பெற்றனர்.

உணவுப் பாதுகாப்புச் சட்டம்

இந்தப் பின்னணியில்தான் பெரும் போராட்டத்துக்குப் பின் உணவுப் பாதுகாப்புச் சட்டம் வந்தது. இந்தச் சட்டம் வந்து எட்டு ஆண்டுகள் ஆன நிலையிலும் அனைத்து மக்களுக்குமான தீர்வை வழங்க முடியாமல் இருக்கிறது. உதவி பெறத் தகுதி வாய்ந்த பலரும் திட்டத்துக்கு வெளியே இருக்கின்றனர். பல இடங்களில் ஆதார் குளறுபடிகள் நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளன.

அண்மையில் மத்திய அரசு ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு இலவச அரசி திட்டத்தை அறிவித்தது. ஆனால் கார்டுதாரர்கள் நிரந்தர முகவரி இல்லை என்றால் அல்லது வேறு காரணங்களினால் உறுதிப்படுத்த முடியவில்லையெனில் இதனால் பயன் கிடையாது. இந்திய அரசு எப்போதுமே முரண்பட்டு இருப்பதற்கும், கள யதார்த்தத்திலிருந்து அந்நியப்பட்டு நிற்பதற்குமான அடையாளம் இது. இதன் காரணமாகவே பட்டினிப் பிரச்சினை தொடர்கிறது. ஆனால் அரசோ இதைத் தீர்க்க முடியாத பெரும் பிரச்சினை என நம்ப வைத்துக்கொண்டிருக்கிறது.

கட்டுரையாளர் மிருதுளா சாரி, சுயேச்சை பத்திரிகையாளர்

நன்றி: fiftytwo.in

தமிழில்: சைபர் சிம்மன்

திருவாரூர் வீதிக்கு கலைஞர் பெயர்: பாஜகவுக்கு பணிந்ததா திமுக? ...

8 நிமிட வாசிப்பு

திருவாரூர் வீதிக்கு கலைஞர் பெயர்: பாஜகவுக்கு பணிந்ததா திமுக?

குவாரி கொடூரம்: பின்னணி முகம்!

5 நிமிட வாசிப்பு

குவாரி கொடூரம்: பின்னணி முகம்!

சிறப்புக் கட்டுரை: இலங்கை: பெரும்பான்மைவாதம் என்ற தேசத்தின் ...

19 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: இலங்கை: பெரும்பான்மைவாதம் என்ற தேசத்தின் புதைகுழி!

செவ்வாய் 1 பிப் 2022