மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 பிப் 2022

டிஜிட்டல் திண்ணை: பாஜக கூட்டணி தொடருமா?: எடப்பாடி சொன்ன காரணம்!

டிஜிட்டல் திண்ணை: பாஜக கூட்டணி தொடருமா?:  எடப்பாடி சொன்ன காரணம்!

வைஃபை ஆன் செய்ததும் வாட்ஸ்அப் ஆன் லைனில் வந்தது.

"நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்துவந்த பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறது. ஆனாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவுடன் தொடர்வதாக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று ஜனவரி 31 பிற்பகல் கமலாலயத்தில் பேட்டி அளித்தார்.

ஜனவரி 30ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பாஜக நிர்வாகிகள் மீண்டும் வருவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அன்று அண்ணாமலை சென்னையில் இல்லை. அரியலூர் சென்று விட்டார்.

இனி காத்திருக்க வேண்டாம் என முடிவு செய்த எடப்பாடி பழனிசாமி 30 ஆம் தேதி இரவு அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

பாஜகவுக்கு இனியும் காத்திருக்க முடியாது என்று சொல்லும் விதமாகத்தான் முதல் நாள் இரவே வேட்பாளர் பட்டியலை எடப்பாடி வெளியிட்டார். மறுநாள் ஜனவரி 31ஆம் தேதி தை அமாவாசை என்பதால் சேலத்துக்கு புறப்பட தயாரானார் எடப்பாடி. அன்று இரவாவது பாஜக குழுவினர் வருவார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால் அண்ணாமலை வரும் வரை அமாவாசை காத்திருக்காது என்பதால் மறுநாள் காலை 6 மணிக்கு சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டு 9 மணிக்கு சேலத்துக்கு சென்றுவிட்டார் எடப்பாடி.

இந்த நிலையில்தான் மீண்டும் கமலாலயத்தில் நீண்ட நேர ஆலோசனைகளை நடத்தி ஜனவரி 31 பிற்பகல் ஒரு மணிக்கு மேல் தனித்துப் போட்டியிடும் முடிவை அறிவித்தார் அண்ணாமலை.

அப்போதும் அதிமுகவுடன் தேசிய அளவில் கூட்டணி தொடர்கிறது என தெரிவித்தார். இதற்கு என்ன பதில் சொல்வது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு எடப்பாடி, 'கட்சி முடிவு செய்யும் என்று சொல்லி விடுங்கள்' எனக் கூற அதன்படியே பதிலளித்தார் ஜெயக்குமார்.

பிறகு நேற்று இரவு 8 மணி அளவில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, 'உள்ளாட்சி தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தங்களது நிர்வாகிகள் தொண்டர்கள் அதிக அளவு போட்டியிட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். இந்த வகையில்தான் பாஜக தனித்து போட்டியிடுகிறது. அவர்கள் எங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டார்கள் என்று சொல்லாதீர்கள்'என்று கூறினார்.

இதையடுத்து சேலத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் கேபி முனுசாமி, சிவி சண்முகம் உள்ளிட்ட சிலர் தொடர்பு கொண்டு...'என்ன இப்படி சொல்லிட்டீங்க.... இதுதான் நல்ல சமயம். இப்போதிலிருந்தே பிஜேபியுடன் நாம் நம்மை தூரத்தில் வைத்துக் கொள்வது நல்லது. வரும் எம்பி தேர்தலுக்கும் இதேபோல பிஜேபி அல்லாத பிற கட்சிகளுடன் அதிமுக கூட்டணி வைப்பது நல்லது' என்று சொல்லி இருக்கிறார்கள்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி, 'அவங்க கேட்ட இடங்கள் ரொம்ப அதிகமா இருந்ததால மீண்டும் பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டோம். அவங்க வரலை. நம்ம முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகாவது அவங்க வருவாங்கனு நினைச்சேன். அப்பவும் வரலை. இந்த கூட்டணியை நாம முறிக்கலை. அவங்கதான் முதல்ல அறிவிச்சாங்க. என்ன இருந்தாலும் பிஜேபி இன்னும் ரெண்டு வருஷத்துக்கு மத்திய ஆளுங்கட்சி.

அதனால நாம எந்த முடிவும் இப்போது எடுக்க வேண்டாம்.

எனக்கு தெரிந்து அவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் மிக சொற்பமான வாக்குகளைத் தான் வாங்குவார்கள். ஒருவேளை மீண்டும் அவர்களுடன் கூட்டணி வைத்தால் கூட அந்த வாக்குகளின் அடிப்படையில் எம்பி தேர்தலில் அவர்களின் சீட்டுகளை குறைப்பதற்கும் நமக்கு ஏதுவாக இருக்கும்.

எனவே இப்போதைக்கு கூட்டணி முறிவு அப்படி இப்படி என்று நாம் எதுவும் பேச வேண்டாம். இப்போது ஒரேயடியாக நாம் பாஜகவை பகைத்துக்கொண்டால், அவர்கள் சசிகலாவை கையில் எடுக்கவும் தயங்க மாட்டார்கள். இப்போதைக்கு பொறுமையாகவே போவோம். உள்ளாட்சித் தேர்தல் களத்தில் பாஜகவை கடுமையாக விமர்சிக்க வேண்டாம். நம் இலக்கு திமுக அட்டாக்தான். உத்தர பிரதேச தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கின்றன என்று பார்த்துவிட்டு நாம் நமது அடுத்த கட்ட அணுகுமுறையை வகுத்துக் கொள்ளலாம்' என்று கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் சென்றது வாட்ஸ்அப்.

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

செவ்வாய் 1 பிப் 2022