மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 பிப் 2022

செந்தில் பாலாஜி- ஜோதிமணி: எம்பி தேர்தல் வரை தொடரும் மோதல்!

செந்தில் பாலாஜி- ஜோதிமணி: எம்பி தேர்தல் வரை தொடரும் மோதல்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கரூர் மாவட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான செந்தில் பாலாஜி நேற்று ஜனவரி 31 மாவட்ட திமுக அலுவலகத்தில் கூட்டணிக் கட்சியினரை சந்தித்து ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு திட்டமிடப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு வந்த கரூர் மாவட்ட காங்கிரஸ் தேர்தல் பேச்சுவார்த்தைக் குழு தலைவரும் கரூர் எம்பியுமான ஜோதிமணி திமுக அலுவலகத்தில் தான் அவமானப்படுத்தப்பட்ட தாக குற்றம் சாட்டி அங்கிருந்து வெளியேறினார்.

இதுபற்றி கரூர் அரசியல் வட்டாரத்தில் தீர விசாரித்தோம்.

கரூர் மாவட்ட திமுக செயலாளரான அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை மாவட்டத்திற்கும் பொறுப்பாளராக இருக்கிறார்.

ஆனால் கரூரை விட அவருக்கு கோவை மாவட்டத்தில் தான் கடுமையான டென்ஷன். அங்கே அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வேலுமணியை எதிர்கொண்டு உள்ளாட்சித் தேர்தலில் திமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

இதனால் கரூருக்கும் கோவைக்கும் என அலைந்தபடியே இருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த வாரம் கரூர் மாவட்ட திமுக கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை கூட்டி இருந்தார் செந்தில் பாலாஜி. அதில் பங்கீடு குறித்து உத்தேசமாக சில முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதன்பின் கரூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான கூட்டணி பங்கீடு பற்றிய விஷயங்களை தனது ஆதரவாளரும் திமுக சட்டத்துறை துணை செயலாளருமான வழக்கறிஞர் மணிராஜிடம் ஒப்படைத்தார் செந்தில் பாலாஜி. மணிராஜ் கரூர் நகர மன்றத் தலைவராக இருந்தவர். மதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்.

கடந்த சில நாட்களாகவே மணிராஜ் தான் திமுகவின் கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகளிடம் செந்தில் பாலாஜி சார்பாக பேசி வந்தார். கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளிடம் போனில் பேசிய செந்தில் பாலாஜி, "மணிராஜிடம் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள். அதில் உங்களுக்கு ஏதும் பிரச்சனை என்றால் நான் வந்து பேசி முடித்து கையெழுத்து போட்டு விடலாம்" என்று தெரிவித்திருந்தார்.

கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் அதன்படியே மணிராஜ் உடன் பேசி வந்தனர்.

இந்த வகையில் மணிராஜ் காங்கிரஸ் எம்பியான ஜோதிமணியிடம் பேசியிருக்கிறார். ஜோதிமணி இந்தமுறை கரூரில் காங்கிரசுக்கு அதிக இடங்களை கேட்டுப் பெறுவதில் உறுதியாக இருந்தார்.

அதனால், "இடப்பங்கீடு பற்றி நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்? நான் கரூர் மாவட்ட காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழு தலைவர். திமுக மாவட்டச் செயலாளரான அமைச்சர் செந்தில்பாலாஜி தான் என்னிடம் பேச வேண்டும். நீங்கள் என்னிடம் இது பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறிவிட்டார்.

இதை மணிராஜ் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தொடர்பு கொண்டு கூறி, 'மற்ற எல்லாரும் சரிப்பட்டு வர்றாங்க. இந்த அம்மா மட்டும் பேசவே மறுக்கிறாங்க. உங்களுடன் தான் பேசுவாங்களாம்' என்று தெரிவித்திருக்கிறார். இதனால் ஏற்கனவே ஜோதிமணியோடு மனக்கசப்பில் இருந்த செந்தில் பாலாஜி டென்ஷனாகி விட்டார்.

இந்தப் பின்னணியில்தான் ஜனவரி 31ஆம் தேதி கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் கூட்டணிக் கட்சியினரை சந்தித்து இடத்தை முடிவு செய்ய வந்திருந்தார் செந்தில் பாலாஜி.

இந்த கூட்டத்திற்கு 10:30 மணி வாக்கில் கரூர் மாவட்ட காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழு தலைவரான ஜோதிமணி எம்பி மாவட்ட தலைவர் சின்னசாமியோடு சென்றார்.

மற்ற கூட்டணி கட்சிகள் ஏற்கனவே மணிராஜோடு பேசி முடித்த நிலையில் கையெழுத்து இடுவதற்கு தயாராக இருந்தனர்.

காங்கிரஸ் சார்பாக சென்ற ஜோதிமணி ஏற்கனவே தங்கள் கட்சி சார்பாக கொடுக்கப்பட்டிருந்த வார்டுகளின் பட்டியலை செந்தில் பாலாஜியிடம் மீண்டும் கொடுத்திருக்கிறார்.

கரூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 இடங்களில் 7 இடங்களை ஏற்கனவே காங்கிரஸ் கேட்டிருந்தது. திமுக அதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லி விட்ட நிலையில் ஐந்து என்று இறங்கி வந்தார் ஜோதிமணி. ஆனால் செந்தில் பாலாஜி மற்ற மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கையையும் அங்கு காங்கிரஸ் கட்சி பெற்ற வார்டுகளின் எண்ணிக்கையும் வைத்துப்பார்த்தால் இங்கே 48 வார்டுகளில் 2 வார்டுகளை ஒதுக்கலாம் என்று கூறியிருக்கிறார். இதற்கு ஜோதிமணி சம்மதிக்கவில்லை.

அடுத்து அரவக்குறிச்சி பேரூராட்சி, பள்ளப்பட்டி நகராட்சி உள்ளிட்ட ஒவ்வொரு அமைப்பிலும் ஜோதிமணி கேட்ட எண்ணிக்கையை விட குறைவாகவே தரமுடியும் என்று கூறினார் செந்தில் பாலாஜி.

குறிப்பாக அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதிகளில் ஜோதிமணி தனது ஆதரவாளர்களை நிறுத்துவதற்காக இடங்களைக் கேட்கிறார் என்று செந்தில் பாலாஜிக்கு திமுக தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே ஜோதிமணி திமுகவோடு முரண்பாடாக செயல்பட்டு வருவதால் அவரது ஆதரவாளர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சீட் கொடுக்க கூடாது என்று மாவட்ட திமுக ஒரு முடிவு எடுத்து வைத்திருந்தது.

இந்த அடிப்படையில்தான் ஜோதிமணி கேட்ட எண்ணிக்கையை குறைத்ததோடு, பெண்கள் வார்டு, ரிசர்வ் வார்டு ஆகியவற்றை காங்கிரஸுக்கு தள்ளியது திமுக.

இதைப் புரிந்துகொண்ட ஜோதிமணி, 'இந்த ஒப்பந்தத்தில் நாங்க கையெழுத்து போட முடியாது'என்று தனக்கே உரிய தொனியில் கூறியிருக்கிறார்.

அப்போது அங்கிருந்த திமுக நிர்வாகிகள், 'நீங்க கேக்குற இடத்தில எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு ஆளே இல்லை. யாருக்காக கேக்கறீங்கன்னு தெரியும்' என்று சத்தமாக கூறியிருக்கிறார்கள்.

அவர்களுக்கு ஜோதிமணியும் ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

இதற்கு உடனடியாக கோபமாக பதிலளித்த செந்தில்பாலாஜி, 'கையெழுத்து போட முடியலேன்னா வெளியே போங்க' என்று சொன்னதாக தகவல்கள் பரவின.

இதன் பிறகுதான் கோபமாக வெளியே வந்த ஜோதிமணி, "நான் என்ன இங்க விருந்து சாப்பிடவா வந்தேன். இதான் நீங்க கூட்டணி கட்சிக்கு கொடுக்கும் மரியாதையா?" என்று சத்தம் போட்டார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "காங்கிரஸ் கட்சியை தவிர திமுகவுடன் அனைத்து கூட்டணி கட்சிகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். காங்கிரஸ் கட்சி கேட்ட இடங்களும் நாங்கள் தருவதாக சொன்ன இடங்களும் முரண்பாடாக இருந்தன. அவர்கள் பொது வார்டுகளை அதிகமாக கேட்டார்கள். அதனால் எங்கள் கட்சியினர் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அவர்கள் கேட்டதில் 50 சதவீதம் அப்படியே கொடுத்து விடுகிறோம். மீதி நாங்கள் கொடுப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினோம். அவர்கள் ஏற்க மறுத்தார்கள்.

இங்கு ஏற்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில் பாதிப்பு ஏற்படுத்தி விடக்கூடாது என்பதால் உள்ளே நடந்தது பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை. மேலும் அவர்கள் எப்போது வந்தாலும் பேச தயாராக இருக்கிறோம்" என்று கூறினார் செந்தில் பாலாஜி.

கரூர் மாவட்டத்தில் காங்கிரசுக்கான இடங்கள் எத்தனை என்னென்ன என்பது பற்றி திமுக தலைமையிடம் செந்தில் பாலாஜி தெரிவித்துவிட்டார். அவர்கள் காங்கிரஸ் தலைமையுடன் பேசி அதை எழுதி ஒப்பந்தம் செய்வார்கள் என்று தெரிகிறது.

கட்சி ரீதியாக இப்படி என்றால் கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜியும் ஜோதிமணியும் நிரந்தர எதிரெதிர் துருவங்கள் ஆகிவிட்டனர். உள்ளாட்சித் தேர்தலில் ஜோதிமணியின் ஆதரவாளர்களை நிறுத்த விடக்கூடாது என்பது மட்டுமல்ல... எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கரூர் எம்பி தொகுதியை திமுகவுக்கு கேட்டு பெற்று தனது ஆதரவாளரை எம்பி ஆக்க வேண்டும் என்பதிலும் இப்போதே முடிவெடுத்து செயல்பட தொடங்கிவிட்டார் செந்தில் பாலாஜி.

ஆரா

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

செவ்வாய் 1 பிப் 2022