மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 பிப் 2022

மாணவி வழக்கு: தீர்ப்பில் சொல்லப்பட்டது என்ன?

மாணவி வழக்கு: தீர்ப்பில் சொல்லப்பட்டது என்ன?

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக மாறி கொண்டிருக்கையில், இதுதொடர்பான சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பு விவாதத்துக்குள்ளாகியுள்ளது.

மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி அவரது தந்தை முருகானந்தம் தொடர்ந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கை நேற்று அவசர வழக்காக எடுத்துக் கொண்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாணவி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு தற்போது பேசு பொருளாகிவிட்டது. இதுதொடர்பாக சமூகவலைதளவாசிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.

”உயிரிழந்த மாணவி விடுதியில் இருந்தபோது பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டார். நீதித்துறை மாஜிஸ்திரேட் அவரது மரண அறிக்கையை பதிவு செய்தார். அவரது போலீஸ் வாக்குமூலத்திலும், நீதித்துறை மாஜிஸ்திரேட் முன் அளித்த வாக்குமூலத்திலும், சந்தேகத்திற்கு இடமில்லாமல், விடுதி வார்டன் தன்னை கல்வி சாரா வேலைகளில் ஈடுபடுத்தியதாகவும், அதன் விளைவாக பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

பின்னர் ஒரு கட்டத்தில், மாணவி பேசும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது. இது குறித்து காவல் கண்காணிப்பாளரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டபோது, முதற்கட்ட விசாரணையில் மத மாற்றக் காரணம் இல்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனால் தமிழக காவல்துறையின் விசாரணையில் நம்பிக்கையை இழந்த மனுதாரர் நீதிமன்றத்தை நாடினார். ஆனால், அரசு தரப்பும், பள்ளி தரப்பும் மதமாற்ற குற்றச்சாட்டை மறுக்கிறது.

மாணவி மரணத்திற்குப் பின் நீதி வழங்க வேண்டிய கடமை இந்த நீதிமன்றத்திற்கு உள்ளது. மேற்கூறிய சூழ்நிலைகளை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது விசாரணை சரியான பாதையில் நடக்கவில்லை என்ற தோற்றத்தை உருவாக்குகிறது” என்று கூறிய நீதிபதி,

“இந்த வழக்கில் மின்சார வயரை தொட்டதுபோல் காவல்துறை கண்காணிப்பாளர் நடந்து கொண்டது ஏன் என்பது புரியவில்லை” என்று கூறினார்.

பின்பு, வேதாகமத்தில் உள்ள ,”ஆகையால் நீங்கள் போய் எல்லா தேசத்தாரையும், சீடர்களாக்குங்கள், பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்தானம் கொடுங்கள். நான் உங்களுக்கு கட்டளையிட்ட அனைத்தையும் அவர்களை பின்பற்ற செய்யுங்கள்”. “உலகமெங்கும் சென்று அனைத்து ஜீவராசிகளுக்கும் நற்செய்தியை பிரசங்கம் செய்யுங்கள், விசுவாசித்து, ஞானஸ்தானம் பெற்றவர் இரட்சிக்கப்படுவார்கள், விசுவாசிக்காதவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” ஆகிய வசனங்களை சுட்டிக்காட்டி, இது கிறிஸ்தவ இறையலில் மிகப்பெரிய பணி என்று கூறினார்.

மேலும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தனது தீர்ப்பில் கே.பாலச்சந்தரின் கல்யாண அகதிகள் மற்றும் நவாசுதீன் சித்திக்கின் Serious Men ஆகிய படங்களை சுட்டிக் காட்டியுள்ளார்.

நவாசுதீன் சித்திக் நடித்திருக்கும் ‘Serious Men’ படம் மும்பையில் செட்டிலான தமிழ் தலித்தான அய்யன் மணி என்பவரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியது. அந்தப் படத்தில் அய்யன் மணி மற்றும் கிறிஸ்தவப் பள்ளியின் தலைமையாசிரியர் இடையில் நடக்கும் உரையாடலை மேற்கோள்காட்டினார்.

அய்யன் மணி: என்னுடைய மகன் ஆதியின் IQ 169. உங்கள் பாடத்திட்டத்தை விட மேம்பட்டவர்.

தலைமையாசிரியர்: ஆமாம் மணி. ஆதிக்கு இயேசு சிறந்த அறிவாற்றலை அளித்திருக்கிறார். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்றார்.

அய்யன் மணியின் மனைவி: அவன் மீனாட்சியம்மனின் அருள். நான் கர்ப்பிணியாக இருந்தபோது வெறும் காலில் விநாயகர் கோயிலுக்கு நடந்து போயிருக்கிறேன்.

தலைமையாசிரியர்: இயேசு மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா மணி?.

அய்யன் மணி: I Love Christ

தலைமையாசிரியர்: Christ Loves you too மணி. நீங்களும் ஆதியும் முறையாக அவரை ஏற்றுக்கொண்டால், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருக்கும் கிறிஸ்தவர்களுக்கு உதவும் பள்ளியின் கொள்கையின்படி ஆதிக்கு சிறப்பு உதவித் தொகை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அவனை நான் நேரடியாக 9ஆம் வகுப்பில் சேர்க்க முடியும். கட்டாயமில்லை. நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. நீங்கள் வேண்டுமானால், உங்கள் நண்பர் சதீஷ், சயாலின் அப்பாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இயேசுவை அவரது குடும்பம் ஏற்றுக்கொண்ட பிறகு சயாலிக்கு எவ்வளவு உதவிகள் கிடைத்திருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளலாம். நான் இதை வெளிப்படையாகச் சொல்வதற்காக என்னை நீங்கள் தவறாக நினைக்காவிட்டால், ஒரு விஷயம் சொல்கிறேன். உங்கள் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன் மணி.

இதை கேட்ட அய்யன் மணி அமைதியாக இருக்கிறார்.

மீண்டும் தலைமையாசிரியர், இலவசமாக புத்தகங்களை அளிப்பதோடு, இலவசமாக போக்குவரத்து வசதியும் உங்களுக்கு அளிப்போம் “ என்று கூறுகிறார்.

இந்த உரையாடலைத் தொடர்ந்து இயக்குநர் பாலசந்தரின் கல்யாண அகதிகள் படத்தில் வரும் காட்சிகளை கூறினார்.

கல்யாண அகதிகள் படத்தில் அம்முலு என்ற இந்து பெண் ராபர்ட் என்ற கிறிஸ்தவ இளைஞரை காதலிப்பார். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடிவு செய்யும் போது ராபர்ட் வீட்டில் அந்த பெண்ணை கிறிஸ்தவ மதத்துக்கு மாற சொல்வார்கள். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிப்பார். அதற்கு ராபர்ட், உன்னிடம் நாங்கள் வரதட்சணை கேட்கவில்லை. மதம் மட்டும்தானே மாற சொல்கிறோம் என்பார். அதற்கு அந்த பெண் இதுவும் ஒரு வகையான வரதட்சணைதான் என்று கூறி மதம் மாற மறுத்து, திருமணத்தையே வேண்டாம்” என்று கூறிவிடுவார்.

இந்த படங்களை மேற்கொள் காட்டிய நீதிபதி, இம்மாதிரியான படங்கள் எப்போது மிகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். ஆனால் சில சமயங்களில் அந்த படங்களும் கூட உண்மையை வெளிப்படுத்துகின்றன” என்று கூறினார்.

குற்றச்சாட்டிற்குள்ளான பள்ளி அமைந்துள்ள இடத்தின் பெயர் மைக்கேல்பட்டி என்பதை சுட்டிக் காட்டியுள்ள நீதிபதி, அதுஅந்த பகுதியின் உண்மையான பெயராக இருக்க முடியாது என்றும் கூறினார். அதனால் மதமாற்ற முயற்சி நடைபெற்றது என்ற குற்றச்சாட்டு தவறு என்று முழுவதுமாக மறுக்க முடியாது.

மரணமடைந்த மாணவிக்கு நீதி வழங்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என்பதை மீண்டும் வலியுறுத்திய நீதிபதி, மாநில காவல்துறையின் விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது அரிதான மற்றும் விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே அனுமதிக்கப்படும். தற்போது இந்த வழக்கில் உண்மை நிலையை அறிவதற்காக வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது.

மாணவியை தற்கொலைக்கு தூண்டியது யார் என்பது கண்டிப்பாக தெரிய வேண்டும். பள்ளிக் கல்வித் துறை அமைச்சரே இந்த விவகாரத்தில் மதமாற்றம் இல்லை என்ற நிலைபாட்டை எடுத்துள்ளாதால், இனி மாநில காவல்துறை விசாரணையை தொடர்வது சரியாக இருக்காது என்று கூறிய நீதிபதி, மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தீர்ப்பு அளித்தார்.

-வினிதா

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

செவ்வாய் 1 பிப் 2022