சிறப்புக் கட்டுரை: பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு டிரோஜன் குதிரைகள்

politics

ராஜன் குறை

கிரேக்க புராண கற்பனைகளில் உதித்தது டிரோஜன் குதிரை. கடற்கரை நகரான டிராய் நகரை பத்தாண்டுகளாக முற்றுகையிட்ட கிரேக்க படைகளால் அந்தக் கோட்டையினுள் புக முடியவில்லை. அதனால் ஒரு தந்திரம் செய்கிறார்கள். ஒரு பிரமாண்டமான மரக்குதிரை ஒன்றை தயார் செய்கிறார்கள். அதன் வயிற்றில் முப்பது, நாற்பது வீரர்கள் ஒளிந்து கொள்கிறார்கள். மற்றவர்களெல்லாம் கப்பல்களில் ஏறி நாட்டுக்குத் திரும்புவது போல செல்கிறார்கள். கடற்கரையில் நிற்கும் குதிரை டிராய் நகருக்கு காணிக்கை என்று சொல்கிறது அவர்கள் விட்டுச்செல்லும் செய்தி. ஒரு சிலர் சந்தேகப்பட்டாலும், டிராய் நகரத்தவர்கள் குதிரையை நகருக்குள், அதாவது கோட்டைக்குள் கொண்டு செல்கிறார்கள். நள்ளிரவில் குதிரையிலிருந்து வெளியே வரும் வீரர்கள் கோட்டை கதவுகளைத் திறந்துவிட இரவோடு இரவாகத் திரும்பி வந்த கப்பல்களிலிருந்து கிரேக்க வீரர்களும் நகருக்குள் புகுந்து டிராய் நகரை வீழ்த்துகிறார்கள். இந்த நிகழ்விலிருந்து தந்திரமான அரசியல் செயல்பாடுகளை டிரோஜன் குதிரைகள் என்று வர்ணிப்பது அரசியலில் பழக்கம். எவ்வளவு முயற்சி செய்தாலும் தமிழ்நாட்டு அரசியலில் கால் பதிக்க முடியாத பாரதீய ஜனதா கட்சி இப்போது டிரோஜன் குதிரைகளை தயாரிக்கிறது. அவை என்னவென்று பார்ப்போம்.

**அ.இ.அ.தி.மு.க**

ஜெயலலிதா தலைமையேற்ற பிறகே அ.இ.அ.தி.மு.க பாரதீய ஜனதா கட்சி சாயல்களைப் பெறத் தொடங்கிய கட்சி என்பது முக்கியமானது. கர சேவைக்கு செங்கல் அனுப்பியது, மதமாற்ற தடைச் சட்டம், கிராமக் கோயில்களில் பலியிடுவதைத் தடை செய்யும் பார்ப்பனீய சட்டம் என தன் சொந்தப் பொறுப்பிலேயே இந்துத்துவ சாயல்கொண்ட செயல்பாடுகளை மேற்கொண்டவர் ஜெயலலிதா. ஆனால் தமிழ்நாட்டு அரசியலில் திராவிட சித்தாந்தம் பெற்றிருக்கும் வலுவான இடமும், திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய அவசியமும் தொடர்ந்து சமூக நீதி, மாநில உரிமை, மக்கள் நலத் திட்டங்கள் ஆகிய அம்சங்களில் அவரை முற்றிலும் பாதை மாறிச் செல்லாமல் வைத்திருந்தது எனலாம். ஆனால் தன் எதேச்சதிகார போக்கினால் இரண்டாயிரம் ஆண்டுக்குப் பிறகு திராவிட அரசியல் பின்னணி இல்லாத ஓ.பன்னீர்செல்வம் போன்ற புதிய இரண்டாம்நிலை தலைவர்களை உருவாக்கி அவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் கட்சியின் வரலாற்றுத் தொடர்பை பெரிதும் பலவீனப்படுத்தினார். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பயிற்சியெல்லாம் ஆட்சியினை பயன்படுத்தி எப்படி தங்கள் “செல்வாக்கை” வலுப்படுத்திக்கொள்வது என்பதுதான். அதற்கு நன்றிக்கடனாக பொது மேடைகளில் வரிசையாக அம்மாவின் காலில் விழுந்து தங்கள் விசுவாசத்தைக் காட்டிக் கொள்வார்கள்.

இந்தக் கொள்கையற்ற, அரசியல் ஆகிருதி அற்ற சுயநல அடிமை கூட்டத்தை ஜெயலலிதா மறைவுக்குப் பின் கையகப்படுத்தி அதன் மூலம் தமிழகத்தில் நுழைய திட்டமிட்டது பாரதீய ஜனதா கட்சி. அதனால் ஜெயலலிதாவின் வாரிசாக மக்கள் ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பிருந்த, கட்சி அணிகள் ஏற்றுக்கொண்ட சின்னம்மா சசிகலாவைப் பிரித்து சிறைக்கு அனுப்பி அந்த தொடர்ச்சியின் சாத்தியத்தையும் கத்தரித்தது. அ.இ.அ.தி.மு.க தலைவர்களையெல்லாம் வருமான வரி, அமலாக்கத் துறைகளைக் காட்டி தன் பிடிக்குள் கொண்டுவந்தது. ஆட்சியிலிருந்த போதே ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் அவர்களைத் தனித்து இயங்க முடியாமல் செய்து, தங்கள் நடவடிக்கைக்கெல்லாம் ஆதரவு தெரிவிப்பவர்களாக, முடியாதபோது எதிர்ப்பை முனகுபவர்களாக மாற்றிக் காட்டியது.

இப்போது ஆட்சியையும் இழந்த அ.இ.அ.தி.மு.க தலைவர்கள் பல்வேறு ஊழல் வழக்குகள், கொட நாடு கொலை வழக்கு என்று தி.மு.க அரசின் விசாரணை வளையத்தில் இருக்கிறார்கள். அதனுடன் மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை எல்லாம் சேர்ந்துகொண்டால் அவர்கள் பிரச்சினை கடுமையானதாகிவிடும். அதனால் அவர்களின் மீது தங்கள் பிடியினை இறுக்குகிறது பா.ஜ.க. தங்கள் மதவாத அரசியல் சூழ்ச்சிகளை ஆதரிக்காமல் இருந்தால், அதற்கே அ.இ.அ.தி.மு.க தலைவர்களைக் கோழைகள் என்று இழித்துரைக்கவும் துணிகிறது. தமிழகத்தில் மூன்று சதவிகித வாக்குகளைக் கூட பெற முடியாத அந்தக் கட்சி முப்பது சதவிகித வாக்குகளை சுலபமாகப் பெற்றுவந்த அ.இ.அ.தி.மு.க-வை தங்களுக்குக் கட்டுப்பட்ட கட்சி போல நடத்துவதும், தமிழ்நாட்டில் தி.மு.க-வுக்கு எதிர்க்கட்சி நாங்கள்தான் என்று கூறுவதுமாக அ.இ.அ.தி.மு.க வாக்கு வங்கியை ஈர்க்க முயல்கிறது. இப்படி சிக்கிக்கொண்ட நிலையை ஓ.பி.எஸ் வெளிப்படையாகவே “நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு” என்று சட்டமன்றத்திலேயே பாட்டுப் பாடி ஏற்றுக்கொண்டதையும் பார்த்தோம்.

அ.இ.அ.தி.மு.க-வின் ஆதரவு தளம் இரண்டு வகையானது. ஒன்று, தமிழ் அடையாளத்தை, திராவிட அரசியலை ஏற்றுக்கொண்டு அது சார்ந்த மக்கள் நல திட்டங்களை எம்.ஜி.ஆர் கலைஞரைவிட சிறப்பாகச் செயல்படுத்துவார் என்று நினைத்து அவர் பின்னால் திரண்டவர்கள். சத்துணவுத் திட்டம் போன்றவை அவர்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய உருவானவை. இன்னொரு வகையானது தலமட்டத்தில் தி.மு.க கட்சியினரை எதிர்த்து அரசியல் செய்பவர்கள், தி.மு.க எதிர்ப்பையே அரசியலாகக் கொண்டவர்கள். இந்த இரண்டு வகையிலும் பெரும்பாலோர் ஜெயலலிதா, கலைஞர் மறைவுக்குப் பின் பழைய அரசியல் சமன்பாடுகள் கலைந்துவிட்டதை புரிந்துகொண்டு தி.மு.க பின்னால் அணிதிரளக் கூடியவர்கள் உள்ளார்கள். ஆனால் சுயநல அரசியல் தவிர வேறெதுவும் அறியாதவர்கள் ”மோடி எங்கள் டாடி” என்று பாரதீய ஜனதாவிலேயே கலந்துவிடக் கூடியவர்கள். இந்த இரண்டாம் வகை கூட்டத்தை திராவிட அடையாள டிரோஜன் குதிரைகளாகப் பயன்படுத்தி தமிழகத்தில் வேர் விடத் துடிக்கிறது பாரதீய ஜனதா கட்சி.

**புதிய கல்விக் கொள்கை – நீட் தேர்வு **

எப்படியாவது தமிழகத்தில் இந்தி மொழி பயில்வதைப் பரவலாக்கிவிட்டால் தமிழுணர்வை மழுங்கச் செய்துவிடலாம் என்று நினைக்கிறது பாரதீய ஜனதா கட்சி. அதற்காக அது உருவாக்கும் புதிய கல்விக் கொள்கையும், அதன் மும்மொழி கல்வியும் முக்கியமான டிரோஜன் குதிரைகள். மூன்றாவது மொழி என்றுதானே சொல்கிறோம், இந்தி என்று சொல்கிறோமா என்று அவர்கள் தொலைக்காட்சிகளில் வாதிடுவதைப் பார்த்தால் சிரிப்பாக இருக்கும். தனியார் பள்ளியில் படிக்கும் வசதியான மாணவர்கள் மூன்று மொழி படிக்கும்போது, அரசுப் பள்ளி மாணவர்கள் அந்த வாய்ப்பில்லாமல் மூன்றாவது மொழி கல்லாது, வாழ்க்கையில் ஏற்றம் பெறாது வாடுகின்றனரே என்று நீலிக்கண்ணீர் வடிப்பது சிறந்த நகைச்சுவை காட்சியாக இருக்கும். இவர்களுக்கென்றே தமிழக அரசு சீனாவுடன் ஒப்பந்தம் போட்டு ஆயிரம் மாண்டரின் ஆசிரியர்களை தமிழகத்துக்கு வரவழைத்து மாண்டரின் மொழியை மூன்றாவது மொழியாக அரசுப் பள்ளிகளில் பயிற்றுவிக்கலாமா என்று வேடிக்கையாகத் தோன்றும்.

உண்மையில் பெரும்பாலான எளிய குடும்பத்து மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் அடிப்படை பாடங்களை கற்பதில் மிகுந்த சவாலை எதிர்கொள்கின்றனர். கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல் பாடங்களைப் பயில்வதில் அவர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டி உள்ளது. அந்த நிலையில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளை பயில்வதே கணிசமான உழைப்பைக் கோருகிறது. தமிழ் தாய்மொழி; ஆங்கிலம் உலகளாவிய தொடர்பு மொழி. இவ்விரண்டை தவிர மூன்றாவது மொழி பயில்வது என்பது அவர்களுக்கு முற்றிலும் தேவையற்ற ஒரு சுமையாகும். அவர்களில் பெரும்பாலோருக்கு அந்த மொழியைப் பயன்படுத்தும் வாய்ப்பு அமைவது கடினம். அப்படி பிற்காலத்தில் புலம்பெயர்ந்து வேலை செய்பவர்கள் தாங்கள் செல்லும் ஊரின் மொழியை சுலபத்தில் தேவைக்கு ஏற்ற அளவு பழகிக்கொள்வதை கண்கூடாகப் பார்க்கிறோம். வங்காளத்துக்குச் சென்றால் வங்காள மொழி பயின்றுகொள்கிறார்கள். பஞ்சாபுக்குச் சென்றால் பஞ்சாபி பயின்றுகொள்கிறார்கள். கேரளாவுக்குச் சென்றால், ஃபிரான்சுக்குச் சென்றால், துபாய்க்குச் சென்றால், பிரேசிலுக்குச் சென்றால் செல்லும் நாட்டில் எந்த மொழி தேவைப்படுகிறதோ அதைப் பயில்கிறார்கள். பள்ளியில் படிக்கும்போது தமிழ்நாட்டுக்கு வெளியே செல்வோமா, எங்கே சென்று பணிபுரிவோம் என்று அவர்களுக்குத் தெரியுமா என்ன? எனவே பள்ளிகளில் மூன்று மொழி பயிலச் சொல்வது என்பது நூறாண்டுகளாக வட நாட்டு இந்தி வெறியர்கள் கட்டி வரும் மிகப்பெரிய டிரோஜன் குதிரை. நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி முதலிய தியாகிகளை நினைவில் ஏந்தி எந்த விலை கொடுத்தும் நாம் நுழைய விடாமல் தடுக்க வேண்டிய டிரோஜன் குதிரை.

மாணவர்களின் பள்ளி இறுதித்தேர்வு மதிப்பெண்ணே மருத்துவக் கல்லூரி நுழைவுக்கான அடிப்படை என்றால் மாநில அரசு பாடத்திட்டத்துக்கும், இரு மொழி கல்விக்கும் முக்கியத்துவம் அதிகரிக்கும். சி.பி.எஸ்.இ என்னும் மத்திய அரசு கல்வித் திட்டத்துக்கு ஆதரவு குறையும். அதிக மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள் மூன்றாவது மொழி என்ற சுமையை வெறுப்பார்கள். அதனால்தான் மருத்துவக் கல்விக்கு நீட் என்ற நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு, அது சி.பி.எஸ்.இ பாடத்துக்கு அனுசரணையானதாக வடிவமைக்கப்படுகிறது. தமிழக அரசு பாடத்திட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறைப்பதும், அதன் மூலம் மும்மொழி கல்வியை நுழைப்பதும் நீட் தேர்வுடன் தொடர்புடையவை என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. அதனால்தான் ஆளுநர் தன்னை அரசாகவே எண்ணிக்கொண்டு ஒன்றிய அரசின் கருத்துகளை வெளியிடுகிறார். நீட் தேர்வு விலக்குக்கான சட்டமன்ற வரைவை முடக்குகிறார். டிரோஜன் குதிரைகள் அதிகரிக்கின்றன.

**மத மாற்றப் பூச்சாண்டி **

சென்ற வாரம் ஒரு தனியார் கிறிஸ்துவப் பள்ளியில் ஒரு கிராமப்புற மாணவி தன்னை விடுதி நிர்வாகியான ஆசிரியர் கொடுமைப்படுத்தியதாக கூறி மன அழுத்தத்தில் விஷம் அருந்தியதாகத் தெரிகிறது. உலகெங்கும் பள்ளிகளில் நடக்கும் சம்பவம்தான் இது. ஒரு சில ஆசிரியர்கள் அளவுக்கதிகமாகக் கண்டிப்பு காட்டுவதும், கருணையின்றி தண்டிப்பதும் இதனால் சில மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதும் இயல்புதான். எந்த மதமாக இருந்தாலும் இது நடக்கத்தான் செய்கிறது. கிறிஸ்துவ மாணவ, மாணவியரும் கடும் தண்டனைக்கு ஆளாவது உண்டு. இந்து நிறுவனங்களிலும் மாணவர்களும், இந்து ஆசிரியர்கள் விடுதி காவலர்களால் பாதிக்கப்படுவதும் உண்டு. கல்லூரியில் படிக்கும்போது ஓர் இந்து மத தர்ம அமைப்பினரின் இலவச விடுதியில் சில மாதங்கள் தங்கியபோது விடுதி காவலரின் நடத்தையால், வசை மொழிகளால் நானே தற்கொலை எண்ணத்துக்கு ஆளானேன். சிறு வயதிலிருந்தே முற்போக்கு இலக்கியம் படித்ததால், அந்த எண்ணத்துக்கு பலியாகாமல் துணிவுடன் நிர்வாகிகளை எதிர்த்துப் பேசி விடுதியை விட்டு வெளியேறினேன்.

பாரதீய ஜனதா கட்சி அந்த மாணவி விஷயத்தில் தலையிட்டு பள்ளி நிர்வாகம் மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்தியதாக பிரச்சினையைத் திரித்து மதக்கலவரத்தை உருவாக்க நினைக்கிறது. இத்தனை காலம் அந்தப் பள்ளியைக் குறித்து அப்படி எந்த ஒரு புகாரும் எழவில்லை. தமிழகம் முழுவதும் கடந்து நூற்றைம்பது ஆண்டுகளில் ஏராளமான கிறிஸ்துவப் பள்ளி, கல்லூரிகளில் எந்த இடையூறும் இல்லாமல் நான் உட்பட லட்சக்கணக்கான இந்து மாணவர்கள் படித்துப் பயனடைந்து வந்துள்ளனர். சைவ சித்தாந்த பேரறிஞர் மறைமலையடிகளே கிறிஸ்துவப் பள்ளியில் பயின்று, சென்னை கிறித்துவக் கல்லூரியில் பணியாற்றியவர்தானே. பயில்வது மட்டுமல்ல. கிறிஸ்துவப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இந்து ஆசிரியர்கள், பார்ப்பனர்களான ஆசிரியர்கள் பெரிதும் கொண்டாடப்படுவது உண்டு. உச்சிக் குடுமியுடன், நெற்றிப் பட்டையுடன் அல்லது நாமத்துடன் பாடம் நடத்தியது உண்டு. அவர்களையெல்லாம் யாரும் எந்த காலத்திலும் மதம் மாறச் சொன்னதாக தகவல் இல்லை. காலனீய ஆட்சிக் காலத்திலேயே நிகழாத ஒன்று, இன்று ஏன் நிகழப்போகிறது. தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 87 சதவிகிதம் இந்துக்கள்தான். ஆறு சதவிகிதம் கிறிஸ்துவர்கள். கத்தோலிக்க திருச்சபையும் சரி, புரொடஸ்டண்ட் சபைகளும் சரி இப்போது மதமாற்றத்தில் சிறிதும் ஆர்வம் காட்டுவதில்லை. பெந்தகோஸ்தே வகுப்பினரின் பிரார்த்தனைக் கூட்டங்களுக்குச் செல்பவர்கள் கிறிஸ்துவையும் வணங்குவார்கள், இந்து கடவுள்களையும் வணங்குவார்கள் என்பதை கள ஆய்வில் விரிவாகக் கண்டுள்ளேன். மத மாற்றம் என்ற சொல்லுக்கு இந்த இடத்தில் தனிப்பட்ட பொருள் எதுவும் கிடையாது. எல்லா மதமும் சம்மதம் என்பதுதான்.

என் பள்ளிப் பருவத்தில் ஒரு அந்தோணியார் கோயிலுக்குச் செல்வது மக்களிடையே பிரபலமடைந்தது. பதிமூன்று செவ்வாய்க்கிழமைகள் அந்தக் கோயிலுக்குச் சென்று உப்பினை வாங்கி காணிக்கையாகச் செலுத்தி வழிபட்டால் இன்னல்கள் தீரும் என்ற நம்பிக்கை பரவியது. ஒருநாள் நான் முருகன் கோயில் அர்ச்சகரான பார்ப்பனர் ஒருவர் உப்பு வாங்கிக்கொண்டு செல்வதைப் பார்த்தேன். அவர் முன் சென்று வணக்கம் என்று சொன்னேன். அவர் என்னை பார்த்து சிரித்துவிட்டு எல்லா தெய்வமும் ஒன்றுதானே, என் பெண்ணுக்கு காலில் முடக்குவாதம். அதுதான் இங்கும் பிரார்த்தனை செய்யலாம் என்று வந்தேன் என்றார். இதுதான் மக்கள் காணும் யதார்த்தம்.

இங்கே எப்படியாவது மத பிரிவினைவாத அரசியலை உருவாக்க முயல்கிறது பாஜக. திருக்காட்டுப்பள்ளி என்ற தலமே மைக்கேல்பட்டி என்று மாறிவிட்டதாக அபாண்டமான ஒரு டிவீட் போடுகிறார் வானதி சீனிவாசன் என்ற பாஜக தலைவர். எந்தப் பொய்யையும் கூசாமல் சொல்வார்கள். பரப்புவார்கள். மக்களைப் பிளவுபடுத்தி சுரண்டுவார்கள். பெட்ரோலுக்கு கொள்ளை வரி விதித்து, அம்பானிக்கும், அதானிக்கும் வரிச் சலுகை அளிப்பார்கள். பாஜகவின் மதவாத டிரோஜன் குதிரை இந்தியாவின் பல மாநிலங்களில் வெற்றிகரமாகப் புகுந்ததைப் பார்த்தோம். தமிழகம் ஒன்றுபட்டு அதை முறியடிக்க வேண்டிய நேரம் இது.

** கட்டுரையாளர் குறிப்பு:**

**ராஜன் குறை கிருஷ்ணன்** – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *