தனித்து நிற்கும் அண்ணாமலை: தடுக்க பார்த்த சீனியர்கள்

politics

ஜனவரி 24 ஆம் தேதியிலிருந்து 31ம் தேதிக்குள் அடுத்தடுத்து நடந்த காட்சி மாற்றங்கள்… அதிமுக பாஜக கூட்டணியை முறித்து போட்டு விட்டன.

ஜனவரி 31ம் தேதி பிற்பகல் தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை… வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். அத்தோடு அவர் நிறுத்திக் கொள்ள வில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவும் அதிமுகவும் தொடர்கின்றன என்றும் நாடாளுமன்றத் தேர்தலில் வழக்கம் போல அதிமுக கூட்டணி தொடரும் என்றும் அறிவித்திருக்கிறார் அண்ணாமலை.

இதற்கு உடனடியாக பதில் அளித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணி பற்றி முடிவு எடுத்தது பாஜகவின் முடிவு. இது பற்றி கருத்து இல்லை. அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று அவர் சொன்னது பற்றி எங்கள் கட்சி தான் முடிவெடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

தனித்துப் போட்டியிடும் அண்ணாமலையின் முடிவு பற்றி பாஜக வட்டாரத்தில் விரிவாக விசாரித்தோம். இந்தப் பின்னணியில் சிலவற்றை நாம் ஏற்கனவே செய்திகளாக இருந்தாலும் மீண்டும் அவற்றை குறிப்பிட்டு நினைவுபடுத்துகிறோம்.

**24 ஆம் தேதி மையக் குழு!**

ஜனவரி 24ஆம் தேதி பாஜகவின் மையக் குழு கூட்டம் கமலாலயத்தில் நடந்தது. அப்போது தமிழ்நாட்டில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுக பற்றி சில கருத்துக்களை நயினார் நாகேந்திரன் அண்ணாமலை உள்ளிட்டோர் எடுத்து வைத்துள்ளனர்.

பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் இந்தியா முழுவதும் பேசப்பட்ட நிலையில்… தமிழகத்தில் பாஜக அதை ஒட்டிப் போராட்டம் நடத்தியது. உடனே கூட்டணிக் கட்சி என்ற முறையில் அதிமுகவையும் நடத்த சொன்னது. ஆனால் அதிமுக தரப்பில் அதற்கு எந்த ரியாக்ஷனும் இல்லை. டுவிட்டரில் கருத்து பதிவிட்டதோடு அதிமுக பிரமுகர்கள் நிறுத்திக் கொண்டனர்.

இது பற்றிய பேச்சு வந்தபோது, ‘தனது அரசாங்கத்தை காப்பாற்றிக் கொள்ளத்தான் எடப்பாடி பாஜகவை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இப்போது அவரது அணுகு முறைகள் மாறிவிட்டன’ என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.

**நயினார் கலகம்**

இந்த எண்ண அலைகளைத் தான் அடுத்த நாள் 24 ஆம் தேதி நயினார் நாகேந்திரன் வள்ளுவர் கோட்டம் உண்ணாவிரதத்தில் சட்டமன்றத்தில் திமுகவை எதிர்த்து பேச அதிமுகவினருக்கு ஆண்மை இல்லை என்று சூடாக பேசிவிட்டார்.

இதற்கு அண்ணாமலை ஒரு அசாதாரணமான விளக்கத்தை தெரிவித்தாலும் பாஜகவின் இந்த பெரியண்ணன் போக்கை அதிமுக விரும்பவில்லை.

நயினார் நாகேந்திரன் இப்படியெல்லாம் பேசினால் நெல்லைக்குள் நுழைய முடியாது என்று அதிமுகவின் திருநெல்வேலி மாவட்ட பிரமுகர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

**அண்ணாமலையின் அஜெண்டா**

தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை இதற்கு முன் பாஜக தலைவர்கள் செய்த வழக்கமான அரசியலை செய்ய விரும்பவில்லை. இதை அவரே பல்வேறு சமயங்களில் தனக்கு நெருக்கமான பாஜக நிர்வாகிகளிடமும் மாவட்ட தலைவர்களிடமும் கூறியிருக்கிறார்.

‘அமித்ஷா பிளாங்க் செக்கை போல என்னிடம் மாநிலத் தலைவர் பதவியை கொடுத்து இருக்கிறார். இதை வைத்து தமிழ்நாடு முழுவதும் பாஜக வை வளர்ப்பது தான் என் நோக்கம்’ என்பதுதான் அண்ணாமலை அடிக்கடி சொல்லி வந்த டயலாக். இந்த அடிப்படையில் தான் தமிழ்நாடு முழுதும் பாஜகவை கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்

தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற யோசனையை மீண்டும் நடந்த மையக் குழு கூட்டத்தில் வைத்திருக்கிறார் அண்ணாமலை.

அதற்கு பொன். ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர், ‘ கட்சியை வளர்ப்பது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் எல்லா இடத்திலும் நின்று நமது வெற்றி வாய்ப்பை விஷப் பரிட்சைக்கு உள்ளாக்குவது போல அமைந்துவிடக்கூடாது. மேலும் நமக்கு வெற்றி வாய்ப்புள்ள பகுதிகளை கூட்டணியில் பெற்று நமது கட்சி நிர்வாகிகளை உள்ளாட்சி அதிகாரத்தில் அமர்த்துவது மூலம் மேலும் கட்சியை வளர்க்கலாம்’ என்று அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் இதை ஒப்புக்கொள்ளாத அண்ணாமலை, “தனித்துப் போட்டியிடுவது என்பது பாஜக தமிழகத்தில் என்றைக்கோ செய்திருக்க வேண்டியது. இப்போது நாம் தாமதமாகத்தான் இந்த முடிவு எடுத்திருக்கிறோம். இதை சில சீனியர் தலைவர்கள் தடுக்க பார்த்தார்கள். காரணம் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் குறைவான வாக்குகள் பெற்றால் தத்தமது பகுதிகளில் தங்களது கட்சி வளர்ச்சி என்ற பிம்பம் உடைந்து விடும் என்று சீனியர்கள் பயப்படுகிறார்கள். எனக்கு அந்த பயம் இல்லை. நம்முடைய உண்மையான பலம் என்ன என்பதை அறிந்து கொண்டால்தான் நாம் அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை தொடர முடியும். அதற்காகவே இந்த தனித்துப் போட்டி முடிவு” என்று தெரிவித்திருப்பதாக கூறுகிறார்கள் சில பாஜக நிர்வாகிகள்.

அதே நேரம்,”உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி இல்லை என்று சொன்னதோடு அண்ணாமலை நிறுத்தியிருக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவோடு தொடர்கிறோம் என்று இப்போதைக்கு தெரிவித்து இருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி கூறியதன் மூலம் இந்த தேர்தலில்

எதைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்கப் போகிறோம் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது” என்கிறார்கள் சீனியர் நிர்வாகிகள் .

தனித்து நிற்கும் அண்ணாமலையின் இந்த முடிவை பொன். ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் போன்ற சீனியர் தலைவர்கள் தடுக்கப் பார்த்தார்கள். ஆனால் அண்ணாமலை ‘வேற லெவல்’ அரசியல் செய்வதால் ஒரு கட்டத்தில் அவர்கள் அதை விட்டுவிட்டார்கள்.

இன்னமும்கூட டெல்லி மேலிடம் அதிமுகவிடம் நேரடியாகப் பேசி இந்த கூட்டணியை சரி செய்யும் என்று பொன். ராதாகிருஷ்ணனை சுற்றி ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

**ஆரா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *