மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 ஜன 2022

பெண்களுக்கு முன்னுரிமை, திருக்குறள், அம்பேத்கர்: குடியரசுத் தலைவரின் உரை

பெண்களுக்கு முன்னுரிமை, திருக்குறள், அம்பேத்கர்: குடியரசுத் தலைவரின் உரை

2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்காகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை குதிரைப்படை வீரர்கள் புடை சூழ காரில் நாடாளுமன்றத்துக்கு வருகைத் தந்தார்.

11 மணியளவில் தனது உரையைத் தொடங்கிய குடியரசுத் தலைவர், நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய, உயிர்த் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எனது வீர வணக்கம். மத்திய அரசு அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை வழங்கும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

கோவிட்-19க்கு எதிரான போரில் இந்தியாவின் திறன் தடுப்பூசி திட்டத்தில் தெளிவாகத் தெரிந்தது. ஒரு வருடத்துக்கும் குறைவான நாட்களில் 150 கோடிகளுக்கும் அதிகமான டோஸ்களை செலுத்தி சாதனை படைத்துள்ளோம். அதிகபட்ச அளவு மருந்துகளை வழங்குவதில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

கடந்த காலங்களை விட தற்போது இந்தியாவில் சுகாதார கட்டமைப்பு முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டம், ஏழை மக்கள் சுகாதார திட்டங்களைப் பெறுவதற்கு பெரும் உதவியாக இருக்கிறது.

அதுபோன்று யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காக கரிப் கல்யான் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்களை வழங்குகிறது. இந்தியா உலகின் மிகப்பெரிய உணவு விநியோக திட்டத்தை நடத்தி வருகிறது.

டாக்டர் அம்பேத்கர் தனது லட்சிய சமுதாயம் என்பது சுதந்திரம், சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார். ஜனநாயகம் என்பது அரசாங்கத்தின் ஒரு வடிவம் மட்டுமல்ல, மக்களுக்கான மரியாதை உணர்வுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. இந்திய அரசு பாபாசாகேப்பின் கொள்கைகளை அதன் வழிகாட்டும் கொள்கையாகக் கருதுகிறது” என்றார்.

மேலும் மத்திய அரசின் கல்வித் திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், ‘கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்ற கல்வி அதிகாரத்தில் உள்ள திருவள்ளுவரின் குறளை மேற்கோள் காட்டிப் பேசினார்.

இஸ்லாமியப் பெண்கள் சந்தித்த பெரும் சவாலான முத்தலாக் திட்டம் ரத்து செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், “பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் திட்டம் பெண்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மத்திய அரசின் முன்னுரிமைகளில் ஒன்றாகும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சம அந்தஸ்து வழங்கும் முயற்சியில் பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21ஆக மத்திய அரசு அதிகரித்து மசோதாவைத் தாக்கல் செய்தது” என்றார்.

“தெருவோர வியாபாரிகளின் நலனுக்காக ஸ்வாநிதி யோஜனா திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 28 லட்சம் தெருவோர வியாபாரிகள் ரூ.2,900 கோடி மதிப்பிலான பண உதவியைப் பெற்றுள்ளனர். இந்த வியாபாரிகளை இப்போது மத்திய அரசு ஆன்லைன் நிறுவனங்களுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அதுபோன்று ஜன்தன்-ஆதார்-மொபைல் எண் ஆகியவை இணைக்கப்பட்டது. அதன்படி, 44 கோடிக்கும் அதிகமான ஏழை மக்களை வங்கி அமைப்புடன் இணைத்ததன் மூலம் இந்த பேரிடரின் போது கோடிக்கணக்கான பயனாளிகள் நேரடி பணப் பரிமாற்றத்தின் பலன்களைப் பெற்றனர்.

நாட்டின் வளர்ச்சியில் சிறு விவசாயிகளின் பங்கு முக்கியமானது. மத்திய அரசு 80 சதவீத சிறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியின் ஒரு பகுதியாக, இன்றுவரை 11 கோடி குடும்பங்கள் பயனடைந்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

“தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக உள்ளூர் மொழிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. தேசிய கல்விக் கொள்கை இந்தியாவில் கல்வியின் முகத்தை மாற்றியுள்ளது. முக்கியமான நுழைவுத் தேர்வுகளை இந்திய மொழிகளில் நடத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 10 மாநிலங்களில் உள்ள 19 பொறியியல் கல்லூரிகள் 6 மொழிகளில் கற்பிக்க உள்ளன.

தற்போது 33 சைனிக் பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பெண் கேடட்கள் நுழைவதற்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஒரு லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. நாடு முழுவதும் 36,500கிமீ சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் ஐஐடி, ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன எனக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடர்ந்து உரையாற்றினார்.

-பிரியா

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

திங்கள் 31 ஜன 2022