மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 30 ஜன 2022

7.5% இட ஒதுக்கீட்டினால் மருத்துவராகும் அரசுப் பள்ளி மாணவர்கள்!

7.5% இட ஒதுக்கீட்டினால் மருத்துவராகும் அரசுப் பள்ளி மாணவர்கள்!

தமிழ்நாட்டில் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன்மூலம் கடந்த ஆண்டில் 436 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் கிடைத்தன.

புதிய 11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு மற்றும் 7.5% இட ஒதுக்கீடு கீழ் தேர்வாகும் மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் அனைத்தையும் அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டதால், இந்தாண்டு மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த 27ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் சிறப்புப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற்ற நிலையில், நேற்று முன்தினமும், நேற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்திருந்தவர்களில் 1,806 பேருக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் முதல் நாளில் நடைபெற்ற கலந்தாய்வில் 719 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தரவரிசையில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இட ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார். இதில் வெங்கடேஸ்வரியை தவிர, மற்ற அனைவரும் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடங்களைத் தேர்வு செய்தனர்.

இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ இடங்களை தேர்வு செய்தவர்களில் பெரும்பாலானவர்களின் பெற்றோர்கள் தினக் கூலி வேலை செய்பவர்கள்தாம். தங்கள் பிள்ளைகள் மருத்துவப் படிப்புக்குத் தேர்வானதை நேரில் பார்த்த ஒவ்வொரு பெற்றோரும் பூரிப்படைந்தனர்.

ஜனவரி 28ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 544 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 437 எம்பிபிஎஸ் இடங்களும், 107 பல் மருத்துவ இடங்களில் 104 இடங்களும் நிரம்பின. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 324 எம்பிபிஎஸ் இடங்களும், 13 பல் மருத்துவ இடங்களும் நிரம்பின.

இதே போல், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 113 எம்பிபிஎஸ் இடங்களும், பல் மருத்துவக் கல்லூரிகளில் 91 இடங்களும் நிரம்பின.

கலந்தாய்வில் இடம் கிடைத்த 541 பேரில் 212 மாணவர்கள் 2020- 21ஆம் கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், 329 பேர் முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள்.

இந்தக் கலந்தாய்வில் பல்வேறு மாவட்டங்களில் ஒரே பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அதிக அளவில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது.

நெல்லை

7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நெல்லையில் உள்ள ஒரே அரசுப் பள்ளியைச் சேர்ந்த 6 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

நெல்லை மாநகராட்சி கல்லணை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த ஞானலசி, இசக்கியம்மாள் நட்சத்திர பிரியா ஆகியோருக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியிலும், காயத்ரிக்கு தூத்துக்குடி அரசு மருத்துக் கல்லூரியிலும் ,சௌந்தர்யாவுக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியிலும், கிருத்திகாவுக்கு கோவை தனியார் கல்லூரியிலும் எம்பிபிஎஸ் படிப்புக்கான இடம் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் மொத்தமே 6 மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளியில் இருந்து மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பு பெற்ற நிலையில், முதல் நாள் கலந்தாய்வில் ஒரே பள்ளியில் பயின்ற 6 மாணவிகளுக்கு எம்பிபிஎஸ் கலந்தாய்வில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த 7 மாணவிகளுக்கு அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீட்டில் கலந்துகொண்ட, தீபிகா மதுரை அரசு மருத்துவக் கல்லூரியையும், வாலண்டினா தேனி அரசு மருத்துவக் கல்லூரியையும், கனிகா புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியையும், சுவாதி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியையும், யமுனா திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியையும் தேர்வு செய்துள்ளனர். நிஷாலினி என்ற மாணவி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க தேர்வாகி உள்ள நிலையில் நிஷா என்ற மாணவி திருநெல்வேலி பல் மருத்துவக் கல்லூரியைத் தேர்வு செய்துள்ளார்.

மதுரை

அதுபோன்று மதுரை அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி பிரியங்காவுக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும், தீபாஸ்ரீக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியிலும், வினோதினிக்கு விருதுநகர் மருத்துவக் கல்லூரியிலும், சங்கீதாவுக்கு மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியிலும், மாணவி கவுசல்யாவுக்கு மதுரை சிஎஸ்ஐ பல் மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்தது.

செங்கோட்டை

செங்கோட்டை எஸ்.ஆர்.எம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த

மாணவி லோகேஸ்வரிக்கு திருச்சி மருத்துவக் கல்லூரியிலும், சுபஸ்ரீக்கு ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியிலும், சீதாதேவிக்கு வடக்கன்குளம் ராஜா பல் மருத்துவக் கல்லூரியிலும், ஐஸ்வர்யாவுக்கு அரியலூர் மருத்துவக் கல்லூரியிலும், பாத்திமா சைனியாவுக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் மட்டும் 54 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அரசுப் பள்ளியில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு டேப் (TAB) வழங்க திட்டம் இருந்தது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் உள்ளதால், தேர்தலுக்குப் பிறகு மாணவர்களுக்கு டேப் வழங்குவது குறித்து முதல்வர் அறிவிப்பார்” எனக் கூறினார்.

திமுக ஆட்சியில்தான் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது டேப் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

திருவாரூர் வீதிக்கு கலைஞர் பெயர்: பாஜகவுக்கு பணிந்ததா திமுக? ...

8 நிமிட வாசிப்பு

திருவாரூர் வீதிக்கு கலைஞர் பெயர்: பாஜகவுக்கு பணிந்ததா திமுக?

குவாரி கொடூரம்: பின்னணி முகம்!

5 நிமிட வாசிப்பு

குவாரி கொடூரம்: பின்னணி முகம்!

சிறப்புக் கட்டுரை: இலங்கை: பெரும்பான்மைவாதம் என்ற தேசத்தின் ...

19 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: இலங்கை: பெரும்பான்மைவாதம் என்ற தேசத்தின் புதைகுழி!

ஞாயிறு 30 ஜன 2022