மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 30 ஜன 2022

டீ கொடுத்த ஸ்டாலின்- அல்வா கொடுக்கும் நேரு: டென்ஷனில் காங்கிரஸ்

டீ கொடுத்த ஸ்டாலின்- அல்வா கொடுக்கும் நேரு:  டென்ஷனில் காங்கிரஸ்

ஜனவரி 28 ஆம் தேதி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் .அழகிரி, தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோரை அறிவாலயத்துக்கு அழைத்துப் பேசினார் திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின்.

அப்போது அவர்களுக்கு தேநீர் கொடுத்து உபசரித்து அன்பாக பேசி,. "காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்கும் ஒரு முக்கியமான கட்சி என்பதை நாங்கள் அறிவோம். தேர்தல் உடன்பாடுகளில் எந்த கசப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறோம். அப்படி ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் எனக்கு தொடர்பு கொள்ளுங்கள்" என்று கே .எஸ்.அழகிரியிடம் உத்தரவாதம் கொடுத்து அனுப்பினார் மு.க ஸ்டாலின்.

இந்த சந்திப்பின்போது திமுகவின் தலைமை கழக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே. என். நேரு உடனிருந்தார்.

இந்த நிலையில் சந்திப்புக்கு அடுத்த நாள் 29 ஆம் தேதி, திருச்சி மாவட்ட திமுக தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுக கூட்டணி கட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடந்தது.

திருச்சி மாநகர் காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராக திருநாவுக்கரசர் எம்பி நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையின் கீழ் குழுவும் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் நேருவோ..."காங்கிரஸ் கட்சியின் குழு எல்லாம் இங்கே வரவேண்டாம். உங்களுக்குள் பேசி முடித்துவிட்டு மாவட்ட தலைவர்களை மட்டும் அனுப்புங்கள். அதிக கூட்டம் கூட்ட வேண்டாம்" என்று காங்கிரஸாரிடம் கூறிவிட்டார். அதனால் நேரு கூட்டிய கூட்டத்திற்கு திருநாவுக்கரசர் வரவில்லை. அதே நேரம் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றிருந்த மற்றவர்கள் கலைஞர் அறிவாலயத்துக்கு வந்திருந்தனர். நேரு அவர்களை அழைத்து பேசாமல் மாவட்டத் தலைவர்களிடம் மட்டுமே பேசினார்.

10:30 மணிவாக்கில் தொடங்கிய இந்த கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் கலந்து கொண்ட கே.என் .நேரு பேசும்போது...

"திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளன. இவற்றில் ஐம்பது வார்டுகளில் திமுக போட்டியிடும். மீதி இருக்கும் 15 வார்டுகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும். எல்லாரும் இருந்து பேசி முடிவு செய்துவிட்டு கிளம்புங்கள். இன்னிக்கு என்னை விட்டா நான் சேலம் போய் விடுவேன் ‌‌அதனால்

எல்லாரும் இருந்து பேசி முடிச்சுட்டு கிளம்பலாம்" என்று பேசினார் நேரு.

அப்போது காங்கிரஸ் கட்சி சார்பில் சென்ற சிலர் ஏதோ சொல்ல முயல..." இத பாருங்க.... நேற்றைக்கு உங்க தலைவர் கிட்டயும் பேசிட்டேன். ராகுல்காந்தியே வந்து சொன்னாலும் 4 சீட்டுக்கு மேல கூடுதலாக அரை சீட்டு கூட கிடையாது" என்று அதிரடியாக பதிலளித்தார் நேரு.

காங்கிரசுக்கு 4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை, மதிமுக தலா இரண்டு சீட்டுகள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சிகளுக்கு தலா ஒரு சீட்டு ஆக மொத்தம் 65 சீட்டுகள் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அனைத்து கட்சி கூட்டத்திற்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பிலும் பிரதிநிதிகள் வந்து அவர்களுக்கு சீட்டு கேட்டனர்.

இந்த சூழலில் காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்த நான்கு இடங்கள் என்பது திருச்சியில் இருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகளையும் தமிழக காங்கிரஸ் தலைமையையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

திருச்சியில் இருக்கும் மூன்று மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு தலா ஒரு வார்டு கொடுத்து பிரச்சினை வராமல் ஆஃப் செய்துவிட்டார் நேரு என்கிறார்கள்.

ஆனால் திருச்சியின் முன்னாள் மேயர் சுஜாதா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் இன்று ஜனவரி 30 திருச்சி காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் திமுக அமைச்சர் நேருவின் முடிவை எதிர்த்து கூடி ஆலோசனை நடத்துகிறார்கள்.

இது பற்றி சரவணனிடம் மின்னம்பலம் சார்பில் நாம் பேசியபோது, " திருச்சி மாநகருக்கான காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழுவையும் அமைச்சர் நேரு மதிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் யார் வேட்பாளராக நிற்பது என்பதை கூட அவரே முடிவு செய்யும் நிலையில் இருக்கிறார்.

இந்த நான்கு சீட்டுகள் காங்கிரசுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இதை எதிர்த்து இன்று நாங்கள் ஆலோசனை கூட்டம் நடத்துகிறோம். அதன் பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் முடிவு எடுப்பார்" என்றார் சரவணன்.

இதேபோல மதுரையில் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்ற முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. ஆர் .ராமசாமி பாதியிலேயே வெளியேறிவிட்டதாக காங்கிரசார் சொல்கிறார்கள்.

அமைச்சர் நேரு பொறுப்பாளராக இருக்கும் சேலம் மாநகராட்சியில் காங்கிரசுக்கு மூன்று வார்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் குமுறுகிறார்கள்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இதுபோன்ற புகார்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு நேற்று சென்ற நிலையில்... அவர் நேற்று (ஜனவரி 29) இரவு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், " நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதற்கு முன்னதாக காங்கிரஸ் மாநில தலைமையிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

மாநில தலைமையின் ஒப்புதல் இல்லாமல் எந்த மாவட்டத்திலும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடக்கூடாது" என்று கூறியிருக்கிறார் கே.எஸ்.அழகிரி.

கசப்புணர்வு இருக்காது என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், கே. எஸ். அழகிரியிடம் நேருக்கு நேர் உத்தரவாதம் கொடுத்து இருந்தாலும்... பல்வேறு மாவட்டங்களில் திமுக மாவட்ட செயலாளர்கள் அதை கண்டுகொள்ளவில்லை.

எனவே கடும் டென்ஷனில் இருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி.

ஆரா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

ஞாயிறு 30 ஜன 2022