பள்ளிகள் திறப்பு: பள்ளிக் கல்வித் துறை ஆணையர் உத்தரவு!

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளையும் திறப்பதற்கான ஆயத்தப் பணிகளை உடனே மேற்கொள்ளுமாறு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைத் தாண்டி இருந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 1-12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டன.
தற்போது கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்து வருகிறது. இதையடுத்து அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டது. அதனுடன், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 1-12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்றுடன் சேர்த்து மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்பட அனைத்து விதமான ஆயத்தப் பணிகளை உடனே மேற்கொள்ளுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
-வினிதா