மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 29 ஜன 2022

பாஜக கோரிக்கை: முதல் கட்டத்திலேயே மறுத்த அதிமுக

பாஜக கோரிக்கை: முதல் கட்டத்திலேயே மறுத்த அதிமுக

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில்... அதற்கான கூட்டணி பேச்சுவார்த்தைகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

பாஜக சார்பில் கடந்த 24 ஆம் தேதி நடந்த அக்கட்சியின் மைய குழுக்கூட்டத்தில் அதிமுக பற்றிய அதிருப்தி விவாதிக்கப்பட்டது. அதையடுத்து 25ஆம் தேதி, வள்ளுவர் கோட்டத்தில் நடந்த பாஜகவின் உண்ணாவிரத போராட்டத்தில் அதிமுகவினரை ஆண்மையற்றவர்கள் என்று பாஜக மாநிலத் துணைத் தலைவரும் சட்டமன்ற கட்சித் தலைவருமான நயினார் நாகேந்திரன் பேசினார். இதனால் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையில் கடுமையான வார்த்தை பரிமாற்றங்கள் நடந்தன.

பிறகு இது நயினார் நாகேந்திரனின் தனிப்பட்ட கருத்து என்றும் இதுகுறித்து ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமியிடம் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்து விட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். இந்த சூழ்நிலையில் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடந்த மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என கணிசமான மாவட்ட தலைவர்கள் வலியுறுத்தியதாகவும் இதற்குப் பின்னால் அண்ணாமலை இருப்பதாகவும் அக்கட்சியின் சீனியர்கள் மத்தியில் பேசப்பட்டது.

இப்போதைய அரசியல் சூழ்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பது தான் முறையாக இருக்கும் என்று பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் அண்ணாமலையிடம் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் நேற்று மாவட்ட தலைவர்கள் கூட்டம் முடிந்த பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூட அண்ணாமலை தலைகாட்டவில்லை.

மீண்டும் இன்று காலை 10 மணிக்கு கமலாலயத்தில் பாஜகவின் மைய குழு கூட்டம் கூடியது. அதில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டு அவர்களிடமும் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு இன்று பகல் 12.30 மணி அளவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அதிமுக தலைமை அலுவலகம் சென்றனர்.

அங்கே அதிமுக சார்பாக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

பிறகு பேச்சுவார்த்தையின் இடையே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் பேச்சுவார்த்தையில் இணைந்து கொண்டனர்.

சுமார் நான்கரை மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியே வந்த பாஜக தலைவர் அண்ணாமலை...

"தமிழ்நாட்டில் அதிமுக பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக நகரப்பகுதிகளில் வலுவாக இருக்கிறது. எனவே உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிட்டு நல்ல வாக்குகள் பெற்று இருக்கிறோம்.

எங்களது கோரிக்கையை முன் வைத்து இருக்கிறோம். பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தல் என்றாலே கட்சியின் அனைத்து நிலைகளில் உள்ளவர்களும் போட்டியிட வேண்டும் என்று நினைப்பார்கள். இது கொஞ்சம் சிக்கலானது தான். ஆனாலும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். இறுதி செய்யப்பட்ட பின்னர் விவரங்களை உங்களுக்குத் தெரிவிக்கிறோம்" என்று கூறினார்.

பேச்சுவார்த்தையில் அதிமுக சார்பில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளரிடம் பேசுகையில்...

"பாஜகவினர் அவர்களுக்கு தேவையானவை என கேட்டிருக்கிறார்கள். கேட்பது அவர்களது கடமை. கூட்டணியின் பிரதான கட்சி என்ற அடிப்படையில் எங்களுடைய கட்சி நலன் எங்கள் கட்சி தொண்டர்கள் நலன் கருதி அவர்களது கோரிக்கையை பரிசீலித்து முடிவு எடுப்போம்" என்று கூறினார்.

அதிமுக பாஜக சார்பில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ஏற்கனவே மைய குழு கூட்டத்தில் விவரித்தபடி சென்னையில் 50 வார்டுகளையும், கோவை, ஈரோடு, நாகர்கோயில், ஓசூர் ஆகிய நான்கு மாநகராட்சி மேயர் பதவிகளையும் பாஜக கேட்டதாகவும் அதை எடுத்த எடுப்பிலேயே அதிமுக நிராகரித்து விட்டதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேந்தன்

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

சனி 29 ஜன 2022