மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 ஜன 2022

ஸ்டாலின் தேனீர்- துரைமுருகன் அன்பு: அறிவாலயத்தில் அழகிரியின் நிலைமை!

ஸ்டாலின் தேனீர்- துரைமுருகன் அன்பு: அறிவாலயத்தில் அழகிரியின் நிலைமை!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களை எதிர்கொள்வதை விட... பெரிய சவாலாக இருப்பது திமுகவுக்கு கூட்டணிக் கட்சிகளை எதிர் கொள்வதுதான்.

பத்து வருடங்களுக்கு பிறகு ஆட்சியை பிடித்தாலும் திமுக தனது கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளையும் இன்னமும் திருப்திப்படுத்த முடியாமல் தான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் பெரும்பாலான இடங்களில் போட்டியிட விரும்புகின்றனர். இதனால் ஆங்காங்கே கூட்டணி கட்சிகளோடு திமுகவுக்கு சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.

கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு என ஒதுக்குவதாக கூறிய இடங்களில் திமுகவினரே சுயேச்சையாக போட்டியிட்டனர்.

அந்த நிலை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வந்துவிடக்கூடாது என்பதற்காக கடந்த சில வாரங்களாகவே பல்வேறு மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மாநில காங்கிரஸ் தலைவரான கே. எஸ். அழகிரியிடம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக தலைமையிடம் பேசுமாறு கேட்டு வந்தனர்.

ஆனால் அழகிரியால் திமுக தலைவரும் முதல்வருமான மு. க. ஸ்டாலின் தொடர்பு கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் சட்டமன்ற கட்சியின் தலைவரான செல்வப்பெருந்தகை திமுக தலைமையுடன் கொண்டிருக்கும் நெருக்கத்தை விட... மாநிலத் தலைவரான அழகிரிக்கு திமுக தலைமையிடம் நெருக்கம் குறைவாகவே இருக்கிறது என்பதே உண்மை.

பொங்கலை ஒட்டி சென்னையை சேர்ந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் அமைச்சர் மா. சுப்பிரமணியனை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். அப்போது சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கான வார்டுகள் பற்றி அவர்கள் பேசியபோது... "2011 மேயர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிட்டது. அப்போது 62 ஆயிரத்து 272 வாக்குகள் தான் காங்கிரஸ் மொத்த சென்னை மாநகராட்சியில் பெற்றது. கடந்த பத்து வருடங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை எவ்வளவு உயர்ந்திருக்கும் அல்லது எவ்வளவு குறைந்திருக்கும் என்று நீங்களே கணக்கிட்டு... நியாயமாக காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் கொடுக்கலாம் என நீங்களே சொல்லுங்கள்" என்று அவர்களை வாயடைக்க வைத்திருக்கிறார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

இந்த தகவல் கே. எஸ். அழகிரிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில்தான் ஜனவரி 27ஆம் தேதி டிகேஎஸ் இளங்கோவன் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலினை வைத்துக் கொண்டே..."முதல்வர் ஸ்டாலின் இப்போதெல்லாம் அதிகமாக பேசுவது இல்லை. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட அவரிடம் அதிகமாக பேச முடியவில்லை" என்று தனது அனுபவத்தையும் ஆற்றாமையையும் வெளிப்படுத்தினார்.

அதே விழாவில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், தன்னைப்பற்றி அழகிரி பேசியதை குறிப்பிட்டு..." பேசுவதை விட செயலில் காட்ட வேண்டும் என்று நினைப்பவன் நான்" என்று பதிலளித்தார்.

காங்கிரஸ் கட்சியின் இந்த கசப்புணர்வை புரிந்து கொண்டதால் தான் என்னவோ நேற்று மாலை நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்...."கூட்டணிக் கட்சிகளை அனுசரித்து கசப்புணர்வு தோன்றாமல் நடத்துங்கள்" என்று பேசியிருந்தார் ஸ்டாலின்.

மேலும் தன்னோடு பேச முடியவில்லை என்று வருத்தப்பட்ட கே. எஸ்.அழகிரியை இன்று அறிவாலயத்திற்கு வருமாறு முதல்வர் ஸ்டாலின் அழைத்தார். அதன் பேரில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் சென்னை மாவட்ட தலைவர்களோடு அறிவாலயம் சென்று திமுக தலைவரான முதல்வர் ஸ்டாலினையும் பொதுச் செயலாளர் அமைச்சர் துரை முருகனையும் சந்தித்தார் அழகிரி.

சந்திப்பு முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே எஸ் அழகிரி, "முதல்வர் ஸ்டாலின் எங்களை தேனீர் அருந்தச் சொல்லி உபசரித்தார். நாங்களும் தேனீர் அருந்தினோம். துரைமுருகன் அன்பாக பேசினார். திமுகவின் அந்தந்த மாவட்ட செயலாளர்களோடு எங்கள் மாவட்ட தலைவர்கள் கலந்து பேசி போட்டியிடும் இடங்களில் முடிவு செய்வார்கள். கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளையும் கருத்தில் கொண்டு இந்தப் பேச்சுவார்த்தைகள் அமையும். மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கு தேர்தல் முடிவுகள் வந்த பிறகுதான் பேச்சுவார்த்தை நடத்த முடியும்" என்று பிடி கொடுக்காமல் நழுவலாகவே பேசிவிட்டுச் சென்றார் கே எஸ் அழகிரி.

கூட்டணிப் பேச்சு வார்த்தையின்போது எப்போதுமே துரைமுருகன் துடுக்குத்தனமாகவும் கிண்டலாகவும் பேசி கூட்டணிக் கட்சியினரை நோகடிப்பது வழக்கம். ஆனால் இம்முறை துரைமுருகன் அன்பாகப் பேசினார் என்று அழகிரி சொன்னதற்கு பின்னால் கடந்த கால வலிகள்தான் இருக்கின்றன என்கிறார்கள் அழகிரிக்கு நெருக்கமானவர்கள்.

சென்னையில் இருக்கும் 200 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி சட்டமன்றத் தொகுதிக்கு இரண்டு வார்டுகள் வீதம் 40 வார்டுகள் கேட்டால்தான் 20 வார்டுகளாவது தருவார்கள் என்று கணக்கு போடுகிறது. ஆனால் சென்னை மாநகரத்தில் இருக்கும் 8 காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கு தலா ஒரு வார்டு வீதம் கொடுத்து 10 குள்ளேயே காங்கிரசை பொத்தி வைக்க முயற்சிக்கிறது திமுக.

இந்த நடைமுறை கடினங்கள் எல்லாம் தெரிந்ததால் தான் அறிவாலய வாசலில் இன்று அழகிரி.... "ஸ்டாலின் தேனீர் கொடுக்கச் சொன்னார். துரைமுருகன் அன்பாகப் பேசினார்" என்றெல்லாம் தனது வருத்தத்தை சிரிப்பின் மூலம் பூசி மறைத்து சென்று இருக்கிறார் என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில்.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வெள்ளி 28 ஜன 2022