மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 ஜன 2022

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராம் விஜய் படங்களாக அனுப்பிக் கொண்டிருந்தது.

அந்தப் படத்துக்கு பதிலாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் படத்தை அனுப்பிய வாட்ஸ்அப் அதற்கான விளக்கத்தை டைப் செய்யத் தொடங்கியது.

"வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டு 2 ஊராட்சி தலைவர்கள், 15 ஊராட்சிமன்றத் துணைத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் என 129 பேர் வெற்றி பெற்றனர்.

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் வெற்றி பெற்ற இந்த அனைவரையும் சென்னைக்கு நேரில் அழைத்து அவர்களை வாழ்த்திய விஜய்..‌‌. 'இந்தப் பயணம் இன்னும் நீண்ட தூரம் போகவேண்டும். அதனால் உங்கள் வெற்றியை மக்களுக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்துங்கள். இந்தப் பதவியால் நம் இயக்கத்துக்கு எந்த சர்ச்சையும் வரக்கூடாது' என்று கூறி அனுப்பினார்.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அதிகாரபூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பே விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர்கள் மாநில நிர்வாகியான புஸ்ஸி ஆனந்தை தொடர்பு கொண்டு, 'ஊரக உள்ளாட்சி தேர்தலை போலவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுவதற்கு நிர்வாகிகள் விரும்புகிறார்கள் 'என்று தெரியப்படுத்தியுள்ளனர். இதையடுத்து கடந்த 10 நாட்களாகவே விஜய் மக்கள் இயக்கம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பை நேற்று பூர்த்தி செய்திருக்கிறார் விஜய்.

இதையடுத்து உற்சாகமாகி விட்டார்கள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள். பிற இயக்கங்களில் தலைவரும், தலைவருக்கு நெருக்கமானவர்களும்தான் பதவிகளுக்கு வருவார்கள். ஆனால் விஜய் மக்கள் இயக்கத்தில் கீழ்நிலை நிர்வாகிகளை முதலில் தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெறச்செய்து பதவியில் அமர்த்தி அழகு பார்க்கிறார் விஜய்.

மக்கள் இயக்க நிர்வாகிகள் பலரின் எதிர்பார்ப்பு, இதேபோன்ற தேர்தல் களத்திற்கு விஜய் எப்போது வருவார் என்பது தான். இந்தக் கேள்வியை பல மாவட்டத் தலைவர்களும் புஸ்ஸி ஆனந்திடம் நேரடியாகவே கேட்டுள்ளார்கள். அதற்கு அவர் சொன்ன பதில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது... ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்ட நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் செயல்பாடுகள் தமிழகம் முழுவதும் பெருமளவு குறைந்து விட்டது. விஜய்க்கு நேரடிப் போட்டியாக சினிமாவில் திகழும் அஜித்குமார் தனது மன்றங்களை எல்லாம் ஏற்கனவே கலைத்துவிட்டார். இந்த சூழ்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்துக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

விஜய் தன் மன்றத்தை கீழிருந்து மேல்வரை அரசியல் கட்டமைப்பாக்க நினைக்கிறார். அதிகாரம் கீழ் நிலையிலிருந்து மேல்நோக்கி பரவ வேண்டுமென்று விஜய் விரும்புகிறார். அதனால்தான் ஊராட்சிகளில் தொடங்கி மாநகராட்சி வரை தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை தற்போது தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைக்கிறார்.

இதன் மூலம் மற்ற நடிகர்களைப் போல் அல்லாது தனது அரசியல் உள்கட்டமைப்பை பலப்படுத்திக் கொண்டு அதன் பிறகு, சட்டமன்ற அரசியலுக்கு வர விரும்புகிறார்.

இப்போதைய திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது. தமிழகத்தின் பெரிய தலைவராக தற்போது ஸ்டாலின் இருப்பதை விஜய் உணர்ந்து இருக்கிறார். திமுகவில் உதயநிதி ஸ்டாலின் தற்போது முன்னிலைப்படுத்தப்பட்டு வரும் நிலையில்... உதயநிதி முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் போது தனது அரசியல் என்ட்ரி இருக்க வேண்டும் என்று கருதுகிறார் விஜய். அதற்கு இன்னும் காலங்கள் உள்ளன. விஜய்க்கும் வயதாகி விடவில்லை.

எனவே தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி அதேநேரம் தனது மக்கள் இயக்கத்தை தீவிர அரசியல் படுத்தி... திமுகவில் உதயநிதி தலையெடுக்கும் போது நேரடி அரசியலில் அவருக்கு எதிராக போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்பதுதான் விஜய்யின் காலக் கணக்கு என்கிறார்கள் விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர்கள் சிலர்" என்ற மெசேஜ் க்கு சென்ட் கொடுத்து

ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

வெள்ளி 28 ஜன 2022