மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 ஜன 2022

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினரும், திருவொற்றியூர் மேற்கு திமுக பகுதி செயலாளருமான கே பி சங்கர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியில் இன்று ஜனவரி 28 கே.பி‌ சங்கரின் பகுதி செயலாளர் பதவி பறிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் பொறியாளரை தாக்கியதாக சங்கர் மீது புகார் கூறப்பட்ட நிலையில் கட்சித் தலைமை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு சாலைகள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

நடராஜன் கார்டன் முதல் தெரு இரண்டாம் தெரு மூன்றாம் தெருக்களில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணி அவற்றில் ஒன்று.

கடந்த புதன்கிழமை இரவு 1.30 மணிக்கு இந்த சாலை பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது எம்எல்ஏவான கேபி சங்கரும் அவருடன் நான்கு பேர்களும் சாலை அமைக்கும் இடத்துக்கு வந்து வேலையை நிறுத்துமாறு கூறியிருக்கிறார்கள். அப்போது ஒப்பந்தக்காரர் தரப்புக்கும் எம்எல்ஏ தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களுக்கு இடையே தலையிட்டு சமரசம் ஏற்படுத்த மாநகராட்சி உதவி பொறியாளர் முயன்றிருக்கிறார். அவரையும் உதவிப் பொறியாளரின் உதவியாளரையும் சங்கர் தாக்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல அங்கே சாலை பணிகளுக்காக 13 லாரிகளில் கொண்டு வரப்பட்ட கட்டுமான பொருட்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த உதவிப் பொறியாளர் அச்சத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

அந்தப் பொறியாளர் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழிடம் பேசியபோது, "நான் சாலை அமைக்கும் இடத்தில் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். இரவு அங்கே வந்த எம்எல்ஏ சங்கர் கடுமையான கோபத்தில் இருந்தார். அந்த இடத்தில் சாலை அமைக்கும் பணி பற்றி ஒப்பந்ததாரர் அவரிடம் தெரிவிக்கவில்லை என்று அவர் கோபப்பட்டார். அங்கே நின்றிருந்த நான் உட்பட பலரையும் எம்எல்ஏ வும் அவரது ஆட்களும் தாக்கினார்கள். அதற்குப் பிறகு போனில் என்னை தொடர்பு கொண்ட எம்எல்ஏ சங்கர் அப்படி நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்டார். சாலை பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" என கூறியிருக்கிறார்.

ஆனால் தான் அந்த இடத்துக்கு செல்லவில்லை என்றும் தனது ஆட்கள் தான் அங்கே சென்று சாலை பணிகள் விதிமுறைகளின்படி நடை பெறவில்லை என்பதால் தடுத்து நிறுத்தினார்கள் என்றும் சங்கர் கூறியுள்ளார்.

அடுத்தடுத்த தனது கான்ட்ராக்ட் பணிகள் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் கான்ட்ராக்டரும் இதுகுறித்து போலீசில் புகார் செய்யவில்லை.

இந்த நிலையில்தான் சங்கரின் பகுதி செயலாளர் பதவியை பறித்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

இந்த விவகாரம் பற்றி பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,

"சென்னை திருவொற்றியூரில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சிப் பொறியாளரை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கரும், அவரது ஆதரவாளர்களும் தாக்கியுள்ளனர். 13 லாரிகளில் வந்த தார்-ஜல்லிக் கலவையையும் திருப்பி அனுப்பியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது!

சென்னை மாநகராட்சி பொறியாளர் உள்ளிட்ட பணியாளர்களை தாக்கியதும், சாலை அமைக்கும் கருவிகளை சூறையாடியதும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்கள். ஒரு மக்கள் பிரதிநிதியே இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்க மாநகராட்சி தயங்குவது ஏன்?

தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இதேபோன்ற செயல்கள் தமிழகம் முழுவதும் அதிகரித்து விடும். உடனடியாக மாநகராட்சியிடம் புகார் பெற்று திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

வேந்தன்

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

வெள்ளி 28 ஜன 2022