மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 ஜன 2022

பெண்களுக்கான இடங்கள்: கனிமொழி கோரிக்கையை ஏற்ற ஸ்டாலின்

பெண்களுக்கான இடங்கள்: கனிமொழி கோரிக்கையை ஏற்ற ஸ்டாலின்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில்... ஆளும்கட்சியான திமுகவின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை காணொலி வாயிலாக நேற்று (ஜனவரி 27) கூட்டினார் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

கடந்த டிசம்பர் 18ஆம் தேதி கூட்டப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்... உள்ளாட்சித் தேர்தல் பற்றி சில முக்கியமான ஆலோசனைகளை, உத்தரவுகளை மாவட்டச் செயலாளர்களுக்குப் பிறப்பித்திருந்தார் ஸ்டாலின். ஒவ்வொரு வார்டுக்கும் 2 வேட்பாளர்களையும் மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மூன்று பெயர்களையும் பரிந்துரை செய்து, பட்டியல் அனுப்புமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அப்போது உத்தரவிட்டிருந்தார் ஸ்டாலின்.

இந்த நிலையில்தான் தேர்தல் அறிவிப்புக்குப் பின் நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்,

"நடைபெற இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் 100 சதவிகித வெற்றியைப் பெற்றாக வேண்டும். அதில் நான் உங்களை நம்பியே இருக்கிறேன்.

ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் ஆளுங்கட்சியான நாம் தலைமைப் பொறுப்புக்கு வந்தால்தான் அரசின் நலத் திட்டங்களை மக்களுக்கு விரைவாகவும் தடையின்றியும் கொண்டு சேர்க்க முடியும்.

இங்கே பேசியவர்கள் கடந்த 8 மாத கால ஆட்சியில் மக்கள் நம் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறினார்கள்.

அந்த நம்பிக்கையை, நற்பெயரை வெற்றியாக மாற்றுவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

இந்தத் தேர்தலின்போது நாம் முக்கியமான சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். கூட்டணி கட்சியினருக்கு எந்த வகையிலும் மனக்கசப்பை ஏற்படுத்தாமல் மாவட்டச் செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவர்களுக்கு வெற்றி வாய்ப்பான இடங்களைத் தேர்ந்தெடுத்து அங்கே போட்டியிட வாய்ப்பு வழங்கலாம்.

நாம் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டை இத்தேர்தலில் வழங்கியிருக்கிறோம். இதன் அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது நிர்வாகிகளின் மனைவிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதைவிட கட்சியில் இருக்கும் மகளிர் அணி நிர்வாகிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

மேலும் தேர்தல் காலத்தின்போது அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளிடம் ஆளும்கட்சியான நமது நிர்வாகிகள் கண்ணியத்தோடும் பொறுமையோடும் கவனத்தோடும் நடந்து கொள்ள வேண்டும்" என்ற ஸ்டாலின் தொடர்ந்து...

"டிசம்பர் 18ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வேட்பாளர்கள் பட்டியலை அனுப்புமாறு கேட்டிருந்தேன். ஆனால் 24 மாவட்டங்களில் இருந்து இன்னும் அந்தப் பட்டியல் வரவில்லை" என்று குறிப்பிட்டு அந்த 24 மாவட்டங்களின் பெயர்களை வாசித்தார்.

"இவர்கள் உடனடியாக பட்டியலை தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் ஒவ்வொருவருடைய செயல்பாடுகளையும் கண்காணித்து அதற்கான மதிப்பெண்களை நான் போட்டு வைத்திருக்கிறேன். எனவே மாவட்டச் செயலாளர்கள் பொறுப்போடும் கவனத்தோடும் கட்சிப் பணியாற்ற வேண்டும். இந்தத் தேர்தலில் 100 சதவிகித வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும்" என்று பேசிய ஸ்டாலின் பல மாவட்ட செயலாளர்களுடனும் அவர்களது மாவட்ட நிலைமையை பற்றி கலந்துரையாடினார்.

பெண்களுக்கான இடங்களில் மகளிர் அணிக்கு முன் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு கூட்டத்தில் மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி நன்றி தெரிவித்துக்கொண்டார். சமீப நாட்களாக உதயநிதிக்கும் கனிமொழிக்கும் தாங்கள் பொறுப்பு வகிக்கும் இளைஞர் அணி, மகளிரணி தொடர்பான நெருடல் இருந்து வரும் நிலையில்... பெண்களுக்கான உள்ளாட்சி அமைப்பு இடங்களில் மகளிர் அணி நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் கனிமொழி கோரிக்கை வைத்திருந்தார். அதை ஏற்று மாசெக்கள் கூட்டத்தில் இதைக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார் ஸ்டாலின்.

மகளிர் அணியினருக்கு போதிய இடங்கள் ஒதுக்கப்படுகிறதா என்பதை கண்காணித்து தனக்கு தகவல் அளிக்குமாறு நேற்று கூட்டம் முடிந்தவுடனேயே மகளிர் அணி நிர்வாகிகளிடம் வற்புறுத்தியுள்ளார் கனிமொழி.

-ஆரா

டிஜிட்டல் திண்ணை: நீயா, நானா? அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: நீயா, நானா?  அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!

ஸ்டாலின் மரியாதை: அழகிரி கண்ணீர்!

4 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் மரியாதை: அழகிரி கண்ணீர்!

பேரறிவாளன் போலவே 6 பேர் விடுதலை? காங்கிரஸுக்கு ஸ்டாலின் தரும் ...

4 நிமிட வாசிப்பு

பேரறிவாளன் போலவே 6 பேர் விடுதலை? காங்கிரஸுக்கு ஸ்டாலின் தரும் அடுத்த அதிர்ச்சி!

வெள்ளி 28 ஜன 2022