மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 ஜன 2022

சதிராட்டத்தின் ஒரே மூச்சு முத்துக்கண்ணம்மாள்

சதிராட்டத்தின் ஒரே மூச்சு முத்துக்கண்ணம்மாள்

பொட்டுக்கட்டி கோயில்களில் கடவுள்களுக்கு மனைவியாக்கப்பட்டவர்கள் தேவதாசிகள். தேவ என்றால் கடவுள், தாசி என்றால் சேவகர். கடவுளுக்குச் சேவை செய்பவர்கள்.

இவர்கள் கோயில்களில் வழிபாடு செய்து சதிர் நடனம் ஆடுவார்கள். சதிர் நடனம் என்பது இன்று உலகளவில் அறியப்படும் பரதநாட்டியத்திற்கு அடித்தளமாகும். அதாவது பரதநாட்டியத்துக்கு நட்டுவனார் என்கிற கலைஞர்கள் பாடும்போதுதான் ஆட முடியும், ஆனால் சதிர் என்பது பாடிக்கொண்டே ஆடுவது.

இப்படி பரதநாட்டியத்துக்கு அடித்தளமாக இருந்த சதிராட்டத்தைப் பற்றி இன்று எத்தனை பேருக்குத் தெரியும். அதோடு இன்று எண்ணி பார்க்கக்கூடிய அளவில் கூட சதிராட்டக் கலைஞர்கள் இல்லை. சமகாலத்தில் எஞ்சியிருக்கும் ஒரு சதிராட்டக் கலைஞர் என்றால் அது முத்துக்கண்ணம்மாள் தான்.

இவருடைய 7 வயதில் புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலையில் உள்ள சுப்பிரமணிய கோயிலில் பொட்டுக்கட்டி விடப்பட்டு தேவதாசிகளில் ஒருவராக இருந்து வருகிறார். அவருக்கு பொட்டுக்கட்டி விடப்படும் காலத்தில் அவருடன் 32 தேவரடியார்கள் இருந்தனர். ஆனால் தற்போது அந்த கலையின் ஒரே மூச்சாக இருப்பவர் முத்துக்கண்ணம்மாள்.

தனது அப்பா ராமச்சந்திர நட்டுவனாரிடம் இந்த நடனத்தைச் சிறு வயதில் கற்றுக்கொண்டார். இதற்காக அவர் அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து பயிற்சி எடுப்பார். தன்னுடைய இளமைக் காலத்தில் ஒரு நாளைக்கு இருமுறையாவது சுவாமிமலையில் ஏறிப் பாடி ஆடுவார். அதுபோன்று மாட்டுவண்டி கட்டிக்கொண்டோ, ரயிலில் பயணம் செய்தோ அல்லது கார் மூலமாகவோ தமிழகம் முழுவதும் மட்டுமின்றி கேரளாவுக்கும் சென்றும் சதிராட்டம் ஆடுவார். ஆனால் வயதாகிவிட்டதால் அவரால் முந்தைய வேகத்துக்கு ஆடமுடியாமல் போனதே தவிர அவரது நடனத்துக்கு இன்னும் இளமை குறையவில்லை.

எப்போதும் மஞ்சள் பூசிய சிரித்த முகம், மிளிரும் மூக்குத்தி, புன்னகை பூத்த முகத்துடன் காட்சியளிக்கும் முத்துக்கண்ணாம்மாளின் கைகள் சாதாரணமாகப் பேசும்போது கூட நளினமாடும்.

1947ஆம் ஆண்டு தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டாலும், முத்துக்கண்ணம்மாள் தான் நடனமாடுவதை விடவில்லை. சொல்லப்போனால் அவரது வீடியோக்களில், தன்னை அறியாமலே முத்துக்கண்ணம்மாள் பாடுவதையும், ஆடுவதையும் பார்க்க முடியும்.

இந்தச் சூழலில் அவருடைய 83 வயதில், அவரது கலை திறமைக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை அறிவித்திருக்கிறது.

விராலி மலை முருகனை முதல் கணவனாக ஏற்ற முத்துக்கண்ணம்மாள், பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது குறித்துக் கூறுகையில், “தாங்க முடியாத மகிழ்ச்சியாக இருக்கிறது. சுப்பிரமணி சுவாமி என்னைக் கைவிடவில்லை” என்று அளவற்ற மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட நிலையில், ஊடகங்கள் முத்துக்கண்ணம்மாவிடம் பேட்டி எடுக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்தச் சூழலில் முத்துக்கண்ணமாளின் கோரிக்கை, அவருக்கு அளிக்கப்படும் மாத உதவித்தொகையை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்பதுதான். இது அவரது வறுமையை வெளிப்படுத்துகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பும் இதே கோரிக்கையை அவர் வைத்திருந்தார். 2018இல் தக்‌ஷிண சித்ரா வரலாற்றுக் காட்சியகத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், “அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் உதவிப் பணம் வளரவே இல்லை. மன்னர் இருந்தபோது நன்றாக இருந்த எங்களுக்கு இந்த நிலையை ஏற்படுத்தியது அரசாங்கம்தான்” என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து மின்னம்பலத்தில் சதிர் சிறக்கிறது, சதிர் கலைஞர்கள் தேய்கிறார்கள்! என்ற தலைப்பில் சிறப்புக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில் சதிர் ஆட்டமென்றால் என்னவென்று அவரே கூறியதை விரிவாக எழுதியிருந்தோம்.

தற்போது, தன்னோடு சதிர் நடனக் கலை முடிந்துவிடாமல் அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்ல அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் முத்துக்கண்ணமாளின் விருப்பமாக உள்ளது.

“சதிராட்டம் ஆடுவதற்கான வாய்ப்புகள் குறைந்து வரும் சூழலில், அதனை முத்துக்கண்ணம்மாளின் மகள் கண்ணாமணி கூட கற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ஏற்கனவே பாட்டியிடம் நேரம் கிடைக்கும்போது சதிர் நடனம் கற்றுக்கொள்ளும் அவரது பேத்திகள் தற்போது பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட நிலையில் சதிர் நடனம் கற்றுக்கொண்டு தாங்களும் ஆட இருப்பதாகச் சொல்லிருக்கிறார்கள்” என்று முத்துக்கண்ணம்மாளின் குடும்ப வட்டாரங்கள் கூறுகின்றன.

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வெள்ளி 28 ஜன 2022