மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 ஜன 2022

ரயில்வே தேர்வில் முறைகேடு: ரயிலுக்கு தீ வைப்பு!

ரயில்வே தேர்வில் முறைகேடு: ரயிலுக்கு தீ வைப்பு!

பீகாரில் ரயில்வே தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால், தேர்வை ரத்து செய்யக் கூறி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்வே வாரியம் சார்பில் தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்காக 2019ஆம் ஆண்டு நடக்க வேண்டிய போட்டித் தேர்வு கடந்தாண்டு ஏப்ரல், ஜூன் கால கட்டத்தில் ஆன்லைன் மூலமாக நடத்தி முடிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 15ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகள் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், மாணவர்களுக்கு இரண்டாம் நிலை தேர்வு நடைபெறும் என்று ரயில்வே வாரியம் அறிவித்தது.

இந்த அறிவிப்பு மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2019ஆம் ஆண்டு தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடும்போது ஒரு தேர்வு என்று அறிவித்துவிட்டு, தற்போது திடீரென இரண்டாம் நிலை தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிய மாணவர்கள், தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால், அதை ரத்து செய்யக் கோரி கடந்த இரண்டு நாட்களாக ரயில் நிலையங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல இடங்களில் ரயில் மறியல், ரயில்வே அலுவலகங்களை முற்றுகையிட்டு வந்தனர்.

தேர்வு முடிவுகளில் எந்த குளறுபடிகளும் இல்லை. தேர்வு அறிவிக்கும்போதே இரண்டு நிலைகளில் நடைபெறும் என்பதை குறிப்பிட்டிருந்தோம் என விளக்கமளித்துள்ள வாரியம், இதுபோன்று போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள், இனி வரும் காலங்களில் ரயில்வே பணியிட தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்படுவார்கள் என நேற்று எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் மூன்றாவது நாளாக நேற்று (ஜனவரி 26) பீகார் மாநிலம் கயாவில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் காவல் துறைக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாணவர்கள் போலீஸ் மீது கல் எறிந்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்து தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், மாணவர்களை போலீஸார் விரட்டி அடித்தனர். அப்போது கயா ரயில் நிலையத்தில் ஆளில்லாமல் நின்று கொண்டிருந்த ஷ்ரம்ஜீவி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் ரயில் பெட்டிகள் தீப்பற்றி எரிந்து அந்த பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதுபோன்று சீதாமர்ஹி, பக்சர், முசாபர்பூர், சாப்ரா, வைஷாலி ரயில் நிலையங்கள் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் ஏராளமான மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தின் எதிரொலியாக என்டிபிசி மற்றும் இரண்டாம் நிலை தேர்வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கயா காவல் கண்காணிப்பாளர் ஆதித்யா குமார் கூறுகையில், ”ரயிலுக்கு தீ வைத்தவர்களில் சிலரை அடையாளம் கண்டுள்ளோம். எங்களிடம் உள்ள வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் போராட்டக்காரர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தற்போது சூழல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அரசு பொருட்களை சேதப்படுத்தக் கூடாது என மாணவர்களை கேட்டுக் கொள்கிறோம். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளோம். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "தேர்வெழுதியவர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளக் கூடாது. தேர்வெழுதியவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும். போராட்டக்காரர்கள் ரயில்களை சேதப்படுத்துவது, அவர்களுக்கு உரித்தான சொத்துகளைச் சேதப்படுத்துவதற்குச் சமமாகும். தேர்வர்களின் குறைகளைக் கேட்டு தீர்வு காண்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு வரும் பிப்ரவரி 16ஆம் தேதி வரை தேர்வர்கள் தங்களது குறைகளை எழுதி அனுப்பலாம். இதற்காக மின்னஞ்சல் முகவரி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது, மார்ச் 4ஆம் தேதிக்குள் மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு பரிந்துரைகள் அளிக்கும். அதனால் மாணவர்கள் இனி போராட்டங்களில் ஈடுபட வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

பாட்னா மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் மாணவ்ஜித் சிங் தில்லன், “இந்த சம்பவத்தில் 6 போட்டித் தேர்வு பயிற்சி மையங்களின் மீதும், அடையாளம் தெரியாத 150 பேரின் மீதும் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இதுவரை வன்முறையில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “தேர்வர்கள் மீதான அடக்குமுறை கண்டனத்துக்குரியது. இரண்டு தேர்வுகளிலும் தொடர்புடைய தேர்வர்களிடம் அரசு உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

-வினிதா

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

வியாழன் 27 ஜன 2022