மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 ஜன 2022

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம் அரசியலாகியுள்ள நிலையில் இன்று மதியம் முதல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையைக் கைது செய்ய வேண்டும் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தஞ்சை பள்ளி மாணவி மரணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காரணம், மாணவியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதில், ‘அந்த மாணவி தன்னை பள்ளி நிர்வாகம் மதமாற்றம் செய்யச் சொல்லி பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்தது’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இவ்விவகாரத்தைக் கையில் எடுத்த பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த 20ஆம் தேதி மாணவி பேசும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் மாணவியின் பேருடன் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, பள்ளி மாணவியை மத மாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியதாக எந்த தகவலும் இல்லை என்று தஞ்சை எஸ்.பி. விளக்கமளித்த நிலையில், மாணவியின் வீடியோவை குறிப்பிட்டு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதோடு நேற்று முன்தினம் (ஜனவரி 25)வள்ளுவர் கோட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மாணவிக்கு நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை பேசினார்.

இந்நிலையில் மாணவி தற்கொலை வழக்கில் மற்றொரு வீடியோ ஒன்று வெளியாகி புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், பள்ளிக்குத் தாமதமாகச் சென்றதால் ஹாஸ்டலில் உள்ள சிஸ்டர் சகாயமேரி கணக்கு வழக்கு பார்க்கச் சொன்னார். தாமதமாக வந்ததால் கணக்கு வழக்கு தனக்குப் புரியாது, பிறகு எழுதித் தருகிறேன் என்று தெரிவித்தேன். ஆனால் கணக்கு பார்த்து விட்டு பிறகு உன் வேலையைப் பார் என்று கட்டாயப்படுத்தினார்.

கணக்கு வழக்கு சரியாக எழுதிக் கொடுத்தாலும், தப்பாக உள்ளது என்று கூறி ஒரு மணி நேரம் உட்கார வைத்து விடுவார். இதனால் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியாததால், 12ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைந்து விடும் என்று நினைத்து விஷம் குடித்து விட்டேன்” என்று கூறுகிறார்.

அப்போது வீடியோ எடுப்பவர் உன்னைப் பொட்டு வைக்கக் கூடாது என ஹாஸ்டலில் இருந்தவர்கள் யாரேனும் சொன்னார்களா என்று கேட்க, அதற்கு இல்லை எனப் பதில் சொல்கிறார்.

முன்னதாக மதமாற்றம் செய்யச் சொன்னதாக ஒரு வீடியோ வெளியானது, தற்போது இப்படி ஒரு வீடியோ வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அண்ணாமலை மாணவியின் மரணத்தைத் தவறாகச் சித்தரிக்கிறார், மத பிரச்சினையைத் தூண்டுகிறார். மாணவியின் பெயர் மற்றும் முகம் மறைக்கப்படாமல் இருக்கும் வீடியோவை வெளியிட்ட அவர் மீது போக்சோ வழக்குப் பதிய வேண்டும் என்றெல்லாம் கூறி அவரைக் கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் இன்று மதியம் முதல் #ArrestAnnamalai என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்தச்சூழலில், மாணவி தற்கொலை விவகாரம் குறித்து நேரில் விசாரணை நடத்த நடிகை விஜய சாந்தி உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு தேசிய பாஜக சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தெலங்கானாவைச் சேர்ந்த நடிகை விஜய சாந்தி, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தியா ராய், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சித்திரா தை வாக் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த கீதா விவேகானந்தா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

-பிரியா

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

வியாழன் 27 ஜன 2022