மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 ஜன 2022

ஆர்பிஐ ஊழியர்களுக்கு எதிராகப் போராட்டம்: வருத்தம் தெரிவித்த இயக்குநர்!

ஆர்பிஐ ஊழியர்களுக்கு எதிராகப் போராட்டம்: வருத்தம் தெரிவித்த இயக்குநர்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு ரிசர்வ் வங்கி ஊழியர்கள் எழுந்து நிற்காததற்குக் கண்டனம் தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தங்களுடைய அதிகாரிகளின் செயல்பாட்டுக்காக ரிசர்வ் வங்கி வருத்தம் தெரிவித்துள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படும் போது எழுந்து நிற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று கடந்த ஆண்டு இறுதியில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் நேற்று சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், வங்கி ஊழியர்கள் சிலர் எழுந்து நிற்கவில்லை.

இதனை எதிர்த்துக் கேட்ட பத்திரிகையாளர்களுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வங்கி ஊழியர்களின் செயல்பாடுகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதுபோன்று தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணியளவில் அக்கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்த்தாயை அவமதித்த ரிசர்வ் வங்கி ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய போராட்டக்காரர்கள், தமிழக மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக மத்திய அரசு நடத்துவதாகவும் தெரிவித்தனர். தமிழக அரசின் ஆணையை அவமதிக்கும் ரிசர்வ் வங்கி ஊழியர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.

தொடர்ந்து வங்கியை முற்றுகையிடச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “ தமிழக அரசின் அரசாணையை மதிக்காத மத்திய அரசின் கீழ் செயல்படும் ரிசர்வ் வங்கி ஊழியர்கள், அதைத் தட்டிக்கேட்ட பத்திரிகையாளர்களை மிரட்டியிருக்கிறார்கள். இவர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது எங்கள் கட்சியின் துணை பொதுச்செயலாளர். வேணுகோபால் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், எழுந்து நிற்காத அதிகாரிகளைத் தொடர்ந்து பணி செய்ய மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.

எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இவ்வாறு நடந்துகொண்டதற்காக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பத்திரிகை வாயிலாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், சம்மந்தப்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை செய்வதைத் தடுக்கும் விதமாக வங்கி இழுத்துப் பூட்டப்படும்.

அதிகாரத் திமிரோடு பேசிய அதிகாரிகள் சிறைபிடிக்கப்படுவார்கள். மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கம் செலுத்தும் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழக ஊர்திகளைப் புறக்கணித்ததற்கும், தமிழ்நாட்டு விடுதலை போராட்டத்திற்கு வித்திட்ட தலைவர்களை யாரென்று கேட்பதற்கும், நீங்கள் யார் என மத்திய அரசை நோக்கிக் கேட்டிருக்கிறார். இது மக்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அரசு.

நாங்கள் கொடுக்கும் ஜிஎஸ்டி வரியின் மூலமாக ஊதியம் வாங்கத் தகுதியற்றவர்கள் இந்த ஊழியர்கள். இன்றே இவர்களைக் கைது செய்ய வேண்டும். தமிழர்களை இரண்டாம் தர மக்களாக நடத்துவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.

குடியரசு வாகன ஊர்தியை அனுமதிக்கவில்லை, சட்டமன்ற சட்டங்களையும் ஏற்றுக்கொண்டு அனுமதிப்பதில்லை, கட்சத்தீவு, மேகதாது என அனைத்திலும் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோக செய்கிறதும் என்று குறிப்பிட்டார்.

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காத விவகாரம் பூதாகரமான நிலையில், ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சாமி , தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகரானை நேரில் சந்தித்து வங்கி அதிகாரிகளின் செயலுக்காக வருத்தம் தெரிவித்தார்.

-பிரியா

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

வியாழன் 27 ஜன 2022