மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 ஜன 2022

ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்!

ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்!

குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது சென்னை ரிசர்வ் வங்கி அலுவலக அதிகாரிகள் எழுந்து நிற்காததற்குக் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

நேற்று நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அதுபோன்று சென்னை பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திலும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம் என்.சாமி தேசியக் கொடி ஏற்றி உரையாற்றினார். இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது ரிசர்வ் வங்கியின் அதிகாரிகளில் ஒரு சிலர் எழுந்து நிற்கவில்லை.

இதனால் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் சிலர் இதுகுறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ள நிலையில் ஏன் எழுந்து நிற்கவில்லை என்று அவர்களிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு வங்கி அதிகாரிகள் சிலர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றம் கூறியிருப்பதாகப் பதிலளித்தனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இனி தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்பது உறுதி செய்யப்படும் என்று உயரதிகாரிகள் தெரிவித்ததையடுத்து வாக்குவாதம் முடிவுக்கு வந்தது.

இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு அரசாணையைக்கூட படித்து தெரிந்து கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும். இவர்கள் தமிழக அரசை விட மேம்பட்டவர்களா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க மறுப்பது விதி மீறல் மட்டுமல்ல; மாநிலத்தின் தாய்மொழியை அவமதிப்பதாகும். இது கண்டனத்திற்குரியது” என்று தெரிவித்துள்ளது.

அதுபோன்று பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, “அரசு உத்தரவுப்படி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது யாராக இருந்தாலும் எழுந்து நிற்க வேண்டியது கட்டாயம். தேவையில்லாத வாதங்களை முன்வைத்து நம் தாய்க்கு ஒப்பான தமிழ்மொழியின் மரியாதையைக் குறைக்க யாரும் முயற்சி செய்ய வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு எதிராக இன்று காலை 11 மணியளவில் ரிசர்வ் வங்கி முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் அறிவித்துள்ளார்.

இந்தச் சூழலில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாநில அளவிலான வங்கியாளர் குழுக்களின் சிறப்புக் கூட்டம் நடைபெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது வருத்தமளிக்கிறது. இந்த பிரச்சினையை கவனித்து அதில் உள்ள குழப்பங்களைத் தீர்ப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

-பிரியா

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா? ...

4 நிமிட வாசிப்பு

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா?  ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கேள்வி

வியாழன் 27 ஜன 2022