மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 ஜன 2022

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

தஞ்சை பள்ளி மாணவி கட்டாய மதமாற்றத்தினால்தான் உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக குற்றம் சாட்டி வருவதுடன், போராட்டங்களையும் நடத்தி வருகிறது.

நேற்று(ஜனவரி 25) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், எச்.ராஜா,சி.பி ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய எம்.எல்.ஏ.நயினார் நாகேந்திரன்,”அதிமுக எங்களது கூட்டணியில் இருக்கிறது, இல்லை என்பது இரண்டாவது விஷயம். சட்டமன்றத்தில் தைரியமாக ஒரு ஆண்மையோடு, முதுகெலும்போடு பேசக்கூடிய அதிமுகவினர் ஒருவரை கூட பார்க்க முடியவில்லை. அதிமுக எதிர்கட்சி இல்லை. சட்டமன்றத்தில் பேசாமல் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இல்லாமல் இருந்தாலும் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே” என்று பேசியிருந்தார்.

இவரின் பேச்சு அதிமுக பாஜக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. அதிமுகவினர், நயினார் நாகேந்திரனுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதனுடன், இதற்கு மேலும் பாஜகவுடனான கூட்டணி அவசியம்தானா? என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி உள்பட பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து எம்.எல்.ஏ.நயினார் நாகேந்திரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,” இன்று(நேற்று) வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின்போது , அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் கூறிய கருத்துக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை. போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம்” என்று விளக்கமளித்துள்ளார்.

இதற்கிடையில், அரியலூர் மாணவி மரணத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா" என்று பாடிய கவிமணி தேசிக விநாயகம் அவர்கள் பிறந்த தமிழ் மண்ணில், "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்று பாடிய மகாகவி பாரதியார் பிறந்த தமிழ்நாட்டில், கடந்த எட்டு மாதங்களாக பெண்கள், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் பெண் குழந்தைகள் பாலியல் உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகி வருவது தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த எட்டு மாத காலமாக பாலியல் புகார் காரணமாக ஆசிரியர்கள் கைது செய்யப்படுவது, பாலியல் தொந்தரவால் பாதிக்கப்படுபவர்கள் உயிரிழப்பது, பள்ளியில் தீயில் கருகிய நிலையில் பத்து வயது சிறுமி மர்மமான முறையில் இறப்பது என தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருகின்றன.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல் பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளி என்னும் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த நிலையில் விடுதிக் காப்பாளர் அளித்த துன்புறுத்தலால் மன உளைச்சல் ஏற்பட்டு களைக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி ஆற்றொணாத் துயரத்தையும், மிகுந்த மன வேதனையையும் எனக்கு அளித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

“பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ ஒரு பிரச்சனை இருக்கிறது. என்றால் அதைத் துணிவுடன் பெற்றோர்களிடத்திலோ அல்லது பள்ளி நிர்வாகத்திடமோ தெரிவித்து அந்தப் பிரச்சனையிலிருந்து வெளிவர முயற்சிக்க வேண்டுமே தவிர, இதுபோன்று உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. உயிரை மாய்த்துக் கொள்ளுதல் என்பது பிரச்சனைக்கு தீர்வாக அமையாது. எனவே உயிரை மாய்த்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டம் என்று மாணவ மாணவியரை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறிய அவர்,

”மாணவி இறப்பதற்கு ஒருநாள் முன்பு நீதிபதி முன் அளித்த வாக்குமூலத்தில் விடுதிக் காப்பாளர் தன்னை வீட்டிற்கு அனுப்பாமல் கணக்குகளை பராமரிக்கச் சொன்னதாகவும், மறுத்தால் திட்டுவார் என்றும், விடுதியில் எதாவது பொருள் காணாமல் போனாலும் அதற்கு தான்தான் காரணம் என்று கூறி திட்டுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயத்தில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருடைய உறவினர் விசாரித்தபோது மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதாக அந்த மாணவி குறிப்பிட்டதாகவும், இதற்கான வீடியோ இருப்பதாகவும் ஒரு தரப்பு கூறுகிறது. ஆனால், அரசுத் தரப்போ மாணவி தற்கொலைக்கும், மத மாற்றத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறுகிறது. மற்றொரு தரப்பு கழிவறைகளை சுத்தம் செய்தல், விடுதிகளை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை பள்ளி நிர்வாகம் அளித்ததே இந்தத் தற்கொலைக்குக் காரணம் என்று கூறுகிறது. காரணம் எதுவாக இருந்தாலும் மாணவி இறந்ததற்கு பள்ளி நிர்வாகம் செய்த தவறுதான் காரணம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இது கடும் கண்டனத்திற்குரியது.

மேற்படி சிறுமியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அதனால் முதல்வர் இதில் தனிகவனம் செலுத்தி, அரசியலுக்கு அப்பாற்பட்டு, காரணமானவர்கள் யார் என்பதை விரைந்து கண்டுபிடித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 இலட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

பல்வேறு தலைவர்களும் மாணவி மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், “தஞ்சை பள்ளி மாணவியின் மரணத்தில் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும். மாணவியை மதம் மாற வற்புறுத்தியது தெரியவந்தால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபகாலமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

எந்தப் பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது என்பதை மாணவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். மாணவச் செல்வங்களே, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தை கைவிட்டு, பிரச்சினைகளை துணிந்து எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். மாணவி தற்கொலை விவகாரத்தில் தண்டனைக்குரியவர்கள் யார் என்பதை தமிழக அரசு உடனடியாக கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

“கல்விக் கூடங்களில் நிகழும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது வைக்கப்போகிறோம்? அரியலூர் மாணவியின் மரணத்திற்குப் பொறுப்பேற்கப் போவது யார்?

அரியலூர் மாணவியின் தற்கொலைக்கான உண்மையான காரணம் நேர்மையான துரிதமான விசாரணையின் மூலமாக வெளிப்படுத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். நமது கண்மணிகளைக் காக்க நாம் என்னென்ன முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளப் போகிறோம் என்பதை யோசித்து ஆக்கபூர்வமாக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

-வினிதா

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

புதன் 26 ஜன 2022