மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 ஜன 2022

ராஜேந்திரபாலாஜி : காக்கும் எடப்பாடி - கைபிசையும் பன்னீர்

ராஜேந்திரபாலாஜி : காக்கும் எடப்பாடி - கைபிசையும் பன்னீர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அதிமுக வேகமாக தயாராகி கொண்டிருக்கிறது.

அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பொங்கலை ஒட்டி கட்சியின் மாவட்ட செயலாளர்களான முன்னாள் அமைச்சர்களிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.

அப்போது,"நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு குறிப்பிடத்தக்க வெற்றி வாய்ப்பு இருக்கிறது. திமுக ஆட்சியில் அவர்கள் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்ற வில்லை. நாம் கடந்த வருடம் பொங்கலுக்கு ரொக்கப் பணம் கொடுத்தோம். ஆனால் இந்த வருடம் பொங்கலுக்கு ரொக்கப் பணம் வழங்கவில்லை. மேலும் திமுக அரசு கொடுத்த பொங்கல் பரிசுப் பொருட்களும் தரமாக இல்லை என்று மக்களே குற்றம்சாட்டுகிறார்கள். இதையெல்லாம் முன்வைத்து நாம் தீவிரமாக பிரச்சாரம் செய்ய வேண்டும். இதோடு மட்டுமில்லாமல் முன்னாள் அமைச்சர்களான நீங்கள் தாராளமாக செலவு செய்ய வேண்டும்" என்று எடப்பாடி அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் வீரவணக்க நாளை ஒட்டி அதிமுகவின் பல்வேறு மாவட்ட செயலாளர்களும் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த வகையில் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி திருத்தங்கல் பகுதியில் உள்ள தனது வீட்டிலேயே வீரவணக்க நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியை ஒட்டி மாவட்ட நிர்வாகிகளும் அங்கு வந்திருந்தனர்.

கடந்த சில நாட்களாகவே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள் மாவட்ட செயலாளராக இருக்கக்கூடிய ராஜேந்திர பாலாஜியை அவரது வீட்டில் சென்று சந்தித்து வந்தனர்.

இந்தப் பின்னணியில் நேற்று தன்னை சந்தித்த நிர்வாகிகளிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, ' உள்ளாட்சித் தேர்தலில் போட்டி போட விரும்புவார்கள் என்னிடம் பணத்தை எதிர்பார்க்காதீர்கள். நான் தற்போது மிகவும் நொந்து போய் இருக்கிறேன். எனது சூழல் உங்களுக்கு தெரியும். அதனால் சூழ்நிலையைப் பொறுத்து பிரச்சாரம் செய்ய வருகிறேன். மற்றபடி தேர்தல் செலவுகளை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள்' என்று கூறியிருக்கிறார்.

இதைக் கேட்ட நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து வெளியே சென்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நம்மிடம் பேசிய விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சிலர், "ராஜேந்திர பாலாஜி பண மோசடி குற்றச்சாட்டில் இரண்டு வாரத்துக்கு மேலாக தலைமறைவாக இருந்து கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தினார். அதன் பின் அவர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்து வீட்டிலேயே இருக்கிறார்.

ராஜேந்திர பாலாஜிக்கு இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆதரவாக இருக்கிறார் என்று தெரிகிறது.

இவ்வளவு நடந்தும் மாவட்டச் செயலாளரான ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்காமல்... தன் சார்பாக ஒரு குழுவை ராஜேந்திர பாலாஜியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார் எடப்பாடி பழனிசாமி. எனவே ராஜேந்திர பாலாஜி மீது புகார் தெரிவித்து கடிதம் அனுப்பினால் கடிதம் அனுப்பியவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சூழல் தற்போது நிலவுகிறது.

இந்த தைரியத்தில் தான், தான் செலவு செய்ய இயலாது என்றும், தேர்தலில் நிற்பவர்கள் தாங்களே செலவு செய்யவேண்டும் என்றும் ராஜேந்திர பாலாஜி கூறுகிறார். இவர் பிரச்சாரத்துக்கு வந்தாலே அதிமுக வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று எங்களுக்குத் தகவல்கள் வருகின்றன. இதையெல்லாம் எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளவில்லை.

ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்த போதிலிருந்தே ஓ. பன்னீர்செல்வம் அவரை சற்று எச்சரித்தபடியே இருந்தார். முதல்வர் வேட்பாளர் யார் என்று கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் அதிமுகவுக்குள் விவாதம் வெடித்தபோது... எடப்பாடியை முன்னிறுத்தி தான் தேர்தலை சந்திப்போம் என்று அழுத்தம் திருத்தமாக கூறியவர் ராஜேந்திர பாலாஜி. அதனால்தான் இப்போதும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு ராஜேந்திர பாலாஜிக்கு இருக்கிறது. இதையெல்லாம் ஓ. பன்னீர்செல்வம் அறிந்துதான் இருக்கிறார்.

ஆனால் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் அவரால் எடப்பாடி பழனிசாமியை மீறி ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. எடப்பாடி க்கும் ராஜேந்திர பாலாஜிக்கும் அரசியலை தாண்டிய பொருளாதார தொடர்புகள் பலமாக இருப்பதாக ஓ பன்னீர் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார். இந்தப் பின்னணியில் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி முன்வராவிட்டால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை இப்போதே சொல்லிவிடலாம்" என்கிறார்கள் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள்.

ராஜேந்திர பாலாஜி பிரச்சனையை அடிப்படையாக கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும்

இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வருவதாக தெரிகிறது.

-வேந்தன்

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

புதன் 26 ஜன 2022