மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 ஜன 2022

இனியும் இது தொடரக் கூடாது: உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் நீதிமன்றம்!

இனியும் இது தொடரக் கூடாது: உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் நீதிமன்றம்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் இவ்வழக்கை நிலுவையில் வைத்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரி ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் நக்கீரன் உட்பட பலரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த இரண்டு நாட்களாகப் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நடைபெற்றது.

‘கொரோனா பரவலைக் கருத்தில்கொண்டு தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். தினம்தோறும் 25 ஆயிரம் என்ற அளவில் தொற்று உறுதி செய்யப்படுவதாகச் சுகாதாரத் துறை அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 15 நாட்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 மடங்காக அதிகரித்துள்ளது. இதுபோன்ற சமயத்தில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பதன்மூலம் வேட்பாளர்கள் மட்டுமல்ல வாக்காளர்களும் பாதிக்கப்படுவர்.

தொற்று பரவலைப் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்த தற்போது உகந்த நேரம் அல்ல. அரசியல் சாசனத்தின்படி பொதுச் சுகாதாரத்தைப் பேணுவது அரசின் கடமையாகும். ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் தேர்தல் நடத்தாத நிலையில், தற்போது தேர்தல் நடத்த அவசரம் இல்லை. கொரோனா மூன்றாம் அலை தணியும் வரை காத்திருக்கலாம். திருமணம் இறுதிச் சடங்குகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற வேண்டிய கிராமசபைக் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன’ என்று மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது.

அதுமட்டுமின்றி மாற்றுத்திறனாளிகள், முதியோர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொதுத்தேர்தலில் பங்கேற்க வழிவகை செய்யப்படுகிறது. ஆனால் இதுபோன்ற வழிமுறைகள் உள்ளாட்சித் தேர்தலில் இல்லை என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தப் போவதாகத் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகச் சென்னை உயர் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

மேலும், அரசியல் சட்டத்தைப் பின்பற்றத் தவறியதால் தான் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட தேதியில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து அறிவிக்கப்படாவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். எனவே தேர்தலை ஒத்தி வைக்க உத்தரவிட முடியாது.

மருத்துவமனைகளில் இரண்டு சதவிகிதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரச்சாரத்துக்குப் போகும் வேட்பாளர்கள் மூன்று பேருக்கு மேல் போகக்கூடாது என்று கொரோனா நோய்த்தடுப்பு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றும் கூறினர்.

இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், நீதிமன்ற உத்தரவின்படி மாநில அரசு செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதுபோன்று மாநில தேர்தல் ஆணையம் சார்பில், தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாகவும், அரசின் நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் மாநில அரசுடன் கலந்து பேசிய பின்னர் தான் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நான்கு மாதங்களில் தேர்தல் நடத்த வேண்டும் என்று 2021 செப்டம்பர் 27 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மாநில தேர்தல் ஆணையம் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதித்துறை ஒழுங்குபடி உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உத்தரவு பிறப்பிக்க முடியாது.

மனுதாரர்கள் வேண்டுமானால் உச்ச நீதிமன்றத்தை அணுகித் தேர்தலை ஒத்திவைக்கக் கேட்கலாம். ஆனால் மாநில தேர்தல் ஆணையம்தான் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்று கூறினர்.

மேலும், வேட்பாளர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளதைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டால் நீதிமன்றத்தை நாடலாம்.

அரசியல் சாசன விதிகளைத் தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்புகள் புறக்கணிக்கக் கூடாது. இந்த வழக்கை முடித்து வைக்காமல் நிலுவையில் வைத்திருக்கிறோம். விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்கப்படும்.

கொரோனா பரவலைக் காரணம் காட்டி தேர்தலை ஒத்தி வைக்கக் கூடாது என்ற அரசின் நிலைபாடு பாராட்டிற்குரியது” என்று தெரிவித்தனர்.

அதுபோன்று, 5 ஆண்டுகளுக்கு மேல் தேர்தல் நடத்தப்படவில்லை. அது தொடரக் கூடாது என்று அறிவுறுத்திய நீதிபதிகள், தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட 10 நாட்களுக்குப் பின் இதுதொடர்பான வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.

-பிரியா

டெல்லி பயணம்: பன்னீரின் அடுத்த திட்டம்!

3 நிமிட வாசிப்பு

டெல்லி பயணம்:  பன்னீரின் அடுத்த திட்டம்!

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட ...

7 நிமிட வாசிப்பு

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட அறப்போர்!

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ...

3 நிமிட வாசிப்பு

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ட்விஸ்ட்!

செவ்வாய் 25 ஜன 2022