மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 ஜன 2022

குடியரசு தின விழா: சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

குடியரசு தின விழா: சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

நாடு முழுவதும் நாளை 73ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெறும். ஆனால், இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக அனைத்து கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று அரசு துறைகளின் அலங்கார ஊர்தி அணிவகுப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவின்போது, டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகள் உட்பட நான்கு அலங்கார ஊர்திகள் மட்டும் அணிவகுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தையொட்டி அசாம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். சென்னை காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் 10,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும் மெரினா காமராஜர் சாலையில் 5 அடுக்கு பாதுகாப்புடன், சுமார் 2,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். இது தவிர சென்னையின் மற்ற இடங்களில் 6,800 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல், கடற்கரை, எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், தாம்பரம், காட்பாடி, அரக்கோணம், திண்டிவனம், திருவள்ளூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் 2,000 ரயில்வே பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு வழக்கத்தை விட குடியரசு தின விழாவுக்காக கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நெல்லை புறநகர் மாவட்டத்தில் 1,500 போலீஸாரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2,000 போலீஸாரும், தென்காசி மாவட்டத்தில் 1,500 போலீஸாரும், நெல்லை மாநகர பகுதியில் 500 போலீஸாரும் என மொத்தம் 5,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

அதுபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,200 போலீஸாரும், நீலகிரி மாவட்டத்தில் 500 போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். மாவட்டங்களில் முக்கிய இடங்கள் கண்காணிப்பில் இருந்து வருகின்றன.

பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதுடன், வெடிகுண்டு தடுப்பு மெட்டல் டிடெக்டர் கருவிகளைக் கொண்டு பாலம் முழுவதும் கண்காணித்து வருகின்றனர்.

ரயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்களில் தொடர் சோதனை மற்றும் கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் மட்டும் 27,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். நாட்டின் எல்லைகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

-வினிதா

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

7 நிமிட வாசிப்பு

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு  தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

3 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

செவ்வாய் 25 ஜன 2022