மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 24 ஜன 2022

மாணவி தற்கொலை: வீடியோ பதிவு செய்தவர் ஆஜராக உத்தரவு!

மாணவி தற்கொலை: வீடியோ பதிவு செய்தவர் ஆஜராக உத்தரவு!

தஞ்சை பள்ளி மாணவியின் வீடியோவை பதிவு செய்தவரை நாளை நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில் பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வந்தாலும், மாணவியின் மரணத்துக்கு உண்மையான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். விடுதி வார்டன் சகாயமேரி, நிர்வாகி ராக்லின்மேரி மற்றும் பள்ளித் தலைமையாசிரியர் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை கடந்த சனிக்கிழமையன்று(ஜனவரி 22) விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக் கொண்டு அடக்கம் செய்ய வேண்டும். தஞ்சாவூரில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர் முன்னிலையில் மாணவியின் பெற்றோர் ஆஜராகி தங்களது வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும். அந்த வாக்குமூலத்தை மூடி சீலிடப்பட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தார்.

மீண்டும் இவ்வழக்கு இன்று(ஜனவரி 24) நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முருகானந்தம் அவரது மனைவி ஆகியோரிடம் தஞ்சை மூன்றாவது நீதித்துறை நடுவர் பெற்ற ரகசிய வாக்குமூலத்தின் நகல் நீதிபதியிடம் வழங்கப்பட்டது.

இதையடுத்து பேசிய நீதிபதி,”மனுதாரரின் மகள் இறப்பதற்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுத்ததாகக் கூறப்படும் வீடியோ பதிவில், தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியதாக கூறியுள்ளார். அந்த வீடியோ பதிவில் உள்ளது மாணவியின் உண்மையான குரல் தானா?, வீடியோ உண்மையானது தானா? என்பது குறித்து தடயவியல் பரிசோதனையில் உறுதிபடுத்த வேண்டியுள்ளது.

அதனால் அந்த வீடியோவை பதிவு செய்த முத்துவேல் என்பவர் நாளை காலை 10 மணிக்கு வல்லம் முகாம் அலுவலகத்தில் டிஎஸ்பி பிருந்தா முன்பு ஆஜராகி, வீடியோ எடுத்த செல்போனை ஒப்படைக்க வேண்டும். அதனை சென்னையிலுள்ள தடயவியல் பரிசோதனை மையத்துக்கு நாளையே டிஎஸ்பி அனுப்பி வைக்க வேண்டும். தடயவியல் மைய இயக்குநர் செல்போனை ஆய்வு செய்து உண்மைத் தன்மை குறித்து அதே நாளில் அறிக்கை அளிக்க வேண்டும்.

மாணவியின் உடற்கூராய்வு அறிக்கையை தஞ்சாவூர் தடயவியல் ஆய்வு மைய அலுவலர் ஜனவரி 27 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மாணவியின் பெற்றோரும் நாளை காலை டிஎஸ்பி பிருந்தா முன்பு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 28க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக அண்ணாமலை, "பாஜக எப்பொழுதும் ட எந்த ஒரு மரணத்தையும் வைத்து இதுவரை அரசியல் செய்தது கிடையாது. எங்கள் டிஎன்ஏவிலும் அப்படியில்லை. மாணவி தற்கொலை விவகாரத்தில், அவரது மரண வாக்குமூல வீடியோவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. அந்த வீடியோவை பதிவு செய்த நபரை நாளை காலை நீதிமன்றத்தில் ஆஜராகவும், செல்போனை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அப்படி இருக்கையில், மாணவி விவகாரத்தில் மதமாற்றம் எதுவும் இல்லை என்று கூறுவதற்கு காவல்துறைக்கும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கும் அவ்வளவு அவசரம் எதற்கு? அவசரப்படும்போதே தெரிகிறது, எதையோ மூடி மறைக்க முயற்சி செய்கிறார்கள் என்று. எந்தவொரு மதத்துக்கும் பாஜக எதிரானது அல்ல. இந்த விஷயத்தில் விலைமதிக்க முடியாத உயிர் பறிபோயிருக்கிறது. அதற்கு நியாயம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள் என மக்கள் முடிவு செய்வார்கள்” என்று கூறினார்.

-வினிதா

வேல்முருகனுக்கு வீசிய வலை: பாஜகவில் இணைந்த முன்னாள் மனைவி!

4 நிமிட வாசிப்பு

வேல்முருகனுக்கு வீசிய வலை: பாஜகவில் இணைந்த முன்னாள் மனைவி!

ரெய்டு நடக்கும் நேரம்: சுட்டிக்காட்டும் ப.சிதம்பரம்

4 நிமிட வாசிப்பு

ரெய்டு நடக்கும் நேரம்: சுட்டிக்காட்டும் ப.சிதம்பரம்

ஹிஜாப்பை கழற்றச் சொன்ன தேர்வு அதிகாரி: நடந்தது என்ன?

5 நிமிட வாசிப்பு

ஹிஜாப்பை கழற்றச் சொன்ன தேர்வு அதிகாரி: நடந்தது என்ன?

திங்கள் 24 ஜன 2022