ஐஏஎஸ் பணி விதிகளில் திருத்தம்: எதிர்க்கும் மாநிலங்கள்!

politics

ஐஏஎஸ் அதிகாரிகளை ஒன்றிய பணிக்கு இடமாற்றம் செய்யும் வகையில் ஐஏஎஸ் விதிகள் 1954இல் திருத்தங்கள் மேற்கொள்ள ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954 விதி 6இன் படி மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை ஒன்றிய அரசுப் பணிகளுக்கு மாற்ற வேண்டுமானால் அதற்கு மாநில அரசின் சம்மதம் வேண்டும்.

ஆனால் தற்போது மாநில அரசு ஒப்புதல் இல்லாமலேயே ஒன்றிய அரசு இந்த அதிகாரிகளை ஒன்றிய அரசுப்பணிக்கு அழைத்துக் கொள்ளும் வகையில் 1954 விதி 6இல் திருத்தம் மேற்கொள்ளவுள்ளது.

இதற்கு பல்வேறு மாநிலங்களின் அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக ஏற்கனவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த விதிகளில் மாற்றம் செய்யக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார்.

நேற்று (ஜனவரி 23) தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார்.

அதில், சமீபத்தில் ஒன்றிய அரசு அகில இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954இல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது.

ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் ஒரு இணக்கமான சூழ்நிலைக்கு இந்தத் திருத்தங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஒன்றிய அரசின் வசம் அதிகாரக் குவிப்பிற்கு வழிவகுக்கும்” எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர், “ஆட்சிப் பணி அதிகாரிகளின் பணிச்சூழலை நிர்வகிப்பது குறித்த ஒன்றிய அரசின் தவறான அணுகுமுறைகள் காரணமாக ஏற்கனவே மாநில அரசுகளில் குறிப்பிட்ட சில முதுநிலைகளில் போதுமான எண்ணிக்கையில் அலுவலர்கள் இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது.

ஒன்றிய குரூப்-1 நிலை அலுவலர்கள் மூலமாகவும், வெளிச் சந்தையிலிருந்து வல்லுநர்களைத் தேர்வு செய்யும் (Lateral entry) முறை மூலமாகவும் ஒன்றிய அரசு தனது தேவையை நிறைவு செய்து கொள்ளும் சூழ்நிலையில் மாநில அரசு முழுக்க முழுக்க தன்னுடைய நிர்வாகத் தேவைகளுக்குக் குறைவான எண்ணிக்கையில் உள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைச் சார்ந்துள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாநில அரசில் பணிபுரியும் அதிகாரிகளை ஒன்றிய அரசுப் பணிக்கு அனுப்ப வற்புறுத்துவது, ஏற்கனவே போதுமான எண்ணிக்கைக் குறைபாடுள்ள நிலையில் நிர்வாகத்தில் ஒரு தொய்வு நிலையை ஏற்படுத்திவிடும் என்று கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், “ஒன்றிய அரசு வெளிச் சந்தையிலிருந்து வல்லுநர்களைத் தேர்வு செய்திடும் முறை ஒன்றிய அரசுப் பணிக்குச் செல்ல விரும்பும் அலுவலர்களின் ஆர்வத்தையும் ஏற்கனவே குறைத்துள்ளது.

உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத் திருத்தத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவின்படி சம்பந்தப்பட்ட அலுவலரின் விருப்பம் மற்றும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஒன்றிய அரசின் பணிக்கு மாற்ற முடியும் எனும் நிலை இந்தியாவின் எஃகு கட்டமைப்பு என்று அழைக்கப்படும் அரசுப் பணி நிர்வாகத்திற்கு ஒரு நிலையற்ற தன்மையையும், அலுவலர்களிடையே பணி ஆர்வத்தையும் குறைக்கும்

இதனைச் செயல்படுத்தினால் அகில இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் ஒரு நிரந்தர அச்ச உணர்வுடன் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இது தற்போது வளர்ச்சிப் பாதையில் செல்ல விரும்பும் நம்முடைய நாட்டிற்கு உகந்ததல்ல.

குடிமைப்பணி அலுவலர்கள் அரசியல் சார்புத்தன்மை இன்றியும், எவ்வித அச்ச உணர்வின்றியும் பணியாற்ற வேண்டும். ஆனால் உத்தேசிக்கப்பட்ட சட்டத் திருத்தங்கள் நிர்வாகக் கட்டமைப்பின் தன்மையையும் அதன் பணியாற்றும் செயல்திறனையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மாநிலங்களில் குடிமைப்பணி அதிகாரிகளின் பணிச்சூழலை நிர்வகிப்பதும் சிக்கலாக்கிவிடும்.

இவற்றினால் மாநில நிர்வாகமும் அதன் மூலம் தேச நலனும் கூட பாதிக்கப்படக்கூடும். புதிய சட்டத் திருத்தத்தின் விளைவுகள் அச்சமூட்டுவதாக உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் உரிய ஆலோசனை மேற்கொள்ளாமல் அவசரமாகச் சட்டத் திருத்தங்களை ஒன்றிய அரசு கொண்டு வர முயல்வது இந்தியக் கூட்டாட்சி தத்துவத்திற்கு மிகவும் எதிரானதாகும்.

இந்தத் திருத்தத்திற்குத் தொடர்புடைய இரண்டு அமைப்புகளான மாநில அரசுகளும், நிர்வாகக் கட்டமைப்பும் இதனை வரவேற்கவில்லை என்றும், ஏற்கனவே நடைமுறையிலுள்ள ஒரு ஏற்பாட்டினை மாநில அரசுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு எடுத்துக்கொள்வதும் கூட்டாட்சி அரசியல் அமைப்பிற்கு உகந்ததல்ல. இது கடந்த 75 ஆண்டுகளாகக் கவனமாக உருவாக்கப்பட்ட இந்த தேசத்தின் சித்தாந்தங்களை வலுவிழக்கச் செய்யும். எதனையும் அழிப்பது எளிது ஆனால் மறுகட்டமைப்பு செய்வது கடினமானது.

தாங்கள் இது குறித்து மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், நம்மால் கணிக்க இயலாத விளைவுகளை இது நிச்சயம் ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இந்தச்சூழலில் கேரள முதல்வரும் எதிர்ப்புத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்திய ஆட்சிப்பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவைக் கைவிட வேண்டும். விதிகளில் திருத்தம் கொண்டு வருவது கூட்டாட்சி த‌த்துவத்திற்கு எதிரானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *