மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 23 ஜன 2022

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

வைஃபை ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. ஊரடங்கு விசாரிப்புகளுக்குப் பின் மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆளும் திமுக, எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவற்றை விட கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி வேகமாகத் தயாராகிவிட்டது. உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுவிட்டார் கமல்ஹாசன். மேலும் ஒவ்வொரு நகரத்திலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஆலோசனைக் கூட்டங்களும், ஆய்வுக் கூட்டங்களும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில்தான் கடந்த 20 ஆம் தேதி இரவு சிறிது நேர முன்னறிவிப்புக்குப் பின் மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை காணொலியில் கூட்டியிருக்கிறார் கமல்ஹாசன்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நகர்ப்புறங்களில் கணிசமான ஓட்டுகளைப் பெற்றது. இது அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்தது. இந்த பின்னணியில் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தனக்கான தோதான களமாக கருதி முன்கூட்டியே சுறுசுறுப்பாக பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறார் கமல்ஹாசன்.

இந்த முடுக்குதலின் ஒரு பகுதியாகத்தான் மாவட்டச் செயலாளர்களை காணொலி முறையில் சந்தித்திருக்கிறார். அந்த கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசியிருக்கிறார்.

‘பெரிய கட்சிகள் என்று சொல்லக் கூடிய மற்ற கட்சிகளை விட நாம் நகர்ப்புற தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்கிவிட்டோம். நகர்ப்புற வாக்காளர்கள் விழிப்புணர்வு மிக்கவர்கள். ஏற்கனவே நமக்கு நகர்ப்புறங்களில் மக்கள் நம்பிக்கை வைத்து குறிப்பிடத் தக்க அளவில் வாக்களித்திருக்கிறார்கள். எனவே நாம் மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து பெறும் வகையில் ஒவ்வொரு நகரத்திலும் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

இதற்கு ஒவ்வொரு மாநகரத்தின், நகரத்தின், பேரூரின் ஒவ்வொரு வார்டிலும் நாம் போட்டியிட வேண்டும். திமுக, அதிமுக ஆகியவை சரியாக செயல்பட்டிருந்தால் நாம் தனியாக கட்சி ஆரம்பிக்க வேண்டிய அவசியமே கிடையாது. அவர்கள் சரியாக இல்லாததால்தான் நாம் தனியாக கட்சி ஆரம்பித்து மக்களிடமும் வரவேற்பைப் பெற ஆரம்பித்திருக்கிறோம். ஆனால் நம்மை விலை பேசி. வலை வீச அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அதுவும் உள்ளாட்சித் தேர்தலில் இந்த விலைபேசல்களும், வலைவீசல்களும் அதிகமாக நடக்கும். மக்கள் நீதி மய்யத்தின் சிப்பாய்களான நாம் அதற்கு இடம் கொடுத்துவிடக் கூடாது. நம் நேர்மையை யாரும் குறைத்து மதிப்பிட அனுமதிக்கக் கூடாது, நாம் விலை போய்விடக்கூடாது. நம்மை விட்டு அங்கே போனவர்களின் கதி என்ன என்பதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்’ என்று மாவட்டச் செயலாளர்களிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார் கமல்ஹாசன்.

இந்தக் கூட்டத்தில் பேசிய மாசெக்கள், ‘பெண்களுக்கு ஐம்பது சதவிகிதம் ஒதுக்கியிருப்பதால் வேட்பாளர்கள் கிடைக்க கஷ்டமாக இருக்கிறது. மற்ற கட்சிகளில் ஆண் நிர்வாகிகளின் மனைவிகள், குடும்பப் பெண்கள் பெண்களுக்கான ஒதுக்கீட்டில் நிற்கிறார்கள். நாம் அதுபோல செய்யலாமா?’ என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு கமல்ஹாசன், ‘நாம் அனைத்து வார்டுகளிலும் நிற்க வேண்டும். அவ்வளவுதான். நிர்வாகிகள் வீட்டுப் பெண்களும் நம் கட்சியினர்தானே பிறகென்ன யோசனை?’ என்று கேட்டிருக்கிறார்.

இந்தக் கூட்டத்துக்கு பிறகு பல மாசெக்களிடம் தனியாகவும் பேசியிருக்கிறார் கமல். குறிப்பாக கோவை மண்டல நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார், ‘மகேந்திரன் தான் நம் பலம் என்று ஒரு மாயையை சிலர் உண்டாக்கி வைத்திருந்தார்கள். அவர் கோவை மேயரை எதிர்பார்த்து திமுகவுக்குப் போனார். ஆனால் கோவை மேயர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் மகேந்திரன் தற்போது அதிருப்தி அடைந்திருப்பதாக கமலிடம் சொல்லியிருக்கிறார்கள் நிர்வாகிகள். அதைக் கேட்டு சிரித்திருக்கிறார் கமல். ஒவ்வொரு வார்டிலும் வேட்பாளர், அதுவும் விலை போகாத வேட்பாளர் என்பதே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கமலின் இலட்சியமாக இருக்கிறது”என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

ஞாயிறு 23 ஜன 2022