மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 ஜன 2022

விவசாயிகளுக்கு ரூ.97.92 கோடி நிவாரணம்!

விவசாயிகளுக்கு ரூ.97.92 கோடி நிவாரணம்!

வட கிழக்கு பருவ மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட விளை பயிர்களுக்கு நிவாரணமாக ரூ.97.92 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் பெய்த வட கிழக்கு பருவமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதையடுத்து குறுவை - கார்- சொர்ணவாரிப் பயிர்களுக்கு, ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் ஏக்கருக்கு ரூ.20,000 வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.

அதுபோன்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே நிவாரணம் வழங்கக் கோரி அதிமுக சார்பில் ஜனவரி 22ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த சூழலில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.97.92 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக பெரு கன மழை பெய்தது. முதற்கட்டமாக 25.10.21 முதல் 04.11.21 வரை பெய்த கனமழையால் டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதம் ஏற்பட்டது. இரண்டாவது கட்டமாக 07.11.2021 முதல் 11.11.2021 வரை பெய்த மழையால் வட மாவட்டங்களில் மிகுந்த பயிர் பாதிப்பு ஏற்பட்டது. மூன்றாவது கட்டமாக 17.11.21 முதல் 11.12.21 வரை மழை தொடர்ந்து நீடித்ததால் இதர மாவட்டங்களிலும் பயிர் சேதமடைந்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் 711.60 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. இது இயல்பை விட 59 சதவீதம் கூடுதலாகும்.

கனமழையினை தொடர்ந்து அமைச்சர்கள் குழு 12.11.2021 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதநிலையை ஆய்வு செய்து விவசாயிகளின் கருத்தைக் கேட்டறிந்தது. மேலும், முதலமைச்சர் 13.11.2021 அன்று டெல்டா மாவட்டங்களையும் 15.11.2021 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பயிர் சேத நிலையை நேரில் ஆய்வு செய்தார். இந்நிலையில் 16.11.2021 அன்று பயிர் சேதங்கள் குறித்த அறிக்கையினை அமைச்சர் பெருமக்கள் குழு பயிர் சேதங்கள் குறித்த அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது. முதல்வர் 16.11.2021 ஆம் தேதி வட கிழக்கு பருவ மழையால் சேதமடைந்த பயிர்களுக்குக் கீழ்க்கண்டவாறு நிவாரண நிதி உதவி வழங்கிட ஆணையிட்டார்.

கார் குறுவை சொர்ணவாரி பயிர்கள் முழுமையாகச் சேதமடைந்த இனங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடாக ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.20,000/- வழங்கிடவும் சம்பா பருவத்தில் நீரில் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை மறுசாகுபடி செய்திட ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.6038/-மதிப்பீட்டில் குறுகிய கால நெல் விதை, நுண்ணுட்ட உரம், யூரியா மற்றும் டிஏபி அடங்கிய இடுபொருட்கள் வழங்கிட முதல்வர் உத்தரவு பிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து பயிர்பாதிப்பு கணக்கெடுப்பின் அடிப்படையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சேதமடைந்த 4,44,988 ஏக்கர் பரப்பளவிற்குரிய 3,16,837 விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக ரூ.168 கோடியே 35 இலட்சம் முதல்வரால் விடுவிக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது வரை சேதமடைந்த வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணமாக ரூ.97.92 கோடி 2,23,788 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய விவசாயிகளுக்கு நிவாரண நிதி விடுவிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இரண்டு நாட்களில் வரவு வைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

-பிரியா

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

7 நிமிட வாசிப்பு

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு  தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

3 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

வெள்ளி 21 ஜன 2022