மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 ஜன 2022

மாணவி தற்கொலை: வாக்குமூலத்தில் மாணவி சொல்வது என்ன?

மாணவி தற்கொலை: வாக்குமூலத்தில் மாணவி சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் தஞ்சை பள்ளியில் படித்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் வடுகம்பாளையம் கீழத்தெருவைச் சேர்ந்த மாணவி ஒருவர், தஞ்சை திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். திடீரென்று மாணவி களைக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி கடந்த 18ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆரம்பத்தில் மாணவியின் உயிரிழப்புக்கு ஹாஸ்டல் வார்டனின் டார்ச்சர்தான் காரணம் என்று சொல்லப்பட்ட நிலையில், சமூகவலைதளங்களில் மருத்துவமனையில் இருந்தவாறு மாணவி பேசும் வீடியோ ஒன்று வெளியானது. அதில் யாரோ ஒருவர் மாணவியிடம் இதற்கு யார் காரணம்? என்று கேட்கிறார். அதற்கு மாணவி, தன்னுடைய பெயர், அப்பா பெயர் மற்றும் தன்னை கிறிஸ்டியன் மதத்துக்கு மாற கட்டாயப்படுத்துவதாகவும் கூறுகிறார். அதனால்தான் இப்படி செய்து கொண்டாயா என்று ஒருவர் கேட்கிறார். அவர் பேச முடியாமல் ஆமா என தலை ஆட்டுகிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்தது முதல், கட்டாய மதமாற்றம் காரணமாகத்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்ற உறுதியற்ற தகவல் காட்டுத் தீ போன்று பரவியது.

இந்த விஷயத்தை கையில் எடுத்த பாஜக தமிழ்நாட்டில் மதமாற்றம் தலைதூக்கிவிட்டது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “மதமாற்றம் தமிழகத்திலே வேகமாக பரவுகின்ற ஒரு விஷச்செடி. ஏழை மக்களை துன்புறுத்தி இது போன்ற காரியங்கள் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு மாநில அரசு கவனம் கொடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். மாணவியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தஞ்சை எஸ்.பி ரவளிபிரியா,” போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மதம் மாறுமாறு கட்டாயப்படுத்தியதால் மாணவி தற்கொலை செய்துக் கொண்டதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை. மாணவியின் அடையாளங்களை வெளியிட்டவர்கள் மீது சிறார் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த பிரச்சினை இப்படி பூதாகரமாக மாறிய நிலையில், மாணவியின் மரணத்துக்கு உண்மையான காரணம் என்ன என்று அனைவரின் மனதிலும் கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் மாணவி இறப்பதற்கு முன்பு ஜனவரி 16ஆம் தேதி நீதித்துறை மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது.

மாஜிஸ்திரேட் முகமது அலி முன்பு மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.அப்போது மருத்துவர் மற்றும் செவிலியர் ஆகியோர் உடனிருந்தனர்.

முதலில் மாணவி வாக்குமூலம் அளிக்க தகுதியாக உள்ளாரா என்பதை தெரிந்து கொள்ள அவரைப் பற்றியதான கேள்விகள் கேட்கப்பட்டது.

வாக்குமூலம் அளிக்க மாணவி தகுதியாக இருப்பதை அறிந்த பின்னர், மாணவியிடம் உங்களுக்கு இந்த நிலைமை எப்படி ஏற்பட்டது? என்று மாஜிஸ்திரேட் கேள்வி கேட்டார்.

இதற்கு பதிலளித்த மாணவி,” நான் திருக்காட்டுப்பள்ளி மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு முதல் படித்து வருகிறேன். அங்குள்ள ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தேன். அங்கு சகாயமேரி என்ற சிஸ்டர்தான் ஹாஸ்டலை பார்த்துக் கொள்ளும் வார்டனாக இருப்பார். அவர் என்னிடம் மட்டும் ஹாஸ்டலில் உள்ள கணக்கு வழக்குகளை பராமரிக்கும் பில்களை நோட்டில் எழுதும் ஆடிட் வேலையை செய்ய சொல்வார். என்னை அடிக்கடி திட்டிக் கொண்டு இருப்பார்.என்னை விடுமுறைக்கு வீட்டிற்கு அனுப்பமாட்டார். இதுகுறித்து எங்கள் வீட்டில் வந்து கேட்டால் இங்க இருந்தால்தான் ஒழுங்காக படிப்பாள் என்று சிஸ்டர் சொல்லிவிடுவார். எனக்கு படிக்க வேண்டி இருந்ததால், ஹாஸ்டல் கணக்கு வழக்குகளை பார்க்கமாட்டேன் என்று சொல்லிவிடுவேன். அதை கேட்காமல், என்னை திட்டி நீதான் நான்கு வருடம் கணக்கு பார்த்தாய், இந்த வருடமும் நீதான் கணக்கு பார்க்க வேண்டும் என்று சொல்லி கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு என்னை வீட்டிற்கு அனுப்பாமல் என்னை ஹாஸ்டல் கணக்குகளை எழுத வைத்துவிட்டார். எனக்கு அதுபற்றி சொல்லி கொடுக்காமல் அந்த வேலைகளை என்னிடம் கட்டாயப்படுத்தி வாங்கினார். நான் ஒரு வருடம் படிப்புதான் உள்ளது என்று பொறுத்து கொண்டேன். எனக்கு உடம்பு சரியில்லாமல் போனால் லீவு தரமாட்டார். செத்தா போயிடுவ என்று திட்டுவார். ஹாஸ்டல் கட்டணத்தை கூட்டிவிட்டார்கள். ஒழுங்காக சாப்பாடு போடமாட்டார்கள். என்னை திருச்சியில் உள்ள கான்வெண்ட்டுக்கு கூட்டி போய் ஹாஸ்டல் கணக்குகளை ஒப்படைத்தார். என்னை அடிக்கடி திட்டுவார். ஹாஸ்டலில் எதுவும் காணவில்லை என்றாலும் என்னைதான் திட்டுவார். நான் தான் வெளியே கொடுத்துவிட்டேன் என்று பேசுவார். 2022 கடந்த ஜனவரி 9 அன்று மாலை 5 மணியளவில் ஹாஸ்டலில் இருந்த களைக்கொல்லி மருந்தை எடுத்து சாப்பிட்டுவிட்டேன். அது யாருக்கும் தெரியாது. உடனே வாந்தி எடுத்துவிட்டேன். அப்போது பச்சையாக வெளியே வந்தது. அதுபற்றி கேட்டதற்கு நான் எதுவும் சொல்லவில்லை. உடம்பு சரியில்லை என்று ஜனவரி 10ஆம் தேதியன்று எங்கள் ஊருக்கு சென்றுவிட்டேன். அங்கு எனக்கு வயிறு, நாக்கு, தொண்டை எரிச்சலாக இருந்ததால், அங்கிருந்த மெடிக்கலிலும், அரசு மருத்துவமனையிலும் சென்று வைத்தியம் பார்த்தேன். நேற்று எனக்கு வயிறு எரிய ஆரம்பித்தது. அதனால் மருந்து குடித்தது பற்றி வீட்டில் சொன்னேன். அதன் பின்னர்தான் இங்கு வந்து சிகிச்சைக்கு சேர்த்தார்கள். என்னை சகாயமேரி ஹாஸ்டல் கணக்குகளை எழுத வேண்டுமென்று மீண்டும் டார்ச்சர் செய்தார். அதனால்தான் நான் மருந்து சாப்பிட்டேன். என்னுடைய நிலைமைக்கு அவர்தான் காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு எதுவும் இல்லை” என்று கூறினார்.

கிட்டதட்ட 25 நிமிடம் அளித்த மரண வாக்குமூலத்தின் மூலம் மாணவியின் மரணத்துக்கு மதமாற்றம் காரணமில்லை என்றும், ஹாஸ்டல் வார்டன்தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது.

-வினிதா

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

7 நிமிட வாசிப்பு

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு  தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

3 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

வெள்ளி 21 ஜன 2022