மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 20 ஜன 2022

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஊழலா?: அமைச்சர் பதில்!

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஊழலா?: அமைச்சர் பதில்!

பொங்கல் பரிசு தொகுப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 500 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.

இன்று எடப்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, “பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருள்களை திமுகவினர் வழங்கியிருக்கின்றனர். 21 பொருட்களுக்குப் பதிலாக சில இடங்களில் 16 பொருட்களே வழங்கியுள்ளனர். பொங்கல் பரிசுத் தொகுப்பில் பெரிய முறைகேடு நடந்துள்ளது. எடைக்குறைவாகவும், தரமற்ற பொருட்களையும் வழங்கியுள்ளனர்.

பொங்கல் பரிசுப் பொருட்களைக் கொள்முதல் செய்ய ஒதுக்கப்பட்டிருந்த ரூ.1300 கோடி நிதியில் ரூ.500 கோடி ஊழல் நடந்திருக்கிறது. கரும்பு கொள்முதலில் 34 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. மஞ்சள் தூள், மிளகாய்த் தூளில் கலப்படம் நடந்துள்ளது. புளியில் பல்லி இருந்தது. அதைத் தெரிவித்தவர் மீது ஜாமீனில் வர முடியாத அளவுக்கு வழக்குப்பதிவு செய்தனர். இதனால் வழக்குப்பதிவு செய்யப்பட்டவரின் மகன் மன வருத்தத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

ஒழுகும் அளவிற்கு வெல்லத்தைக் கொடுத்துள்ளனர். பொங்கல் பையும் பாதிப் பேருக்குக் கொடுக்கவில்லை. அந்த பையின் விலை 60 ரூபாய் என்று சொல்கிறார்கள். ஆனால் அதன் விலை ரூ.25 தாகத்தான் இருக்கும். இதில் 60 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகத் தெரிகிறது.

இவ்வளவு பெரிய முறைகேடு, ஊழல் குற்றச்சாட்டுகளைத் திசை திருப்பும் நோக்கில் திமுக அரசு அதிமுகவைச் சார்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளைப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது” என்று குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் ஈபிஎஸ் கூறுவது அப்பட்டமான பொய் என்று பதிலளித்துள்ளார் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ பொங்கல் தொகுப்பு கொள்முதலில் ரூ.500 கோடி ஊழல் என்றும் தரமற்ற பொருள்கள் வழங்கப்பட்டதாகவும் அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

2.15 கோடி அட்டைதாரர்களுக்குக் குறுகிய காலத்தில் 21 வகையான பொருள்கள் தரமாக வழங்க வேண்டும் என்பதற்காக உரிய முறையில் விலைப்புள்ளி கோரப்பட்டுக் குறைந்த விலைப்புள்ளி கொடுத்த நிறுவனங்களுக்குக் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது.

27.12.2021 அன்று கூட்டுறவுத்துறை அமைச்சரும் நானும் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரும் காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மண்டல இணைப் பதிவாளர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர்கள் கூட்டத்தை நடத்தி அனைவருக்கும் தரமான பொருள்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

நான் 11.01.2022 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பின் போதே சில இடங்களில் வேண்டுமென்றே அ.தி.மு.க.வினர் பொய்ப் பிரச்சாரம் செய்ததை ஆதாரத்துடன் சுட்டிக் காண்பித்தேன். முதல்வரே சென்னையில் பொதுவிநியோகத் திட்ட அங்காடிகளுக்குச் சென்று பொருள்களின் தரத்தையும் விநியோகத்தையும் ஆய்வு செய்தார்.

சில இடங்களில் தரமற்ற பொருள்கள் வழங்கப்பட்டதை மாற்றிக் கொடுத்ததோடு அதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கடந்த பொங்கலுக்கு 20 கிராம் முந்திரி பருப்பு, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகிய 45 கிராம் பொருள்களுக்கு இவர்கள் வழங்கிய தொகை ரூ.45. ஆனால் இந்த பொங்கலுக்கு எங்கள் ஆட்சியில் 50 கிராம் முந்திரி பருப்பு, 50 கிராம் திராட்சை, 10 கிராம் ஏலக்காய் ஆகிய 110 கிராம் பொருள்களுக்கு வழங்கிய தொகை ரூ. 62.

இந்த மூன்று பொருள்களில் மட்டுமே ஒரு தொகுப்புக்கு ரூ.48க்கு குறைவாகக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இவர்கள் ஆட்சியில் இந்த மூன்று பொருள்கள் கொள்முதலில் மட்டும் இவ்வளவு அதிகமாக ஏன் செலவழித்தார்கள் என்பதற்குப் பதில் கூற முடியாமல் வசைபாடியுள்ளார்.

கடந்த ஆட்சியின் இறுதியில் பருப்புக்குக் கிலோ ஒன்றிற்கு ரூ.120.50 என்ற விலையில் இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்துவிட்டு, நாங்கள் கிலோ ரூ.78 முதல் ரூ.86 வரையிலான விலையில் இறுதி செய்து பருப்பு கொள்முதல் செய்தோம்.

திமுக ஆட்சியில் ஒப்பந்தப்புள்ளி கோருவது எளிமையாக்கப் பட்டுப் பலரும் கலந்து கொண்டு அவர்கள் கொடுத்த விலைப்புள்ளியில் குறைந்தவற்றிற்குக் கொள்முதல் ஆணை வழங்கப்படும் வெளிப்படையான நடைமுறை கொண்டு வரப்பட்டதால், இதில் மட்டும் ஒரு மாதத்திற்கே ஒரு கொள்முதலில் ரூ.74.75 கோடி எங்கள் அரசால் மீதப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட இரண்டு கொள்முதல்களில் மட்டும் இரண்டு மாதத்திற்கே ஒரு துறையில் மட்டுமே இவ்வளவு பணத்தை நாங்கள் மீதப்படுத்தி இருக்கிறோம் என்றால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த 51 மாத காலத்தில் எல்லாத் துறைகளிலும் சேர்த்து எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்?

ஒட்டு மொத்தமாகக் கொள்ளையடித்து விட்டு அபாண்டமான ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் கூறியுள்ள எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசுத் தொகுப்பு கொள்முதல் பற்றி என்னுடன் விவாதிக்கத் தயாராக உள்ளாரா? இல்லாவிடில் இவர் தனது தவறான குற்றச்சாட்டிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

-பிரியா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வியாழன் 20 ஜன 2022