மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 20 ஜன 2022

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

வைஃபை ஆன் செய்ததும், வாட்ஸ் அப்பில் சில படங்கள் வந்தன. பனங்காட்டு மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடார் கழுத்து நிறைய நகைகளுடன் ஆலங்குளம் தொகுதியில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் செய்த படங்கள்தான் அவை.

அதன் பின் மெல்ல மெசேஜ் வந்தது,

“பனங்காட்டு மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கி கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டவர் ஹரி நாடார். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலதிபர்களிடம் வங்கியில் லோன் வாங்கித் தருவதாக சொல்லி அட்வான்ஸ் பேமன்ட் வாங்கிக்கொண்டு ஆட்டைய போடுவதுதான் ஹரி நாடாரின் ஹேபியாகவே இருந்திருக்கிறது. இந்த வகையில் அவர் மீது புகார்களும் இருந்தன. தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா போட்டியிட்டார். அத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக மனோஜ் பாண்டியன் போட்டியிட்டார். நாடார் மக்கள் அதிகமுள்ள இத்தொகுதியில் ஹாரிநாடார் சுயேச்சையாக போட்டியிட்டார். தேர்தலுக்கு முன்பே அவரை வாபஸ் வாங்கச் சொல்லி பூங்கோதை ஆலடி அருணா சில முயற்சிகளை செய்தார். ஆனபோதும் ஹரிநாடார் பின் வாங்கவில்லை. ஹெலிகாப்டரில் வந்து பிரச்சாரம் என்றெல்லாம் அதிரடி காட்டினார்.

மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது மனோஜ் பாண்டியன் 74 ஆயிரத்து 153 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். பூங்கோதை 70 ஆயிரத்து 614 வாக்குகள் வாங்கி சுமார் 4 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளில் தோல்வியைத் தழுவியதோடு அமைச்சர் வாய்ப்பையும் பறிகொடுத்தார். அந்தத் தேர்தலில் ஹரிநாடார் வாங்கிய வாக்குகள் 37 ஆயிரத்து 727. ஆக ஹரிநாடார் பெற்ற வாக்குகள்தான் பூங்கோதையை தோல்வியடைச் செய்தன என்று திமுகவினர் பலரும் அன்றே கூறினர். இப்படி ஆலங்குளம் தொகுதி தேர்தல் முடிவையே மாற்றிய ஹரிநாடார், வாக்கு எண்ணிக்கை நடந்த மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மையத்துக்கே வரவில்லை.

கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் கொடுத்த புகாரில் கேரளாவில் தலைமறைவாக இருந்த ஹரிநாடாரை கடந்த மே 5 ஆம் தேதி கர்நாடக போலீசார் கைது செய்தனர். அப்போதில் இருந்து சுமார் ஒன்பது மாதங்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலேதான் இருக்கிறார் ஹரிநாடார். அவரோடு உறுதுணையாக இருந்த ராக்கெட் ராஜாவுக்கும் ஹரிநாடாருக்கும் பிரச்சினை ஏற்பட்டதால் ஹரிநாடாருக்கு ஜாமீன் கொடுக்க யாரும் முன் வரவில்லை. இதனால் தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களில் கைது செய்யப்பட்ட ஹரிநாடார் சிறையிலேயே இருக்கிறார்.

அதன் பின் திமுக இங்கே ஆட்சி அமைத்தது. இந்த நிலையில்தான் ஒன்பது மாதங்கள் கழித்து சென்னை திருவான்மியூர் போலீசார் கர்நாடக போலீசாருக்கு கடிதம் எழுதி பழைய வழக்கு ஒன்றில் ஹரிநாடாரை ஜனவரி 19 ஆம் தேதி கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ஹரிநாடாரை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பெங்களூருவில் இருந்து இன்று (ஜனவரி 20) அவரை அழைத்து வருகிறார்கள் சென்னை போலீஸார். ஒன்பது மாதங்களாக வேறு ஒரு வழக்கில் சிறையில் இருக்கும் ஹரியை தமிழ்நாடு போலீஸ் இப்போது கைது செய்வதற்கு என்ன அவசியம்?

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நடிகை விஜயலட்சுமி 2020 ஜூலை மாதம் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுக் காப்பாற்றப்பட்டார். அதன் பின் அவர் திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், ‘நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் என்னை ஏமாற்றிவிட்டதாக நான் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறேன். இந்த நிலையில் சீமானைப் பற்றி இனி பேசக்கூடாது என்று ஹரிநாடார் என்னை மிரட்டுகிறார். சீமானின் தூண்டுதலின் பேரில்தான் என்னை மிரட்டுகிறார்’ என்று புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஹரிநாடார் மீது விஜயலட்சுமியை தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சீமான் அன்றைய ஆட்சியாளர்களுடன் நெருக்கமாக இருந்த அரசியல் சூழலில் அந்தப் புகார் அப்படியே விடப்பட்டது. திருவான்மியூர் ஸ்டேஷனில் அந்தப் புகார் தூங்கிக்கொண்டிருந்தது.

இந்த நிலையில்தான் சில மாதங்களாக திமுக ஆட்சியின் மீது சீமான் தொடர்புகார்களை கூறி வந்தார். ஒரு கட்டத்தில் மேடையில் செருப்பைத் தூக்கி காண்பித்து திமுகவை எச்சரித்தார். இது அரசியல் அரங்கில் அதிர்வை ஏற்படுத்தியது. அதையடுத்த சில நாட்களில் நாம் தமிழர் கூட்டமொன்றில் திமுக நிர்வாகி மேடையேறி தடுத்து நிறுத்தியதும் நடந்தது. சீமான் செருப்பைத் தூக்கிக் காட்டியதையும், திமுகவுக்கு எதிராக அவரும் அவரது கட்சியினரும் தரக் குறைவாக மேடைகளில் பேசுவதையும் முதல்வர் ஸ்டாலினிடம் திமுக தலைமை நிர்வாகிகள் சிலர் சுட்டிக் காட்டி, ‘இந்த ஆளையெல்லாம் இப்படியே விடக் கூடாது. பிடிச்சு உள்ள போடணும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஸ்டாலினோ அதை ஏற்கவில்லை. ’அரசியல் காரணங்களுக்காக சீமானை கைது செய்தால் அவரது அரசியல் இமேஜ் அதிகமாகுமே தவிர குறையாது. அன்னிக்கு காங்கிரஸ் அழுத்தத்தால முதல்வரா இருந்த கலைஞர் தேசிய பாதுகாப்பு சட்டத்துல சீமானை கைது பண்ணலைன்னா, இன்னிக்கு அவர் ஒரு கட்சித் தலைவராகவே வந்திருக்க மாட்டாரு. அவரை அரசியல் ரீதியா கைது செஞ்சா இன்னும் அவருக்கு மைலேஜ் ஆகும். கலைஞர் செய்த தப்பை நான் செய்யமாட்டேன்’

என்று தன்னிடம் சீமான் பற்றி புகார் சொன்னவர்களிடம் தெரிவித்து அப்போதைக்கு அவர்களை சைலன்ட் ஆக்கினார் ஸ்டாலின்.

சீமான் மேடையில் ஒருபக்கம் திமுகவை கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்த நிலையில்தான் திருவான்மியூர் போலீஸ் சார்பில் பரப்பன அக்ரஹாரா போலீஸுக்கு ஹரிநாடாரை கைது செய்வது பற்றி கடிதம் எழுதப்பட்டது. சில நாட்களுக்கு முன்பே இந்த மூவ் நடப்பதை தெரிந்துகொண்ட சீமான் சட்டமன்றக் கூட்டத் தொடர் பற்றி சில கருத்துகளை வெளியிட்டார்.

’இணையவழி நிகழ்நிலை சூதாட்டங்களை நிரந்தரமாகத் தடைசெய்வதற்கு விரைவில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுதியளித்த மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறினார் சீமான். அதுமட்டுமல்ல... ‘நீட் தேர்வை கொண்டுவந்ததே திமுக காங்கிரஸ்தான்’ என்று தொடர்ந்து சொல்லிவரும் சீமான் ஜனவரி 7 ஆம் தேதி, ‘கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் மருத்துவக் கனவினைச் சிதைத்தழிக்கும் ‘நீட்' தேர்வினை திரும்பபெறச் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படுமென்று, ஆளுநர் உரை மூலம் தமிழ்நாடு அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது சற்றே ஆறுதல் அளிப்பதாக உள்ளது. கொடிய 'நீட்' தேர்வினை நீக்குவதற்கான சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமெனவும், அதற்காக தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் அனைத்து ஆக்கப்பூர்வமான நன்முயற்சிகளுக்கும் நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவை அளித்து, உறுதியாகத் துணைநிற்குமென்றும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று திமுக அரசுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார்.

அதேநேரம் திருவான்மியூர் போலீசார் ஹரிநாடாரை கைது செய்து சென்னைக் கொண்டுவரும் முயற்சியைத் தீவிரமாக்கினார்கள். இதை அறிந்துகொண்டோ என்னவோ தனது வழக்கமான திமுக மீதான அட்டாக்கை கொஞ்சம் குறைத்துக் கொண்ட சீமான், நேற்று, ‘ஆதித்தொல்குடிகளுக்கும், காலங்காலமாக சரிசமமான வாய்ப்புகள் வழங்கப்படாது வஞ்சிக்கப்பட்ட பெண்களுக்குமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய உள்ளாட்சியில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியிருக்கும் தமிழக அரசின் செயல்பாட்டை வெகுவாகப் பாராட்டுகிறேன்’ என்று ஸ்டாலினுக்கு அடுத்த பாராட்டை அள்ளிவிட்டிருக்கிறார்.

சீமானின் இந்த டிப்ளமேட்டிக் முயற்சிகள் ஒருபக்கம் நடந்தாலும் இன்னொரு பக்கம் ஹரிநாடாரை கைது செய்யும் முயற்சிகள் தமிழக போலீஸாரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. டிஜிபியின் அனுமதியின் பேரிலேயே தமிழ்நாடு போலீஸ் பரப்பன அக்ராஹாரா சிறைக்கு சென்று ஹரிநாடாரை சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளது. ஹரிநாடாரை போலீஸ் கஸ்டடி எடுத்து, ‘சீமானுக்காகத்தான் நான் விஜயலட்சுமியை மிரட்டினேன்’ என்று அவரிடம் வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில் சீமானை கைது செய்வதுதான் இப்போது தமிழ்நாடு போலீஸின் திட்டமாக உள்ளது.

சீமான் மீது அரசியல் ரீதியாக வழக்குகள் உள்ளன. ஆனால் அப்படிப்பட்ட வழக்குகளில் அவரைக் கைது செய்தால் அது சீமானின் அரசியல் வளர்ச்சிக்கு அடியுரம் இட்டதாக அமையும், மாறாக தன்னால் ஏமாற்றப்பட்ட பெண்ணை தனக்கு எதிராக வாய் திறக்காமல் இருக்கச் செய்ய மிரட்டியதாக ஏற்கனவே கைது செய்யபப்ட்ட ஹரிநாடாரின் வாக்குமூல ஆதாரத்துடன், குற்றவியல் வழக்குத் தொடுத்து அதில் கைது செய்யப்பட்டால் அது சீமானுக்கு டேமேஜ் ஆகும் என்பதுதான் ஸ்டாலினின் திட்டம். அதை நோக்கியே காய்கள் நகர்த்தப்படுகின்றன” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

வியாழன் 20 ஜன 2022