மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 ஜன 2022

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் காவல் ஆணையம்!

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் காவல் ஆணையம்!

முன்னாள் நீதிபதி சி.டி. செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் போலீஸ் பொதுமக்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவும், காவல்துறை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்திடவும் புதிய காவல் ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக கடந்த 13.09.2021 அன்று சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், புதிய காவல் ஆணையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று அதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “காவலர் - பொதுமக்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவும், காவல்துறை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்திடவும், புதிய பயிற்சி முறைகளைப் பரிந்துரைத்திடவும் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

காவலர்களின் நலன், காவலர் - பொதுமக்கள் இடையேயான நல்லுறவை மேம்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்களை விரிவாக ஆய்வு செய்யும் பொருட்டு கடந்த 1969, 1989 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில், முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு, முறையே மூன்று காவல் ஆணையங்களை அமைத்து, அவற்றின் பரிந்துரைகளைப் பெற்று காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அவ்வப்போது முன்னெடுத்தது.

அந்த வகையில், புதிதாக காவல் ஆணையம் ஒன்றைத் தற்போது அமைத்திடவும், அந்தக் காவல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.டி.செல்வத்தைத் தலைவராகவும், கா.அலாவுதீன், இ.ஆ.ப., (ஓய்வு), கே.ராதாகிருஷ்ணன், இ.கா.ப., (ஓய்வு), மனநல மருத்துவர் சி.ராமசுப்பிரமணியம், முன்னாள் பேராசிரியர் நளினி ராவ் ஆகியோரை உறுப்பினர்களாகவும், காவல்துறை (குற்றப்புலனாய்வு) கூடுதல் இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப.வை உறுப்பினர்-செயலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆணையம், காவலர்களின் நலன் மற்றும் காவல்துறையின் பல்வேறு அம்சங்களை விரிவாக ஆய்வு செய்து, குறிப்பிட்ட காலவரையறைக்குள் அரசுக்குத் தனது பரிந்துரைகளை அளிக்கும். காவல்துறையின் செயல்பாடுகளைச் சிறப்பாக மேம்படுத்துவதற்கும், இணையவழிக் குற்றங்களைத் தடுத்திடவும், சேவை வழங்குவதில் மனிதாபிமானத்துடன் கூடிய நட்புறவோடு பொதுமக்களை அணுகுவதற்கும், உரிய நடவடிக்கைகள் மூலமாகக் காவல்துறையினரின் சேவையை மேலும் வலுவூட்டுவதற்கும், இந்த ஆணையத்தின் பரிந்துரைகள் வழிகாட்டியாகவும், உறுதுணையாகவும் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

-பிரியா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

புதன் 19 ஜன 2022