மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 ஜன 2022

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது நடந்ததா?

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

வைஃபை ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைனில் இருந்தது.

“உள்ளாட்சித் தேர்தல் பற்றிய அப்டேட்டைதான் தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது” என்ற குறிப்பை அனுப்பிவிட்டு....அதன் பின் நீண்ட மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு, வார்டு வரையறைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான இட ஒதுக்கீட்டினை அரசு அறிவித்துள்ளது. இதனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சென்னை, தாம்பரம் மாநகராட்சி மேயர்கள் பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளின் பதவிகள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, 11 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்களுக்குக் கிடைக்கவுள்ளது. இதேபோல நகராட்சி, பேரூராட்சிகளுக்கும் இட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலை வைத்துக் கொண்டு தமிழ்நாடு முழுதும் அரசியல் வட்டாரத்தில் விவாதம் நடந்துகொண்டிருக்கிறது.

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திமுக பெரும் வெற்றி பெற்ற நிலையில்...நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையும் விரைவில் நடத்தத் திட்டமிட்டது அரசு. ஆனால் நவம்பர் பெருமழை, சென்னை வெள்ளம், தமிழகம் முழுக்க மழை பாதிப்புகள் என்று நிலைமை மாறியது. மழை பாதிப்புகளால் மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை போக்க நிவாரண உதவிகளும் மத்திய அரசிடம் இருந்து போதுமான அளவில் கிடைக்கவில்லை. அதனால்தான் பொங்கல் பரிசில் ரொக்கத் தொகை இடம்பெற முடியாமல் போய்விட்டது. இதையெல்லாம் எதிர்க்கட்சிகள் பெரிது படுத்திக்கொண்டிருக்க, மழை வெள்ள அதிருப்தி ஈரம் காய்ந்ததும் உள்ளாட்சித் தேர்தல் நடத்திக் கொள்ளலாம் என்று ஆட்சி மேலிடம் கருதியது. ஆனாலும் இதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் உச்ச நீதிமன்றத்தில் வாக்குறுதி கொடுத்தபடி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் படிப்படியாக செய்துகொண்டே வந்தது .

கொரோனா பரவலால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி கோரலாம் என்று தமிழக அரசு மேலிடத்தில் ஆலோசனைகள் நடந்துகொண்டிருந்தபோதுதான்... உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகளை அறிவித்தது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம். ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில், ‘பொதுத் தேர்தல்களை எல்லாம் சரியான நேரத்தில் நடத்தும் அரசு, உள்ளாட்சித் தேர்தலை ஏன் தள்ளிப் போட முயற்சிக்கிறது?’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தார்கள். இப்போது இந்த காரணத்தைக் கூறி தள்ளிவைக்கக் கோரினால், உத்திரப்பிரதேச தேர்தலை காரணம் காட்டி உச்ச நீதிமன்றம் மறுக்கவும் வாய்ப்புள்ளது. மேலும், உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்குமாறு திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் கோரினால், ‘தேர்தலை எதிர்கொள்ள திமுக தயங்குகிறது’ என்ற விமர்சனம் எதிர்க்கட்சிகளால் முன் வைக்கப்படும். எனவேதான் ஒருபக்கம் தேர்தல் தயாரிப்புப் பணிகளில் தீவிரம் காட்டினாலும்... இன்னொரு பக்கம் யாராவது தேர்தலுக்கு தடை கேட்டு நீதிமன்றம் செல்லமாட்டார்களா என்று காத்துக் கொண்டிருந்தது தமிழக அரசு.

இதெல்லாம் ஒருபக்கம் என்றால்... இன்னொரு பக்கம் தமிழகம் முழுவதிலும் இருந்தும் தங்களது மாநகராட்சிகள், நகராட்சிகள் சார்ந்து கிட்டத்தட்ட அனைத்து மாவட்டச் செயலாளர்கள்,திமுக எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவிடம் தங்களுக்கு ஏற்றபடி இட ஒதுக்கீட்டை அட்ஜெஸ்ட் செய்து தர கோரிக்கையும் அழுத்தமும் கொடுத்துக் கொண்டிருந்தனர். ‘அண்ணே... எங்க நகராட்சித் தலைவர் ஒதுக்கீட்டை தலித்துல இருந்து பொதுவா மாத்திக் கொடுங்க’, ‘அண்ணே....லேடிஸ் வார்டை ஜென்ஸா மாத்திக்கொடுங்க’ என்று பல கோரிக்கைகள் அமைச்சர் நேருவின் முன் குவிந்தன. இதையெல்லாம் முதல்வர் கவனத்துக்கும் கொண்டு சென்றார் அமைச்சர் நேரு. முதல்வரின் ஆலோசனைக்குப் பின் அமைச்சர் நேரு நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா ஐ.ஏ.எஸ்.சிடம் இதுபற்றிய அறிவுரைகளைக் கொடுத்துள்ளார் அமைச்சர் நேரு. ஆனால் பொன்னையா ஐ.ஏ.எஸ்.சிடம் இருந்து இதுகுறித்து சாதகமான பதில் ஏதும் நேருவுக்கு கிடைக்கவில்லை.

இதையடுத்து அமைச்சர் நேருவும், அமைச்சர் வேலுவும் நேரடியாக பொன்னையாவை அவரது அலுவலகத்துக்கே சென்று சந்தித்திருக்கிறார்கள். வார்டு வரையறை, இட ஒதுக்கீடு பணிகள் எவ்வாறு நடக்கிறது என்பதைப் பற்றி விவாதித்துவிட்டு... ஏற்கனவே அரசுத் தரப்பில் இருந்து சொல்லப்பட்ட மாற்றங்களை செய்யுமாறு பொன்னையாவிடம் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள் அமைச்சர்கள். இவ்வளவு நடந்தபிறகும் வெளியான வார்டு வரையறைகளில் ஆளுங்கட்சி கோரிய மாற்றங்கள் கணிசமாக செய்யப்பட்டிருந்தாலும் முழுமையான மாற்றம் செய்யப்படவில்லை. இதனால் திமுகவிலேயே குழப்பமும், இறுக்கமும் நிலவுகிறது.

வார்டு வரையறை, இட ஒதுக்கீட்டுப் பட்டியலைப் பார்த்தபின் நேருவுக்கு நெருக்கமான சிலர் அவரிடம், ‘என்னண்ணே...எங்க கோரிக்கை எதுவுமே நடக்கலையே?’ என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அமைச்சர் நேரு ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு, ‘என்னோட திருச்சி மாநகராட்சியில நான் நினைச்ச மாதிரி மாத்தறதுக்கு நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும். முன்னமாதிரியெல்லாம் இல்லப்பா. இப்ப இருக்குறத வச்சி ஜெயிக்கப் பாருங்க’ என்று கூறியிருக்கிறார். வார்டு வரையறைகள், இட ஒதுக்கீடுகளின் பின்னால் துறை அமைச்சரான நேருவே இப்படி நொந்துபோய் சொல்கிறாரே என்று திமுக நிர்வாகிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்” என்ற மெசேஜை அனுப்பிவிட்டு ஆஃப் லைன் சென்றது வாட்ஸ் அப்.

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

புதன் 19 ஜன 2022