மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 18 ஜன 2022

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

வைஃபை ஆன் செய்ததும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்தது.

“ அரசியல் கட்சிகளுக்கு தீபாவளி, பொங்கல் என்றால் அந்த கட்சிகளின் தலைவர்களுடைய பிறந்தநாள்தான். அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் பிறந்தநாட்கள்தான் பண்டிகைகள். ஆனால் அமமுக சார்பில் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொரோனா நெறிமுறைகளுக்கு உட்பட்ட வழக்கமான உற்சாகத்தோடு கூட கொண்டாடப்படவில்லை என்ற குமுறல் கட்சியின் கீழ் நிலை நிர்வாகிகளிடையே நிலவுகிறது.

இந்த வருடம் 2022 ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி, எம் ஜி ஆர் 105வது பிறந்தநாள் அன்று தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர்.நினைவு இல்லத்துக்குச் சென்ற சசிகலா எம் ஜி ஆருக்கு மரியாதை செலுத்தினார்.

அதிமுக சார்பில் சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் அமைந்துள்ள எம் ஜி ஆர் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எம். எல். ஏ. க்களுடன் மாலை மரியாதை செய்து வணங்கி அதிமுக கொடியேற்றி வைத்தனர்,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி கட்சியின் தலைமை அலுவலகமான ராயப்பேட்டை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். தமிழகம் முழுவதும் ஊர் ஊராக எம் ஜி ஆர் படம் வைத்து மாலை மரியாதை செய்து அன்னதானம் மற்றும் நலத்திட்டங்களை சிறப்பாக செய்ய சொல்லி உத்தரவு பிறப்பித்தார், அதன்படி மிக சிறப்பாக கொண்டாடினார்கள். ஆனால் இம்முறை ஆரோவில் பண்ணை வீட்டுக்குள்ளேயே இருந்தபடி எம்.ஜி.ஆர். பிறந்தநாளை கொண்டாடி முடித்துவிட்டார். அதேநேரம் அமமுக தலைமை அலுவலகத்தில் துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழன் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், சென்னை மாவட்டச் செயலாளர்கள் எம்.ஜி.ஆருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

அமமுகவினர் கடந்த ஆண்டு காட்டிய ஆர்வம் இந்த வருடம் காட்டவில்லை என்பதை வெளிப்படையாக காணமுடிந்தது, குறிப்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆரோவில் பண்ணை வீட்டைவிட்டு வெளியில் வராமல் வீட்டுக்குள்ளே சிறிய அளவில் எம் ஜி ஆர் படத்தை வைத்து மலர் தூவி மரியாதை செய்தது அக்கட்சியின் தலைமை நிர்வாகிகளிடையே சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

‘கடந்த சில காலமாகவே சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையிலான புரிதலில் இடைவெளி இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. ஏற்கனவே அமமுகவை கலைக்க சொல்லிவிட்டார் சசிகலா என்ற தகவல்கள் வந்தபோது அதற்கு உரிய விளக்கத்தை அளித்தார் டிடிவி தினகரன். சசிகலாவுக்கு சட்ட ரீதியான பிரச்சினைகள் வரக் கூடாது என்பதற்காகவே அமமுக நிர்வாகிகளை அவர் பின்னால் அனுப்பவில்லை என்று தினகரன் சார்பில் விளக்கம் தரப்பட்டது. ஆனாலும்... , டிடிவி தினகரன், சசிகலா மீது அதிருப்தியில் இருப்பது உண்மைதான். சமீபத்தில் கூட சசிகலாவை தினகரன் மனைவி அனுராதா சந்தித்து இருவருக்குமான அதிருப்தியை சரி செய்ய முயற்சி செய்திருக்கிறார். அதில் தினகரன் எதிர்பார்த்த அளவுக்கு ரிசல்ட் கிடைக்கவில்லை. அதனால்தான் தினகரன் தற்போது சைலன்ட் மோடுக்கு சென்றுவிட்டார்.

எம்.ஜி.ஆரின் பிறந்தநாளன்று கொரொனா விதிமுறைகளைக் காட்டி பொது இடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தவில்லை என்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் தனது கட்சியின் தலைமை அலுவலகமான ராயப்பேட்டை அலுவலகத்துக்குக் கூட தினகரனால் வர இயலவில்லை என்றால்... இதன் பின்னால் தினகரன் ஏதோ சலிப்பில் இருப்பதாகவே தோன்றுகிறது.

அமமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகளில் குறிப்பிட்ட ஓரிருவர் தவிர வேறு யாரும் தினகரனைத் தொடர்புகொள்ள முடியவில்லை. கேட்டால் பிஏவை தொடர்புகொள்ளச் சொல்கிறார்கள். கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் அவசரத்துக்குக் கூட தினகரனுடன் பேசமுடியவில்லை. இது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமா, ஆரோவில் முன்னேற்றக் கழகமா என்று மாவட்டச் செயலாளர்களிடையே கூட ஒரே முணுமுணுப்பாக இருக்கிறது. அம்மா அவ்வப்போது கொடநாடு சென்றார் என்றால் சாதித்துவிட்டு தன் சாம்ராஜ்யத்தை நிறுவிவிட்டு சென்றார். ஆனால் தினகரன் இப்போதே ஆரோவில் பண்ணை வீட்டிலேயே அதிகமாக இருக்கிறார். இது கட்சிக்கு நல்லதல்ல.

சசிகலாவுடன் ஏற்பட்டுள்ள மிஸ் அன்டர்ஸ்டேண்டிங்கால்தான் இவ்வாறு தினகரன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதன் வெளிப்பாடாகத்தான் எம் ஜி ஆர் பிறந்தநாள் விழாவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆரோவில்லிலேயே சம்பிரதாயமாக முடித்திருக்கிறார்’ என்கிறார்கள். இதேநேரம் எம்.ஜிஆர். நினைவு இல்லத்துக்கு வந்த சசிகலா அங்கே தன்னை சந்தித்தவர்களிடம், ‘ஜனவரிக்குள்ள எல்லாம் சரியாயிடும் கவலைப்படாதீங்க’ என்று சொல்லியிருக்கிறார்” என்ற மெசேஜை டைப் செய்து செண்ட் செய்தது.

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

செவ்வாய் 18 ஜன 2022