மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 18 ஜன 2022

குடியரசு விழாவில் குதர்க்கமா !?

குடியரசு விழாவில் குதர்க்கமா !?

ஸ்ரீராம் சர்மா

வரும் ஜனவரி 26 வழக்கமானதொரு குடியரசு தினமல்ல. அது, நாடு விடுதலை அடைந்த 75 ஆம் ஆண்டின் பெருங்கொண்டாட்ட தினம் !

அந்த கொண்டாட்ட தினத்தில், தேசத்தின் மொத்த பெருமையையும் பறை சாற்றியபடி, பனி சூழ்ந்த தலைநகர வீதியில், அணிவகுத்து வரப் போகும் அலங்கார ஊர்திகளில்…

தமிழகத்தின் விடுதலை முகங்கள் இடம்பெறாமல் போகும் என்ற செய்தி, உலகார்ந்த தமிழுலகுக்கு வலி வேதனை அளித்து விட்டது !

சில காரணங்களால் 12 ஊர்திகள் மட்டுமே அன்று இடம் பெறும் எனில், அந்தப் பனிரெண்டு ஊர்திகளில் ஒன்றாக தமிழகம் ஏன் இடம் பெறலாகாது எனும் ஆதங்கக் கேள்வி எழுந்து நிற்கிறது !

விடுபடும் மற்ற மாநிலங்கள் குறித்து தமிழக சிந்தனையாளர்களுக்கு கவலை ஏதும் இல்லையா எனில் நிச்சயம் உண்டு.

அதற்குண்டான தீர்வை இந்த கட்டுரையின் முடிவில் காணத்தான் போகிறோம் !

அதன்முன் ஒரு சில உள்மன ஆதங்கங்களை வெளியிட்டுக் கொள்வது அவசியமாகிறது !

“எங்கள் பாரதம் இதுவல்லோ !” எனும் பற்றும் , உறுதியும் தமிழர் உதிரணுக்களெங்கும் ஊறி நின்றாலும், அவரவர்க்கு - அவரவர் தாய் மண் பெரிதல்லவா !

சும்மாவா பாடினார் சுப்பிரமணிய பாரதியார்…

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் !

சர்வேசா, இப்பயிரை

கண்ணீரால் காத்தோம் ;

கருகத் திருவுளமோ !?

குடியரசு தின அணிவகுப்பு குறித்த முடிவில், பிரதமர் மோடிக்கு துளியும் சம்பந்தமில்லை ! கமிட்டி ஒன்றுதான் இந்த முடிவெடுத்தது என்கிறது உயர்மட்ட தகவல்கள் ! சரி, அப்படியே ஏற்போம் !

எனில், பாரதப் பிரதமர் மோடி வேலுநாச்சியாரை, பாரதியாரை வழி மொழிந்து வந்த விதங்களை கொஞ்சமும் அறியாமலே கூடிக் கலைந்து கொண்டிருந்ததா அந்த கமிட்டி ? அதுதான், அறிவு ஜீவிகளுக்கான லட்சணமா !?

அதுபோக, தமிழக முதலமைச்சரையும் - அவர் வழிபார்த்து நிற்கும் தமிழகத்து எளிய மக்களையும் கிள்ளுக் கீரையாகக் கொண்டு விட்டது போலும் அந்த லெஜிட் கமிட்டி !

அதாவது, அறிவுஜீவிகள் என்பாரின் கூட்டம் ஒன்று கூடும். அது, தேசத்தின் ஒட்டுமொத்த தியாகிகளையும், அர்ப்பணிப்பாளர்களையும் தன்னளவு கோல் கொண்டு நிர்ணயிக்கும், அதனை மட்டுமே இந்தப் பரந்த தேசத்தின் பெருமையாக உலகுக்கு அணிவகுத்துக் காட்ட உத்தரவிடும்.

அந்த முடிவை. நாட்டின் பிரதமரும் – மாநிலத்தின் முதலமைச்சரும் அப்படியே ஏற்று நடந்து கொள்ள வேண்டும் அப்படித்தானே ? அது, அபத்தமல்லவா ? அறிவுலகம் ஏற்குமா ?

குடியரசு நாளில் நடக்கப் போவது கண்காட்சியோ, சர்கஸோ அல்ல. மாறாக, மாநிலப் பெருமைகளை உள்ளடக்கிய தேசத்தின் எழுச்சிப் பிரகடனம் அது ! அதில் விளையாடலாமா ?

கலை, கலாச்சார, சிற்ப, இசை, நடனக் கலைகள் மட்டுமே குடியரசு அணிவகுப்பில் எங்களுக்கு பிரதானம் என அதிரடித்துக் காட்டும்…

ஐயன்மீரே, கமிட்டிமாரே… கொஞ்சம் காது கொடுப்பீரா ?

மேற்கண்ட அனைத்துக் கலைகளையும் ஆயிரமாயிரமாண்டுகளாக இன்னுயிர் ஈந்து வளர்த்தெடுத்தது எங்கள் தாய்த் தமிழகம் என்பதை அறிவீரா ?

கிணற்றுக்குள் இருந்து கொண்டு, நிலவைக் காணவில்லை என அங்கலாய்க்கும் உங்களை உலகம் கெக்கலி கொட்டி சிரிக்காதா ?

“நமஸ்தே சதா வத்ஸலா மாத்ருபூமே…” என அம்மையை வணங்கித் துவங்கும் ஸ்லோகம் நீங்கள் அறியாததா ?

சொல்லுங்கள், இந்தியத் தமிழ்ப் பெண்மையை 360 டிகிரிகளிலும் உயர்த்திப் பிடித்த வேலுநாச்சியாரைவிட ஆகச் சிறந்த வரலாற்று வாழ்வு ஒன்று இந்த மண்ணில் உண்டா ?

பதினெட்டாம் நூற்றாண்டிலேயே பெண் விடுதலை பேசி, ஆங்கிலம் – ப்ரெஞ்சு உட்பட ஏழு மொழிகள் கற்றறிந்து – வெள்ளைப் படையை வென்ற உலகின் ஒரே பெம்மாட்டி அவரல்லவா ?

பெண்களுக்கான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ‘உடையாள் படை’ அதனைத் தோற்றுவித்து, இந்திய வீர கலாச்சாரத்தின் மரபை உயர்த்தி நின்ற பெண்மையின் ஒரே காலச் சின்னம் வேலுநாச்சியார் அல்லவா ?

ஐயன்மீரே, கமிட்டிமாரே… ஆங்கோர் ஊர்தியில் அவருக்கோர் இடமில்லையா ?

இந்த மண்ணுக்கே உண்டான பேரார்ந்த தன்மை விசுவாசம் ! அந்த விசுவாசத்துக்கு ஆகச் சிறந்த வரலாற்று அடையாளமான மருது சகோதரர்கள் காளையார் கோயில் கோபுரம் எழுப்பிய மகா சிவ பக்தர்கள் அல்லவா ?

வேலுநாச்சியாரை தாயினும் மேலாக வரிந்து கொண்டு - சிவகங்கை மண்ணின் விடுதலைக்கு வழிவகுத்த அந்த மாவீரர்கள் - வேலு நாச்சியார் மறைந்த 1796 முதல் 1801 வரை மண்ணின் மானத்தை உயிரெனக் காத்த பேராண்மையாளர்கள் அல்லவா ?

அன்றந்த அன்னியர்கள் தங்கள் குஞ்சு குளுவான்களை தூக்கிலேற்றி நிறுத்திய தருணத்தில் கூட, கொஞ்சமும் அஞ்சாமல், ‘வெற்றிவேல் – வீரவேல்’ என விடுதலை முழக்கமிட்டு மடிந்து போன தியாகச் செம்மல்கள் அல்லவா எங்கள் மருதிருவர்கள் ?

ஐயன்மீரே, கமிட்டிமாரே… ஆங்கோர் ஊர்தியில் அவர்களுக்கோர் இடமில்லையா ?

புகழ்பெற்ற வழக்காடியாய் வாழ்ந்து, பெரும் பொருள் கொள்ளும் தன் திறமை அனைத்தையும், வெள்ளை பெரும்படைக்கு எதிராகத் திருப்பி, தனி ஒருவராக கப்பலோட்டி, சிறைவாசம் கண்டு, செக்கிழுத்து, பின் திருக்குறளுக்கும், சிவஞான போதத்துக்கும், ரத்தினக் கவிராயரின் ‘இன்னிலை’ நூலுக்கும், உரை எழுதி - ராமகிருஷ்ண மடத்தின் தாக்கத்தால் ‘தூத்துக்குடி வேளாண் சங்கம்’ உட்பட பலவற்றை உருவாக்கிப் - பலபட உழைத்து, தன் ஊணுயிருதிரத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த வ.வு.சிதம்பரம் பிள்ளையவர்களைக் கடந்த தியாகச் செம்மல் ஒருவரை இந்த உலகம் கண்டு விட முடியுமா ?

பாரதி பெற்ற நண்ப,

பழியிலா வீர வாழ்க்கை

பாரெலாம் ஏத்தும் வண்ணம்

பண்புடன் நடத்தி நின்றோய் !

வேருடன் நைந்து வாடி

வெள்ளையர் ஆட்சி வீழ

நேரிலாப் போர்கள் செய்தாய்

நித்தமும் நின் பேர் வாழி !

என தமிழாசான் மு.வரதராசரால் போற்றப்பட்ட ஈடு இணையற்ற தேசிய செம்மல்லலவா எங்கள் வ.வு.சிதம்பரனார் !

ஐயன்மீரே, கமிட்டிமாரே… ஆங்கோர் ஊர்தியில் அவருக்கோர் இடமில்லையா ?

அட, இந்திய விடுதலை வேட்கையை உயர்த்திப் பிடித்தவர்களுள் பாரதியாரை விஞ்சியவர் வேறு ஒருவருண்டா ?

குறித்துக் கொள்ளுங்கள். மாடமாளிகையுடன், வசதியான வாழ்வின் பின்னணியில் இருந்து கொண்டு ‘ஜனகனமன….’ பாடிக் கொடுத்தவர் தாகூர் !

ஆனால், அடுத்த வேளைக் கஞ்சிக்கில்லாமல், எளியதொரு ஓட்டு வீட்டில் இருந்து கொண்டு,

“ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று, ஆடுவோமே ! பள்ளு பாடுவோமே…” என ஊரார் உள்ளங்களில் உரமேற்றி உலாவிய முண்டாசுக்கவி எங்கள் பாரதி !

அவருக்கிருந்த திறமையில் அன்று ஆயிரமாயிரம் பொருள் சேர்த்து மாட மாளிகைகள் கட்டியிருக்கலாம். அதைவிடுத்து, “பாரதத் தாயின் அடிமை விலங்கொடிப்பேன் பார்..” எனச் சங்கடமற்ற, சமூக சிந்தனையொடு ஆவி நோக, ஆகச்சிறந்த தேசப் பயித்தியமாக விடுதலை கீதம் பாடி அலைந்தவர் சுப்பிரமணிய பாரதியார் !

வெள்ளையர்கள் துரத்த, குடும்பம் துறந்து, பாண்டிக்குச் சென்று, தங்கவோர் திண்ணையின்றி, விடுதலைக்கு ஏங்கி எழுதி, கடைசி வரை சுதந்திர மண்ணைக் கண்ணாரக் காணாமல், திருவல்லிக்கேணி இடுகாட்டில், கொள்ளி வைக்க ஆளின்றி, மெலிந்து சிதைந்து கிடந்த தேகத்துக்கு சொந்தக்கார மகா தேசக்கவி பாரதியார் !

ஐயன்மீரே, கமிட்டிமாரே… ஆங்கோர் ஊர்த்தியில் அவருக்கோர் இடமில்லையா ?

என்னதான் சொல்கிறீர்கள் ? குடியரசு ஊர்த்திகளில் இடம்பெற – உங்களிடம் கொடுக்க வேண்டிய முறையான ஆவணங்கள் தமிழக தரப்பில் இருந்து அளிக்கப்படவில்லை என்கிறீர்களா ?

எங்கள் தரப்பு அதிகாரிகளால் அளிக்கப்பட்ட சமர்ப்பணங்கள் ஏழும் கமிட்டியார் உங்களுக்கு ஏற்புடையதொன்றாக இல்லை என்பதால் அல்லது எங்கள் அதிகாரிகள் ஏதோ தவறிழைத்துவிட்டார்கள் என்பதால்…

இந்த நாடும் – மாநிலமும் இந்தப் பவள விழா ஆண்டில் தங்கள் பெருமையை விட்டுக் கொடுத்து நிற்க வேண்டும் என்கிறீர்களா ?

இந்த நாடு அறிவினால் அல்ல, உணர்வினால் மட்டுமே ஒன்றுபட்டு இருக்கின்றது என்பதை உணர்வீர்களா ?

பெற்ற பிள்ளை சிணுங்கினால் போதாதா ? குறித்த ஸ்வரத்தில் வீறிட்டழுது காட்டினால்தான் தாய்முலைப் பால் சிந்துமா ?

உங்கள் வறட்டு வரைமுறைகள், நாட்டு மக்களுக்கும் – நாட்டின் அரசியலாளர்களுக்கும் அனாவசிய தலைவலியாகி நிற்பதை தயவு செய்து உணருங்கள் !

போகட்டும் !

தமிழ் ஊடக வெளியில் இது பெரும் போராட்டமாக வெடித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையிலும்…

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் கொஞ்சமும் அவசரம் காட்டாதவராக - மிக அமைவாக - பிரதமர் மேல் பெரும் நம்பிக்கை கொண்டவராக -

“பிரதமர் உடனடியாக தலையிட்டு, விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்..” என அறிக்கை வெளியிட்டுக் காத்திருக்கிறார்.

முதலமைச்சரின் அந்த நம்பிக்கை வீண்போகாது என நம்புவோம் !

வேலுநாச்சியாரை புகழ்ந்து இந்த ஜனவரி 3 ஆம் தேதியில். ‘ட்வீட்’ போட்டு ஆதரித்த நமது பிரதமர் மோடி அவர்கள், தமிழுக்கு பழக்கமற்ற தன் எளிய நாவு புரளப் புரள, பாரதியாரின் கவிதை வரிகளை புகழ்ந்து வரும் பாரதப் பிரதமர் மோடி அவர்கள்…

தமிழக முதலமைச்சரின் நியாயக் குரலுக்கு நிச்சயம் செவிமடுப்பார் என நம்புவோம் !

கட்டுரையின் வேண்டுகோள் !

நாடு விடுதலை அடைந்த இந்த பவள விழா ஆண்டை அனைவரும் கொண்டாட விரும்பும் தருணம் இது !

ஒவ்வொரு மாநிலமும் தனக்குண்டான பெருமையை அதில் ஏற்றிப் பார்க்க விரும்புகிறது எனில் அதில் அடர்ந்த நியாயங்கள் உண்டு !

பெருமைக்குரிய பாரதப் பிரதமர் தனது பிரத்தியேக அதிகாரங்களை கொண்டாவது –

தனித்த ஊர்த்திகள் ஒன்றிரண்டுக்கு உத்தரவிடலாம் !

அந்த ஊர்த்திகளில், அனைத்து மாநிலத்தின் பெருமைகளையும் ஏற்றி வைத்து உலகம் அறிய வலம் வரச் செய்யலாம் !

இந்தியத்தை எவராலும் பிளந்து விட முடியாது என எதிரிகளுக்கு எடுத்துக் காட்டி எச்சரிக்கலாம் !

ஒன்றுபட்டால் இங்கு வாழ்வு – நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே !

நன்றிதை தேர்ந்திடல் வேண்டும் - இந்த

ஞானம் வந்தால் பின் நமக்கென வேண்டும் !?

எனும் பாரதியாரின் கவிதை வரிகளை மீண்டுமொருமுறை தமிழுக்கு பழக்கமற்ற தன் எளிய நாவு புரளப் புரள, உலகுக்கு எடுத்தோதி - பிரதமர் மோடி பெருமைப்பட்டுக் கொள்ளலாம் !

கொள்வார் என நம்புவோம் !

வாழிய தமிழகம் !

வாழிய குடியரசு தினம் !!

கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

செவ்வாய் 18 ஜன 2022