மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 ஜன 2022

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பொங்கலை ஒட்டி வெளியான ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் மன்னரும் அமைச்சரும் நடத்தும் உரையாடலில் அரசியல் கமெண்ட்டுகள் தெறித்தன.

நாடு நாடாக போகும் மன்னா, கறுப்புப் பணத்தை ஒழிக்கச் சொன்னா எல்லா பணத்தையும் ஒழிச்சிட்டீங்களே என்றெல்லாம் நடப்பு அரசியல் சம்பவங்களை வைத்து இந்த காமெடி நிகழ்ச்சியில் ஒரு அமர்வு இருந்தது. இது வைரலானதும், ‘இந்த நிகழ்ச்சி பிரதமர் மோடியின் மாண்பைக் குறைக்கும் வகையில் இருக்கிறது’ என்று பாஜக பிரச்சினையைக் கிளப்பியது.

பாஜகவின் சமூக ஊடகப் பிரிவு, ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் இதுகுறித்து ஜீ தொலைக்காட்சி நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரினார்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 17) கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரதமரின் மாண்பைக் குறைக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் எல். முருகன் என்னிடம் கேட்டறிந்தார். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். ஜீ தமிழ் நிகழ்ச்சி விவகாரத்தில் அனைவரும் பொது இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தைத் தொடக்கமாக வைத்துக் கொண்டு ஜீ தமிழ் டிவியின் முக்கிய அடையாளமாக விளங்கும் இயக்குனர் கரு. பழனியப்பனை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கைகளில் பாஜக இறங்கியுள்ளதாக பாஜகவினரே தெரிவிக்கின்றனர்.

“கரு. பழனியப்பன் தொடர்ந்து பாஜகவுக்கு எதிரான கருத்தியலில் இயங்குபவர். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அவர் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்திருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தில் இவர் பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் எதிராக சொன்ன கருத்துகள்தான் அந்த நிகழ்ச்சியில் குழந்தைகளால் பேசப்பட்டிருக்கின்றன. ஜீ தமிழ் டிவியில் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியின் மூலம் பல சமுதாயப் பிரச்சினைகளைப் பற்றி பேசியும் இளைஞர்களை பேசவும் வைத்து வருகிறார் கரு. பழனியப்பன்.

நியூஸ் 18 சேனலில் திராவிட இயக்க ஆதரவாளரான குணசேகரன் தலைமை ஆசிரியராக இருந்தபோது செய்திகள், விவாதங்களில் பாஜகவுக்கு எதிரான கருத்துருவாக்கம் செய்யப்படுகிறது என்ற புகார்கள் எழுந்தன. ஆனால் ஜீ தமிழ் சேனலில் கரு. பழனியப்பன் மூலமாக சமூக அளவில், குழந்தைகள், இளைஞர்களிடம் பாஜகவுக்கு எதிராக கருத்துகள் கொண்டு செல்லப்படுகின்றன. இது குணசேகரன் செய்ததை விட பாஜகவுக்கு பெரும் ஆபத்தாக முடியும். எனவேதான் இப்போது கரு. பழனியப்பனை அகற்றும் ஆபரேஷனைத் தொடங்கியுள்ளோம்.

ஜீ நிறுவனம் இந்திய அளவில் தொழில் செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் மும்பைத் தலைமைக்கு சொல்ல வேண்டிய இடத்தில் இருந்து சொல்லப்பட்டுவிட்டது. அடுத்து கரு. பழனியப்பனை அகற்றுவதுதான் எங்கள் ஆபரேஷன்” என்கிறார்கள் நம்மிடம் பேசிய பாஜக புள்ளிகள்.

-வேந்தன்

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

திங்கள் 17 ஜன 2022