மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 ஜன 2022

மோடியை அழைத்திருக்கத் தேவையில்லை: கே.பாலகிருஷ்ணன்

மோடியை அழைத்திருக்கத் தேவையில்லை: கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக திறந்து வைத்தார். முன்னதாக நேரில் வந்து பிரதமர் இந்த விழாவில் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பிரதமரின் நேரடி வருகை ரத்து செய்யப்பட்டது. ஆனபோதும் ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டேவியா சென்னைக்கு வந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டார். டெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி 11 மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைத்தார்.

இந்த நிலையில் திமுகவின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ‘மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைத்திருக்கக் கூடாது’ என்று கூறியுள்ளார்.

இன்று (ஜனவரி 17) இந்து ஆங்கில நாளிதழுக்கு கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில்,

“தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்க பிரதமரை அழைக்கவேண்டிய தேவை இல்லை என்று நான் கருதினேன். மருத்துவக் கல்லூரிகள் மாநில அரசு மற்றும் மத்திய அரசால் நிதியளிக்கப்பட்டவை. மதுரையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை முடிப்பதற்கு பிரதமர் உதவி செய்தால், அதன் திறப்பு விழாவுக்கு நாம் பிரதமரை வரவேற்கலாம். அதேநேரம் மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவுக்கு பிரதமரை அழைக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு எந்த நிர்பந்தமும் கிடையாது. ஆனால் மாநில அரசு இவ்விஷயத்தில் ஒரு முடிவெடுத்திருக்கிறது. அரசின் எல்லா முடிவுகளையும் கேள்வி கேட்க முடியாது.

ஒருவேளை மாநில அரசு மத்திய அரசோடு இணக்கமாக போக விரும்புகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைத்த பிரதமர்தான் தமிழ்நாட்டுக்கான வெள்ள நிவாரண கோரிக்கைகளுக்கு பதில் அளிக்காமல் மௌனம் காக்கிறார். நீட் தேர்வு குறித்த தமிழகத்தின் கோரிக்கையை முதல்வரே எழுப்பியும் பிரதமர் இதுவரை பதிலளிக்கவில்லை” என்று கூறியிருக்கிறார் கே.பாலகிருஷ்ணன்.

மேலும் மதுவிலக்கு குறித்த கேள்விக்கு, “இப்போதும் மதுக்கடைகளை கட்டம் கட்டமாக மூட வேண்டும் என்றுதான் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். மற்ற ஆதாரங்களில் இருந்து வரும் வருவாய் குறைந்து வருவதாகவும், மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் வருவாய் அரசாங்கத்தை நிலைநிறுத்துவது அவசியம் என்றும் ஒரு கருத்து உள்ளது. இந்த வாதத்தை நாம் ஏற்க முடியாது. குடிமகன்களிடையே குடிப்பழக்கத்தை அதிகரித்து வருவாய் ஈட்டுவது நாட்டுக்கு நல்லதல்ல. மக்களும் அதற்கு ஆதரவாக இல்லை.

சமுதாய நலனுக்காக டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். மதுவிலக்கு என்பது மதுக்கடைகளை மூடுவது மட்டும் அல்ல என்பதால் அதற்கு நேரம் ஆகலாம். மது தடை செய்யப்பட்டால், கள்ளச்சாராயம் மற்றும் கொள்ளையடிப்பதை அரசு தடுக்க வேண்டும். மதுக்கடைகளை மூடும் நாளில் குடிப்பழக்கம் ஒழியாது. இது ஒரு நீண்ட செயல்முறை. ஆனால் அதை அரசு தொடங்க வேண்டும்" என்றார் கே.பாலகிருஷ்ணன்

-வேந்தன்

டெல்லி பயணம்: பன்னீரின் அடுத்த திட்டம்!

3 நிமிட வாசிப்பு

டெல்லி பயணம்:  பன்னீரின் அடுத்த திட்டம்!

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட ...

7 நிமிட வாசிப்பு

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட அறப்போர்!

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ...

3 நிமிட வாசிப்பு

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ட்விஸ்ட்!

திங்கள் 17 ஜன 2022