தமிழக அலங்கார ஊர்தி நிராகரிப்பு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

politics

ஆண்டுதோறும் ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியம் மற்றும் வரலாற்றைப் போற்றும் விதமாக அலங்கார ஊர்திகள் பங்கேற்கும்.

ஆனால் இந்த ஆண்டு டெல்லி ராஜபாதையில் நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்குபெற இருந்த அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது.

தென் மாநிலங்களைப் பொறுத்தவரை பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தைத் தவிர மற்ற மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் அலங்கார ஊர்தியில் இந்த ஆண்டு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோர் உருவப்படங்கள் இடம்பெறுவதாக இருந்தது. இந்த சூழலில் தமிழக அரசின் அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. மிகவும் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகக் கூறி நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் கொடுத்த கருத்துருவை மாற்றும்படி மத்திய அரசு கூறியதாகவும், மூன்று முறை மாற்றம் செய்தும், 4ஆவது முறை ஆலோசனைக்குத் தமிழக அரசு சார்பில் யாரையும் அழைக்காமல் தன்னிச்சையாக மத்திய அரசு நிராகரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுபோன்று இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக ராஜபாதையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாநிலங்களின் எண்ணிக்கையையும் 12ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அலங்கார ஊர்திகளை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு தேர்வு செய்யும் நிலையில், இது தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதுபோன்று பிரதமர் மோடிக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கடிதம் எழுதியுள்ளார் .குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்திலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. பிரதமர் இதில் உடனே தலையிட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே கடந்த ஜனவரி 3ஆம் தேதி வேலு நாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், “வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

இந்த சூழலில், வேலுநாச்சியார் உள்ளிட்ட வீரர்களின் உருவப்படங்கள் இடம்பெற இருந்த அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதால் தமிழகத்திலிருந்து கண்டன குரல்களும் வலுத்து வருகின்றன.

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *