Bமிஸ் யூ டாக்டர் ராவ்லின்

politics

பிரபல மருத்துவரான சென்னையைச் சேர்ந்த டாக்டர் ராவ்லின் அகஸ்டின் மாரடைப்பால் இன்று (ஜனவரி 16) காலை காலமாகிவிட்டார். இன்று சமூக தளங்களில் டாக்டர் ராவ்லின் அகஸ்டினுக்கான அஞ்சலி ஸ்டேட்டஸுகள் ஆயிரக்கணக்கில் கண்ணீரைப் பரப்பி வருகின்றன.

தோல் மருத்துவ சிகிச்சை நிபுணரான டாக்டர் அகஸ்டினின் மகனான டாக்டர் ராவ்லின், கடந்த 35 வருடங்களாக சென்னையில் புகழ் பெற்ற பொதுநல மருத்துவராக பணியாற்றி வந்தார். அரசியல் தலைவர்கள், நடிகர்கள், இயக்குனர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் என்று சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கும் குடும்ப மருத்துவராக இருந்தார் டாக்டர் ராவ்லின். ஒருமுறை அவரிடம் ஆலோசனைக்காக சென்றவர்கள் மீண்டும் எத்தனை வருடங்களானாலும் அவரிடமே செல்லும் அளவுக்கு அவரது அணுகுமுறை அமைந்திருக்கும். அதனால்தான் பிசியான மருத்துவராக இருந்த போதிலும் சமூகத்தின் பல்வேறு விஐபிகளுக்கும் நண்பராகவும் திகழ்ந்தார்.

இன்று சமூக தளங்களில் பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்களும் தங்கள் நண்பரை இழந்த அதிர்ச்சியில் தங்களுக்கும் டாக்டர் ராவ்லினுக்கும் இடையேயான நட்பைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

டாக்டர் ராவ்லின் எளிமையான மருத்துவர். எந்த சூழலிலும் அணுகக் கூடியவர். அவருக்கு மருத்துவ ஆலோசனைகள் கேட்டு நாளின் 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் போன் வரும். எந்த நேரத்திலும் போன் அழைப்புகளை தவிர்க்காமல், சலிப்பும் இல்லாமல் பேசுபவர். சமூக தளங்கள் மூலம் பேசுபவர்களிடம் கூட எந்த வித எதிர்பார்ப்பும் கட்டணமும் இல்லாமல் மருத்துவ அறிவுரைகளை வழங்கி வந்தார் டாக்டர் ராவ்லின்.

டாக்டர் ராவ்லினின் நண்பர் ஒருவர் இரவு 11.45 மணியளவில் அவருக்கு போன் செய்திருக்கிறார். ‘டாக்டர்… ட்ரெயின்ல போயிட்டிருக்கேன். திடீர்னு நெஞ்சு வலிக்குற மாதிரி இருக்கு’ என்று பதறியிருக்கிறார். மறுமுனையில் பேசிய டாக்டர் ராவ்லின், ‘ஒண்ணும் பயப்படாதீங்க. தண்ணி பாட்டில் வச்சிருக்கீங்களா…கொஞ்சம் தண்ணி குடிங்க. உங்க கோச்சுகுள்ளயே நடக்க ஆரம்பிங்க…’ என்று கூறுகிறார். அவர் சொல்படியே அந்த நண்பரும் நடக்க ஆரம்பிக்கிறார். ‘நடக்குறீங்களா… இப்ப வேகமா நடங்க…நீங்க மூச்சு வாங்குற சத்தம் எனக்கு கேக்கலியே?’என்று ராவ்லின் கேட்க, மீண்டும் அந்த நண்பர் தன் கோச்சுக்குள்ளேயே வேகமாக நடக்கத் துவங்குகிறார். ஒரு கட்டத்தில் நெஞ்சுவலி நின்று போகிறது. அந்த நேரத்தில் சுமார் இருபது நிமிடங்கள் செல்போனை காதில் வைத்தபடியேயே ஆலோசனைகளை சொல்லிக் கொண்டிருந்தார் டாக்டர் ராவ்லின். மீண்டும் அந்த நண்பர் சென்னை வந்து சேர்ந்தவுடன் உடனடியாக அந்த துறைக்கான சிறந்த மருத்துவ நிபுணரிடம் அனுப்பி வைத்திருக்கிறார் டாக்டர் ராவ்லின்.

பொதுநல மருத்துவராக இருந்த ராவ்லின், தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்தந்த துறை சார்ந்த நிபுணர்களை பரிந்துரைப்பதில் நிபுணராக இருந்தார். பரிந்துரைப்பதோடு இருந்துவிடாமல்… அந்த ஸ்பெஷலிஸ்ட் மருத்துவருக்கு தன் கைப்பட கடிதம் எழுதி, தன் தந்தையின் செல்வாக்கையும் பயன்படுத்தி அப்பாயின்ட்மென்ட் ஃபிக்ஸ் செய்து, தனது பேஷன்ட்டை அனுப்பி வைப்பார். பெரிய பெரிய மருத்துவமனைகளில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்த விவகாரங்களில் எல்லாம், டாக்டர் ராவ்லின் பரிந்துரைக்கும் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்கள் ஆபரேஷன் இல்லாமலேயே குணமாக்கும் சிகிச்சையை அளித்திருக்கிறார்கள்.

இப்படி பதறும் நேரங்களில் பயப்படும் நேரங்களில் ராவ்லின் என்ற பெயரே பலரையும் காப்பாற்றும் மந்திரமாக இருந்தது. மருத்துவர் என்பவர் எவ்வளவு இனிமையானவராக இருக்க வேண்டும், எவ்வளவு கனிவானவராக இருக்க வேண்டும் என்று தன் அணுகுமுறைகள் மூலம் பல மருத்துவர்களுக்கே பாடம் நடத்தியவர் டாக்டர் ராவ்லின்.

அதனால்தான், ‘வி மிஸ் யு டாக்டர் ராவ்லின்’ என்ற வார்த்தைகள் பலருடைய இதயத்தில் இருந்து புறப்பட்டு எழுத்தாக இறக்குமதியாகிக் கொண்டிருக்கிறது இன்று.

** -வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *