மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 ஜன 2022

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

வைஃபை ஆன் செய்ததும், டெலிகிராமில் செய்திகள் வந்து கொட்டின. ’முதல்வர் கேபினட்டில் செய்த இலாகா மாற்றம் பற்றி விரிவாக செய்தி அளிக்கத் திட்டமிட்டிருந்தேன். பொங்கல் லீவில் ஊருக்கு போய்விட்டதால் அனுப்பவில்லை. இப்போது அனுப்புகிறேன்’ என்று முன்குறிப்போடு ஒரு நீண்ட மெசேஜ் வந்து விழுந்தது.

“தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று எட்டு மாதங்கள் முழுதாக முடிந்த நிலையில் மூன்று அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆளுநரின் அறிவிப்பின்படி தமிழக தொழில் துறை அமைச்சரிடம் இருந்து வந்த சர்க்கரை ஆலைகள் துறையை இனி வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கவனிப்பார். அதேபோல போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் வசம் இருந்த விமானப் போக்குவரத்துத் துறையை இனி தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கவனித்துக் கொள்வார். சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தானிடம் இருந்த அயலக பணியாளர் துறையானது தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி. கணேசனிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர தொழில் துறையிலிருந்து சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் பிரிவு தனியே பிரிக்கப்பட்டு, புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரகம், தமிழ்நாடு கனிமவள நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு புதிதாக இயற்கை வளத்துறை என உருவாக்கப்பட்டு அது துரைமுருகனிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும், அதில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகவோ அல்லது துணை முதலமைச்சராகவோ ஆவார் என்று திமுகவில் பரவலாக பேச்சு எழுந்த நிலையில், பொங்கலுக்கு முன்னதாக இந்த மாற்றத்தைச் செய்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். உதயநிதி கைவசம் இருக்கும் சினிமாக்களின் பணிகள் முடிய செப்டம்பர் மாதம் வரை கூட ஆகலாம் என்ற நிலையில், அதற்குள் இந்த மாற்றத்தைச் செய்திருக்கிறார் முதல்வர்.

இந்த மாற்றத்தின் பின்னணி பற்றி கோட்டை வட்டாரத்தில் பேசுகையில், ‘இந்த இலாகா மாற்றங்களால் பாதிக்கப்படும் அமைச்சர் என்று பார்த்தால் அது அமைச்சர் கண்ணப்பன் மட்டும்தான்’என்று முணுமுணுக்கின்றனர்.

‘சர்க்கரை ஆலைகள் துறை முதலில் விவசாய அமைச்சரிடம்தான் இருந்து வந்தது. ஏனென்றால் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு பாக்கி வைத்திருக்கும் நிலையில் விவசாயிகளின் பிரச்சினையை டீல் செய்ய விவசாய அமைச்சர் வசம் இந்தத் துறை இருந்தது. கலைஞர்தான் இந்த சர்க்கரை ஆலைகள் துறையை தொழில் துறை அமைச்சரிடம் கொடுத்தார். அதுவே தொடர்ந்து வந்தது. கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கூட இதுகுறித்து தொழில் துறை அமைச்சர் எம். சி.சம்பத்தும், வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவும் ஒருவருக்கொருவர் இந்த விவகாரத்தில் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தனர். தொழில் துறை அமைச்சர் சம்பத் விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் கொடுக்க வேண்டிய கரும்பு பாக்கி தொகையை தீபாவளிக்குள் கொடுத்துவிடுவார்கள், பொங்கலுக்குள் கொடுத்துவிடுவார்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் விவசாய அமைச்சர் துரைக்கண்ணுவோ, ‘விவசாயிகளுக்குத் தரவேண்டிய தொகையை தராமல் சர்க்கரை ஆலைகள் கைவிரித்துவிட்டன’ என்று கூறியிருந்தார்.

இந்த பின்னணியில், ’சர்க்கரை ஆலைகள் விவகாரங்கள் தொழில் துறையிடம் இருந்தால்.... கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியவில்லை, எனவே சர்க்கரை ஆலைகளை வேளாண் அமைச்சரிடமே கொடுக்கலாம்’ என்று முதல்வருக்கு சில ஆலோசனைகள் கொடுக்கப்பட்டன. இதையடுத்தே மீண்டும் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்துக்கே சர்க்கரை ஆலைகள் துறையை கொடுத்திருக்கிறார் முதல்வர்.

தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இருந்து சர்க்கரை ஆலைகள் துறை மாற்றப்பட்டதால் அவருக்கு ராஜகண்ணப்பன் வசம் இருந்த விமானப் போக்குவரத்துத் துறை கொடுக்கப்பட்டிருக்கிறது. இங்கேதான் கண்ணப்பனுக்கு பெரிய செக் வைத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கண்ணப்பன் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களை சந்தித்து கட்சிக்கு பெருமளவு நிதியும் அளித்து தேர்தல் செலவுகளிலும் குறிப்பிட்ட பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதற்கு பதிலாக எம்.எல்.ஏ. சீட்டும், ஆட்சி அமைந்ததும் அமைச்சர் பதவியும் வேண்டும் என்பதையும் கேட்டு அதற்கு உத்தரவாதமும் பெற்றுக்கொண்டார். ஆனாலும் அமைச்சரவையில் சில மாதங்களிலேயே கண்ணப்பன் மீது முதல்வருக்கு சில புகார்கள் சென்றன. தீபாவளிக்கு முன்னதாக போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்கு ஸ்வீட் கொள்முதல் செய்ததில் கமிஷன் முறைகேடுகள் நடந்ததாக மின்னம்பலத்தில் முதல் முறையாக செய்தி வெளியானது. அதை அடிப்படையாக வைத்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பினர். அதன் தொடர்ச்சியாக அந்த கொள்முதலை ரத்து செய்த முதல்வர் அரசின் அனைத்து துறையினரும் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே ஸ்வீட் வாங்க வேண்டுமென்று ஆணையிட்டார் முதல்வர்.

இதற்குப் பிறகும் கண்ணப்பன் மீதான புகார்கள் குறையவில்லை. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் வந்துகொண்டிருக்கின்றன.அந்த லாரிகள் உரிய நேரத்தில் சரக்கை உரிய இடத்தில் கொண்டு போய் சேர்க்கவில்லையென்றால் பல லட்சம், கோடிகள் ரூபாய் நட்டம் ஏற்படும். இந்த நிலையில் சமீபமாக அந்த லாரிகளை திடீர் திடீரென நிறுத்தி விசாரணை என்று சொல்லி தாமதப்படுத்தியிருக்கிறார்கள் அதிகாரிகள். இதனால் லாரி உரிமையாளர்களுக்கு பிரச்சினைகள் வர, உரிய அதிகாரிகளைத் தொடர்புகொண்டிருக்கிறார்கள். அவர்களோ அமைச்சரைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள். இந்த விஷயமும் முதல்வர் காது வரை போயிருக்கிறது.

மேலும் ஒன்றிய அரசின் உதான் திட்டப்படி இந்தியாவில் ஆயிரம் புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்பட இருக்கின்றன. பல சிறு நகரங்களிலும் விமான நிலையங்கள் நிறுவி நாட்டுக்குள் தொடர்பை எளிமையாக்குவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். அந்த வகையில் தமிழகத்துக்கும் விமான நிலையங்கள் வர இருக்கின்றன. மேலும் ஸ்ரீபெரும்புதூரில் கிரீன் ஃபீல்ட் விமான நிலையமும் வர இருக்கிறது. ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைய இருக்கிறது. இந்த விவகாரங்களில் நில ஆர்ஜிதம் உள்ளிட்டவற்றை எல்லாம் தமிழக அரசு சார்பில் தொழில் துறையோடு இணைந்து விமானப் போக்குவரத்துத் துறைதான் கையாளவேண்டும். ராஜ கண்ணப்பனிடம் இந்த விவகாரங்கள் இருந்தால் மேலும் சர்ச்சையாகும் என்று கிடைத்த தகவல்களின்படியே அவரிடமிருந்து விமானப் போக்குவரத்துத் துறையை மட்டும் பிரித்து தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமே கொடுத்துவிட்டார் முதல்வர். இதனால் கண்ணப்பனுக்கு பெரிய செக் வைத்துவிட்டார். இந்த துறை மாற்றம் நடந்ததில் கண்ணப்பனுக்குதான் அதிருப்தி” என்ற மெசேஜை டைப் செய்துவிட்டு ஆஃப் லைன் போனது டெலிக்ராம்.

மோடி வருகை: கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக நிபந்தனை!

4 நிமிட வாசிப்பு

மோடி வருகை: கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக நிபந்தனை!

ஓபிஎஸ் பேசினாரா?: சசிகலா பதில்!

6 நிமிட வாசிப்பு

ஓபிஎஸ் பேசினாரா?: சசிகலா பதில்!

டி.ராஜேந்தருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: ஏன்?

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: ஏன்?

ஞாயிறு 16 ஜன 2022