விசாரணைக்கு வரத் தயார்: ராஜேந்திர பாலாஜி

பண மோசடி வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் விசாரணைக்கு வரத் தயாராக உள்ளதாக காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றவியல் பிரிவு போலீசார் ராஜேந்திர பாலாஜி மீது 2 வழக்குகள் பதிவு செய்தனர்.
இதனால் தலைமறைவான அவருக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டது. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திடம் சென்று 4 வாரம் நிபந்தனை ஜாமீன் பெற்றார். அப்போது, மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை அதிகாரியின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது
இதையடுத்து கடந்த ஜனவரி 13ஆம் தேதி திருச்சி சிறையிலிருந்து வெளியே வந்த ராஜேந்திர பாலாஜி, தற்போது விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ள தனது வீட்டில் தங்கி இருக்கிறார்.
இந்த சூழலில் ராஜேந்திர பாலாஜி சார்பில் அவரது வழக்கறிஞர் மாரிஸ் குமார் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸிடம் கொடுத்துள்ள மனுவில், திருத்தங்கலில் ராஜேந்திர பாலாஜி தங்கியுள்ள முகவரியைக் குறிப்பிட்டு, எப்போது விசாரணைக்கு வர வேண்டும் என்று தகவல் தெரிவித்தாலும் அப்போது வர தயாராக இருப்பதாகவும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
நிபந்தனை ஜாமீனில் உள்ள ராஜேந்திர பாலாஜி எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-பிரியா