ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் என்ன?

politics

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்த அறிக்கையை முப்படைகளின் விசாரணைக்குழு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.

கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி நீலகிரி குன்னூர் அருகே இந்தியாவின் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்டோர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த விமானி வருண் சிங், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த டிசம்பர் 15ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த கோர விபத்து இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனுடன் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணமா அல்லது சதிச் செயலா? என்ற சந்தேகம் எழுந்தது. அதனால், இந்த விபத்து குறித்து இந்திய முப்படை விசாரணை நடத்தப்படும் என்று மக்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். அதன்படி, விமானப்படை தளபதி மானவேந்திர சிங் தலைமையில் முப்படை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இக்குழு பல்வேறு தரவுகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு, தற்போது அதன் அறிக்கையை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் நேற்று சமர்ப்பித்தது.

இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குன்னூர் ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணங்களை அறிவதற்காக விமான டேட்டா ரெக்கார்டர்கள் மற்றும் காக்பிட் குரல் ரெக்கார்டர்கள் ஆய்வு செய்யப்பட்டது. இயந்திரக் கோளாறு, சதிவேலை அல்லது விமானியின் அலட்சியம் போன்ற காரணங்களால் விபத்து நடந்து இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றது. ஆனால் இதில் எதுவும் காரணம் இல்லை.

வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றத்தால் மேகங்கள் திடீரென ஹெலிகாப்டர் பறந்த பாதையில் குறுக்கே வந்ததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது. இதனால் விமானியின் கவனம் நிலைகுலைந்துபோய் ஹெலிகாப்டர் விபத்து நடந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *