மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜன 2022

தயார் நிலையில் தமிழகம்: பிரதமரிடம் முதல்வர் உறுதி!

தயார் நிலையில் தமிழகம்: பிரதமரிடம் முதல்வர் உறுதி!

கொரோனா அலையை நிர்வகிப்பதில் ஒன்றிய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக அரசு துணை நிற்கும் என்று பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி நேற்று மாலை அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர், முந்தைய தொற்றை ஒப்பிடுகையில் ஒமிக்ரான் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். அதுபோன்று அனைத்து மாநிலங்களும் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நிதி நிலைமை பாதிக்காதவாறு உள்ளூர் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று தெரிவித்தார்.

கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “ஒமிக்ரான் அலையை நிர்வகிக்கத் தமிழகம் முழுமையாகத் தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவது அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று வரை, தகுதியுள்ளவர்களில் 64% பேருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், 15 முதல் 18 வயது வரையிலான இளைஞர்களில் 74 சதவிகிதத்தினருக்கு தடுப்பூசி போட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கும் தற்போது நல்ல வரவேற்பு உள்ளது.

கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்திட, மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தேவையான அனைத்து நகரங்களிலும் கொரோனா பராமரிப்பு மையங்களும் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தேசிய அளவில் வரையறுக்கப்பட்ட சோதனை விதிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆர்.டி.பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கை, ஆக்சிஜன் உற்பத்தித் திறன், ஆக்சிஜன் சேமிப்பு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளும் தமிழ்நாட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளைக் கண்டிப்பாக அமல்படுத்துமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளேன். நிலைமையைச் சமாளிக்க அனைத்து அரசு இயந்திரமும் முழுமையாகத் தயார் நிலையில் உள்ளது. இந்த கொரோனா அலையை நிர்வகிப்பதில் ஒன்றிய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தமிழ்நாடு துணை நிற்கும் என்று கூறினார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

வெள்ளி 14 ஜன 2022