மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 ஜன 2022

அடுத்தடுத்து விலகும் அமைச்சர்கள்: உ.பி அரசியல் ஆட்டத்தின் பின்னணி!

அடுத்தடுத்து விலகும்  அமைச்சர்கள்: உ.பி  அரசியல் ஆட்டத்தின் பின்னணி!

உத்திரப்பிரதேச பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் இருந்து கடந்த மூன்று நாட்களில் மூன்றாவது அமைச்சர் இன்று (ஜனவரி 13) பதவி விலகியிருக்கிறார். இதுவரை மூன்று அமைச்சர்கள் உள்ளிட்ட எட்டு எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இருந்து விலகியிருக்கிறார்கள். தேர்தலை எதிர்கொள்ளும் அம்மாநில பாஜகவுக்கு இது கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 11 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை யோகி அரசில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த ஓபிசி தலைவரும், ஐந்து முறை எம்.எல்.ஏ.வுமான சுவாமி பிரசாத் மவுரியா அமைச்சர் பதவியில் இருந்தும் பாஜகவில் இருந்தும் விலகினார். அடுத்த நாள் ஜனவரி 12 ஆம் தேதி புதன் கிழமை பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தவரும் வனம் சுற்றுச் சூழல் கால்நடைத் துறை அமைச்சரான தாரா சிங் சவுகான் பதவி விலகினார். இவர்களது ஆதரவாளர்களான பாஜக எம்.எல்.ஏ.க்களும் பதவி விலகினார்கள்.

இந்த நிலையில் மூன்றாவது நாளாக இன்று (ஜனவரி 13) வியாழக் கிழமை மாநில ஆயுஷ் அமைச்சர் டாக்டர் தரம் சிங் சைனி ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே விலகிய இரு அமைச்சர்களும் சமாஜ் வாதி கட்சியில் சேர்ந்த நிலையில் இவரும் சமாஜ்வாதி கட்சியில்தான் இணைகிறார்.

அமைச்சர் சைனி உபி மாநில ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், “ மாநிலத்தில் பாஜகவின் ஆட்சியில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தலைவர்கள், விவசாயிகள், படித்த வேலையில்லாதவர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் புறக்கணிக்கப்பட்டதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று எழுதியுள்ளார்.

பதவி விலகியதுமே சைனி சமாஜ் வாதி கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ்வை சந்தித்தார். இந்த சந்திப்பு பற்றி ட்விட் செய்திருக்கும் அகிலேஷ், “சமூக நீதியின் இன்னொரு சாம்பியனான டாக்டர் தரம் சிங் சைனியின் வருகையால், நமது 'நேர்மறை மற்றும் முற்போக்கான அரசியலுக்கு' அதிக சக்தியும் உற்சாகமும் கிடைத்துள்ளது. . அவரை மரியாதையுடன் சமாஜ்வாதி கட்சி வரவேற்கிறது. 2022 இல் அனைவரையும் உள்ளடக்கிய நல்லிணக்கத்தின் வெற்றி நிச்சயம்”என்று குறிப்பிட்டுள்ளார்.

சௌஹான் மற்றும் சுவாமி பிரசாத் மௌரியா போன்ற இரண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பு தலைவர்கள் விலகுவதால், பாஜக முகாம் களையிழந்து காணப்படுகிறது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால்,இருவரின் ராஜினாமா கடிதங்களும் ஒரே மாதிரியாக எழுதப்பட்டுள்ளன. பாஜக ஆட்சியில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற பிரிவினர் புறக்கணிக்கப்பட்டதாக இரு அமைச்சர்களும் குற்றம் சாட்டினர். தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் புறக்கணிக்கப்பட்டால், ஏன் ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்கள் என்று கேட்டதற்கு, இந்தக் கேள்வி எழும் என்று தனக்குத் தெரியும் என்று சவுகான் கூறினார். ’ஒரு சில அமைச்சர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டு வந்தது. நாங்கள் உட்பட பல அமைச்சர்கள் புறக்கணிக்கப்பட்டோம்’ என்று அவர் பதிலளித்துள்ளார்.

சவுகான் நோனியா எனப்படும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். எம்எல்சி மற்றும் பின்னர் எம்பி ஆனார். அதன் பிறகு அவர் சமாஜ் வாதி கட்சியில் சேர்ந்தார். அவர் 2014 எம்பி தேர்தலில் தோல்வியடைந்து பாஜகவில் சேர்ந்தார். பாஜகவின் மாநில பிற்படுத்தப்பட்டோர் மோர்ச்சாவின் தலைவராக இருந்தார். ஐந்தாண்டுகள், அவர் கூறியபடி, அவர் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரச்சினைகளை எழுப்பினார். ஆனால் தேர்தல் விதிகள் அமலுக்கு வரும் வரை காத்திருந்துவிட்டு பின்னர்தான் ராஜினாமா செய்தார்.

இதற்கிடையே சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவரான மற்றொரு பிற்படுத்தப்பட்ட வகுப்பின் தலைவரான ஓம் பிரகாஷ் ராஜ்பர், “ஜனவரி 20ஆம் தேதிக்குள் பாஜகவில் 18 அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் வெளியேறுவார்கள்” என்று கூறி மாநில அரசியலில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்கள்.

இந்த தொடர் ராஜினாமாக்களுக்கான காரணங்கள் என்ன?

“2017 சட்டமன்றத் தேர்தலின் போது, ​​பிஜேபி சார்பில் வெற்றி பெற்ற சுமார் 100 பேர் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி அக்கட்சியில் இணைந்தவர்கள். அவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தலித்துகள் மத்தியில் நல்ல செல்வாக்கைக் கொண்டிருந்தனர். . இந்தத் தலைவர்கள் மற்றும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால்தான் சட்டமன்றத் தேர்தலில் பாஜக நான்கில் மூன்று பெரும்பான்மையைப் பெற முடிந்தது. இப்போது, மாநில அரசியலில் பாஜக ஒரு பெரிய சக்தியாக மாறியுள்ளதாக நம்புகிறது. அதனால் கடந்த தேர்தலில் தனது வெற்றிக்கு அடித்தளம் அமைத்த இந்த சிறு கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களை உதாசீனப்படுத்த ஆரம்பித்தது. பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆகியோருக்காகவே இம்முறை மக்கள் வாக்களிப்பார்கள் என்று கருதிக் கொண்டு... கடந்த தேர்தலில் பாஜகவுக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய இந்த 100 பேர்களில் பலருக்கு டிக்கெட் தருவதில்லை என்று முடிவெடுத்து பாஜக. இதுதான் வரிசையாக அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலக் காரணம். உற்று நோக்கினால் இவர்கள் அனைவருமே வேறு வேறு கட்சிகள், அமைப்பில் இருந்து பாஜகவுக்கு கடந்த 2017 தேர்தலுக்கு முன் வந்தவர்கள். இப்போது வரும் தேர்தலில் டிக்கெட் இல்லை என்ற காரணத்தால் அங்கிருந்து நகர ஆரம்பித்துவிட்டார்கள். கடந்த தேர்தலில் தங்கள் லோக்கல் செல்வாக்கை பாஜகவுக்கு ஆதரவாகக் கொடுத்தவர்கள், இப்போது பாஜகவுக்கு எதிராக நிரூபிக்க கொடுக்க நினைக்கிறார்கள்.

2017 இல் பாஜக செய்த உத்தியை இப்போது சமாஜ்வாதி கையிலெடுக்கிறது. பாஜகவில் இருந்து வெளியேறும் அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்களை இப்போது வரவேற்கிறது அக்கட்சி. சமாஜ் வாதி கட்சியின் வாதப்படி இவர்கள் இன்னமும் தங்கள் பகுதிகளில் செல்வாக்காகத்தான் இருக்கிறார்கள். எனவே இம்முறை அவர்களுக்கு சீட் கொடுத்து அவர்களின் வெற்றியை சமாஜ் வாதியின் வெற்றியாக மாற்ற முனைகிறார் அகிலேஷ் யாதவ்.

மொத்த சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 403 மட்டுமே. இம்முறை அகிலேஷ் தனது கட்சியினருக்கு திருப்தியளிக்கும் வகையில் இடங்கள் அளிப்பதோடு இதுபோன்று கட்சி மாறி வருபவர்களுக்கும் சீட் கொடுக்க வேண்டும் என்ற நெருக்கடியும் அவருக்கு இருக்கிறது” என்கிறார் இந்தியா டிவி ஆசிரியரும் அரசியல் ஆய்வாளருமான ரஜத் ஷர்மா.

இந்த நிலையை உணர்ந்த பாஜக மேலிடம் தற்போது தனது பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் சீட் கொடுக்கும் முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. சில அமைச்சர்களுக்கு தொகுதி மாற்றவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

-ஆரா

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

வியாழன் 13 ஜன 2022