மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 ஜன 2022

வீட்டுத் தனிமை...ஏழை மக்கள் என்ன செய்வார்கள்?: ஈபிஎஸ்

வீட்டுத் தனிமை...ஏழை மக்கள் என்ன செய்வார்கள்?: ஈபிஎஸ்

வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாத ஏழை, எளிய மக்கள் எப்படி கொரோனா சிகிச்சை பெறுவார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், லேசான அறிகுறிகள் இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளலாம். இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சு தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, “மிதமான நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் மற்றும் ஆக்சிஜன் செறிவு 92க்கு மேல் உள்ளவர்கள், அவரவர் வீடுகளிலேயே 6 முதல் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார் மா.சுப்பிரமணியன்.

அரசின் அறிவிப்பை மீறி, நோய்த் தொற்று பாதித்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மற்றொரு பேட்டியில் பேசியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி, நோய்த் தொற்று ஏற்பட்டவர்களில் 85 சதவீதத்தினருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பும், 15 சதவீதம் பேருக்கு டெல்டா வகை தொற்றும் ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறிய அன்று, சுகாதாரத் துறையின் அறிக்கையில் சுமார் 800 நபர்கள்தான் ஒமிக்ரான் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.

அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் அளித்த பேட்டி உண்மையா? அல்லது சுகாதாரத் துறையின் அறிக்கை உண்மையா? நோய்த் தொற்று பாதித்தவர்கள் உண்மையிலேயே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமா? அல்லது வீட்டிலேயே இருக்க வேண்டுமா? வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாத ஏழை, எளிய, நடுத்தர மக்கள் எங்குச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்? சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இதய நோய், நுரையீரல் பாதிப்பு போன்ற இணை நோய்ப் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு எந்த மாதிரியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக மக்கள் புரியாமல் தவிக்கின்றனர்.

சுகாதாரத் துறை அமைச்சர் தனது அறிக்கையில் ஒமிக்ரான் நோய்த் தொற்று பாதிப்பை உறுதி செய்யும் ஆய்வக வசதி மத்திய அரசிடம்தான் உள்ளது. எனவே, தற்போது ஒமிக்ரான் பரிசோதனையை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த் தொற்று முதன் முதலில் பரவிய மார்ச் 2020-ல், தமிழ் நாட்டில் சென்னை கிங்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் மட்டுமே ஆய்வக வசதி இருந்தது. ஆனால், ஒவ்வொரு மனித உயிர்களும் அப்போதைய அதிமுக அரசுக்கு முக்கியமானவை. எனவே, அரசின் சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆய்வகங்களைத் தொடங்குவதில் நாங்கள் உறுதியான முடிவெடுத்துச் செயல்பட்டோம். அதன்படி, 2021 ஏப்ரல் கடைசியில், தமிழகத்தில் 265 பரிசோதனை மையங்கள் செயல்பட்டன.

எனவே, தமிழக அரசு உடனடியாக அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஒமிக்ரான் பரிசோதனை மையங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். எந்தவித நோய்த் தொற்றால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்பதை மக்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டிய அடிப்படை கடமை இந்த அரசுக்கு உண்டு.

மேலும், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு ஆக்சிஜன் அளவை காட்டும் பல்ஸ் ஆக்சி மீட்டர்கள் வழங்கப்படுவதாக, சுகாதாரத் துறை அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழகமெங்கும் உள்ள பெரும்பாலான நோயாளிகளுக்கு இந்த பல்ஸ் ஆக்சி மீட்டர் அரசால் வழங்கப்படவில்லை என்றே செய்திகள் கூறுகின்றன. பல்ஸ் ஆக்சி மீட்டர் இல்லாதவர்கள், தங்களது உடலில் ஆக்சிஜன் அளவு 92க்கும் கீழே சென்று விட்டதை எப்படி அறிவார்கள்? கடந்த ஆண்டு மத்தியில், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் ஆக்சிஜன் செரிவு குறைந்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் கிடைக்காமல் இறக்க நேரிட்டதை ஊடகங்கள் நேரடியாக ஒளிபரப்பின.

கொரோனோ நோய்த் தொற்று அதிவேகமாகப் பரவி வரும் இச்சூழ்நிலையில் ஒரு பொறுப்புள்ள அமைச்சர் ஊரடங்குக்கு அவசியம் இல்லை என்றும்; ஒமிக்ரான் பரிசோதனை மையம் மாநிலத்தில் இல்லை என்றும்; ஆக்சிஜன் அளவு 92க்குக் கீழ் சென்றால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிடக்கூடாது. பேட்டி அளிக்கும்போது, தான் அரசாங்கத்தின் பிரதிநிதி என்பதை மனதில் வைத்து, தான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் தான் தான் பொறுப்பு என்ற உணர்வுடன் சுகாதாரத் துறை அமைச்சர் நடந்துகொள்ள வேண்டும். மக்களை அச்சுறுத்தக்கூடாது. அதே சமயம், நோய்த் தொற்றால் ஏற்படும் உண்மையான பாதிப்புகளை மறைக்காமல், மக்களிடம் உள்ளது உள்ளபடியே தெரிவிக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு உண்டு” என்று தெரிவித்துள்ளார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

வியாழன் 13 ஜன 2022