மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 ஜன 2022

டிஜிட்டல் திண்ணை: மோடியுடன் பூ பாதையா? சிங்கப் பாதையா? ஸ்டாலின் எடுத்த முடிவு!

டிஜிட்டல் திண்ணை:  மோடியுடன் பூ பாதையா?  சிங்கப் பாதையா? ஸ்டாலின் எடுத்த முடிவு!

வைஃபையை ஆன் பண்ணியதும் வாட்ஸ் அப்பில், சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் பேசும் ஒரு பஞ்ச் டயலாக் சீன் வீடியோ வந்திருந்தது. ‘இந்த ஒரு ரூபாயில பூ விழுந்தா பூ பாதை, தலை விழுந்தா சிங்கப் பாதை’ என்ற ரஜினியின் டயலாக்கை பார்த்து ரசித்து முடிப்பதற்குள் மெசேஜ் வந்து விழுந்தது.

“ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று (ஜனவரி 12) சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படும் 11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவில் பங்கேற்றார். முன்னதாக இந்த விழா பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகை தந்து மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால், ஒமிக்ரான் பரவல் காரணமாக நேரில் வருவதைத் தவிர்த்து பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடியே காணொலி வாயிலாக கலந்துகொண்டார். இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னைக்கு வந்தார் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர்.

நேற்று மாலை நடந்த விழாவில் கலந்துகொள்வதற்கு முன் சென்னையில் பொது சுகாதாரத்துறை வளாகம், கொரோனா கட்டுப்பாட்டு அறை, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா. அதன் பின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது தமிழக பயணத்தின் போது, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில், பிஎம் கேர்ஸின் கீழ் நிறுவப்பட்ட கட்டுப்பாட்டு அறைகள், கோவிட் கட்டளை அறை, 108 கட்டுப்பாட்டு மையம் மற்றும் PSA ஆக்ஸிஜன் ஆலைகளை ஆய்வு செய்தேன். கொரோனா தடுப்பு பணிகளில் தமிழ்நாடு அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது’என்று பாராட்டு தெரிவித்தார்.

திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே அரசியல் ரீதியான மோதல் போக்கு தொடரும் நிலையில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரின் இந்த பாராட்டு அரசியல் ரீதியாகவும் விவாதிக்கப்படுகிறது.

2021 மே மாதத்தில் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே திமுகவுக்கும், பாஜகவுக்குமான அரசியல் மோதல் அரசு ரீதியாகவும் தொடருமா அல்லது அரசுக்கு அரசு என்ற வகையில் இணக்கப் போக்கு தொடங்குமா என்ற கேள்விகள் அரசியல் அரங்கில் எழுந்தன.

கடந்த ஜுன் மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல் முறையாக பிரதமர் மோடியை டெல்லி சென்று சந்தித்தார். அப்போது பிரதமரிடம் தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சினைகளைப் பற்றிய 25 கோரிக்கைகளை உள்ளடக்கிய விரிவான மனுவை அளித்தார். ஸ்டாலின் கூடவே திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு ஆகியோர் இருந்தனர். அப்போது மோடியிடம் நேருக்கு நேராகப் பேசிய துரைமுருகன், ‘நீங்களும் நாங்களும் தேர்தலில் எதிரெதிர் துருவங்களாகப் போட்டியிட்டோம். தேர்தல் களத்தில் கடுமையாக மோதிக் கொண்டோம். இப்போது நாங்கள் ஜெயித்து தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக அரசாக உங்களைப் பார்க்க வந்திருக்கிறோம். பழையதை எல்லாம் நினைவில் வைத்துக்கொள்ளாமல், நாம் நட்புறவோடு செயல்பட வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும்’ என்று பிரதமரிடம் கூறினார். இதுகுறித்து மோடியிடம் துரைமுருகன் வைத்த வேண்டுகோள் என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியாகியிருந்தது.

துரைமுருகனின் வேண்டுகோளை அருகே இருந்து பார்த்த நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வெளியே வந்து இது தொடர்பாக தனது அதிருப்தியை துரைமுருகனிடமே வெளிப்படுத்தினார். ‘டெல்லியை பொறுத்தவரை நாம் கொஞ்சம் இறங்கிச் சென்றால் நம்மை மிதித்துவிடுவார்கள். ஒன்றிய அரசுக்கு மெஜாரிட்டி இல்லையென்றால் மாநில அரசியல் கட்சிகளை அனுசரித்துச் செல்லும். அப்போது மாநில கட்சிகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். ஆனால் இப்போது முழு பெரும்பான்மை பலத்தோடு இருக்கும் ஒன்றிய அரசிடம் இதையெல்லாம் நாம் எதிர்பார்க்கக் கூடாது. நாம் எதிர்ப்புணர்வோடும் போராட்ட உணர்வோடும் இயங்கினால்தான் நமக்குரியவற்றை பெற முடியும். அரசியல் ரீதியாகவும் இதுவே தமிழகத்தில் நமக்கு நல்லது’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடமும் அப்போது தெரிவித்திருந்தார் டி.ஆர்.பாலு. திமுக தலைவரிடமும் இதையே தெரிவித்திருந்தார்.

ஒன்றிய அரசோடு இணக்கமாக செல்ல வேண்டும் என்று துரைமுருகனும், போராட்ட உணர்வோடு செல்ல வேண்டும் என்று டி.ஆர். பாலுவும் தொடர்ந்து திமுக தலைவரான முதல்வர் ஸ்டாலினிடம் வற்புறுத்தி வருகின்றனர். இதை ஒட்டி துரைமுருகன் கருத்தை ஆதரிப்பவர்கள், டி.ஆர்.பாலு கருத்தை ஆதரிப்பவர்கள் என்று திமுகவுக்குள்ளேயே இரு சாரார் இருக்கின்றனர்.

இப்படியே சென்றுகொண்டிருந்த நிலையில்தான் நீட் விலக்கு சட்ட மசோதா விவகாரத்தில் ஆளுநரின் தாமதத்தை திமுக கடுமையாக விமர்சித்தது. இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்திக்க சென்ற டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக எம்பிக்கள் குழுவை அமித் ஷா சந்திக்கவில்லை. இதுகுறித்து பாலு டெல்லியில் டென்ஷனாகவே பிரஸ்மீட்டில் தெரிவித்தார். இதன்பின் சென்னை வந்து திமுக தலைவரான முதல்வர் ஸ்டாலினை சந்தித்த டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக எம்பி.க்கள், ’அமித் ஷா திமுகவை எதிர்ப்பதாக நினைத்து தமிழக அரசை எதிர்க்கிறார். தமிழக எம்பிக்கள் குழுவை சந்திக்க மறுக்கிறார். எனவே நாம் இந்த விஷயத்தில் நம் எதிர்ப்பை உறுதியாக காட்ட வேண்டும். அந்த அடிப்படையில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவில் ஆளுநரை அழைக்காமல் முதல்வரான நீங்களே கொடியேற்றலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர். இதன் பின் சட்டமன்றத்திலேயே அமித் ஷாவின் போக்கு பற்றி விமர்சித்தார் முதல்வர் ஸ்டாலின்.

இதன் அடுத்த கட்டம் பற்றி முதல்வர் ஸ்டாலின் மூத்த அமைச்சரும் பொதுச் செயலாளருமான துரைமுருகனிடம் ஆலோசித்துள்ளார்.

அப்போது துரைமுருகன், ‘அண்ணா காலத்துல இருந்தே டெல்லி இப்படித்தான். அதுக்காக நாம ஒரேயடியாக எதிர்ப்பைக் காட்டினால் இப்போ வர்ற நிதியிலயும் கைவச்சிடுவாங்க. அப்படி நிதி குறைஞ்சா நம்ம ஆட்சி முடியும்போது நமக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும். இப்பவே நிதி இல்லாததால பல மக்கள் நல திட்டங்களை நம்மால செயல்படுத்த முடியலை. பொங்கலுக்கு ரொக்கப் பணம் கொடுக்கலைனு எதிர்க்கட்சிகள் நம்மளை கடுமையா விமர்சிக்கிறாங்க. நம்மிட்ட பணம் இருந்தா கொடுத்திருப்போமே. எனக்கு இப்ப கிடைக்குற தகவல்படி வட இந்தியாவுல பிஜேபிக்கு பெரிசா எதிர்ப்பு இருக்குற மாதிரி தெரியலை. வர்ற எலக்‌ஷன்ல அவங்க மறுபடியும் ஜெயிச்சா கூட ஆச்சரியம் இல்லை. இப்ப கூட அவங்க முழு மெஜாரிட்டியோடுதான இருக்காங்க. அவங்களை எதிர்த்து நமக்கு என்ன ஆகப் போகுது? அதனால இப்ப அரசு ரீதியா நாம டெல்லியோடு இணக்கமாக போறதே நமக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது’ என்று ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார். அந்த அடிப்படையில்தான் அமித் ஷா அழைத்தால் மீண்டும் அவரை தமிழக எம்பிக்கள் குழு சந்திப்பது என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒருபக்கம் டி.ஆர்.பாலுவின் சிங்கப் பாதை யோசனை, இன்னொரு பக்கம் துரைமுருகனின் பூ பாதை யோசனை என இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து முதல்வர் ஒரு முடிவெடுத்திருக்கிறார். அதன் எதிரொலி ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் வருகையில் தெரிந்தது.

வழக்கமாக ஒன்றிய அமைச்சர்கள் வரும் தகவல் தலைமைச் செயலாளர் மூலம் மாநில அரசுக்குத் தெரியப்படுத்தப்படும். அதன் அடிப்படையில் ஒன்றிய அமைச்சரின் நிகழ்ச்சி நிரலை ஒட்டி அவருக்கு தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை மாநில அரசு செய்யும். இந்த அடிப்படையில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சருக்கு சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒன்றிய அமைச்சரின் வருகைக்கு முன் அவருக்கு தமிழக அரசு செய்துள்ள உபசரிப்பு ஏற்பாடுகள் பற்றி கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்... ‘அரசு விருந்தினர் மாளிகையில் அவர் தங்க வேண்டாம். நட்சத்திர ஹோட்டலில் வசதியான சூட்டில் தங்க ஏற்பாடு செய்யுங்கள்’என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் இதுகுறித்து பேசிய முதல்வர், ‘ஒன்றிய அமைச்சர் நமது விருந்தினர். எனவே அவரை சிறப்பாக உபசரிக்க வேண்டும். இந்த விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்திப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார். அதன்படியே அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை விமான நிலையத்துக்கே சென்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்றார். மேலும் ஒன்றிய அமைச்சருக்கு நட்சத்திர ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டு அவரை சிறப்பாக உபசரித்திருக்கிறார்கள் தமிழக அரசுத் தரப்பினர்.

இனி தமிழகம் வரும் அனைத்து ஒன்றிய அமைச்சர்களுக்கும் இப்படித்தான் சிறப்பான உபசரிப்புகள் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு வாய்மொழி ஸ்டேண்டிங் ஆர்டர் போடப்பட்டிருக்கிறது”என்ற மெசேஜை டைப் செய்து முடித்து செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

வியாழன் 13 ஜன 2022