மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 ஜன 2022

உள்ளாட்சித் தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமல்

உள்ளாட்சித் தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது என்றாலும் இன்னும் ஆளும் கட்சி உட்பட மற்ற கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.

இந்த சூழலில் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே, கோவை மாநகராட்சிக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஜனவரி 13) வெளியிட்டுள்ளார்.

அதில், விரைவில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் நகர்ப்புறங்களில் நாம் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளோம். ஊழலிலும் லஞ்சத்திலும் திளைக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேர்மையும் திறமையும் வாய்ந்த உறுப்பினர்கள் கிடைக்கமாட்டார்களா எனும் ஆதங்கம் தமிழக மக்களிடம் இருக்கிறது. பல ஆண்டுகளாகக் கதறியும் தீர்க்கப்படாத பிரச்சனைகள் தமிழகத்தின் ஒவ்வொரு வீதியிலும் தெருவிலும் இருக்கின்றன. தேர்தலில் வென்று அவற்றைத் தீர்த்தாக வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு இருக்கின்றன.

வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட இருக்கும் தகுதியான வேட்பாளர்களின் முதற்கட்டப் பட்டியலை இன்று வெளியிடுகிறேன். வேட்பாளர்கள் இக்கணம் முதல் வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு ஒவ்வொரு வாக்காளரிடமும் நமது கொள்கைகள், செயல்திட்டம், சின்னம் ஆகியவற்றைக் கொண்டு சேர்க்கவேண்டும். இவர்களை வெற்றியடையச் செய்யும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. நாம் ஒரு படையாகத் திரண்டு உழைக்க வேண்டும்.

நடக்க இருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மக்கள் நீதி மய்யத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். நமது உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படும் உள்ளாட்சிகள் ஒரு முன்மாதிரி மாடலாக இந்தியா முழுக்க பேசப்படும் காலம் அருகில் வந்துவிட்டது. அந்தந்த பகுதிகளுக்கான செயல்திட்டத்தை உருவாக்கி இமைப்பொழுதும் சோர்வடையாமல் உழையுங்கள். தேர்தல் களத்தில் வாகை சூட வேட்பாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சிக்கான வார்டுகளில் போட்டியிட வெளியிடப்பட்டுள்ள முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 47 பேர் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் களம் கண்ட கமல், 1,728 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். மொத்தம், 51,481 வாக்குகளைப் பெற்றார். இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் பணிகளைக் கோவையிலிருந்து தொடங்கியுள்ளார் கமல்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

வியாழன் 13 ஜன 2022