மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 ஜன 2022

தை பிறந்தால் வழி பிறக்கும்: 11 கல்லூரிகள் திறப்பு விழாவில் மோடி

தை பிறந்தால் வழி பிறக்கும்: 11 கல்லூரிகள் திறப்பு விழாவில் மோடி

தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை நேற்று (ஜனவரி 12) காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். முன்னதாக பிரதமர் விருதுநகருக்கு வருகை தந்து திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, 11 மருத்துவக் கல்லூரிகளைக் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ரூ.4,000 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவக் கல்லூரிகள் மூலம் தமிழகத்துக்குக் கூடுதலாக 1,450 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைக்கும். அதுபோன்று சென்னையில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழ் ஆராய்ச்சி மைய வளாகத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

நேற்று மாலை 4 மணி அளவில் நடந்த இந்த விழாவில் டெல்லியிலிருந்து பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

தமிழில் வணக்கம்... தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தெரிவித்து தனது உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி,

“மருத்துவக் கல்வி என்பது மிகவும் விரும்பப்படும் படிப்புகளில் ஒன்றாகும். மருத்துவர்களுக்கான பற்றாக்குறை இந்தியாவில் நிலவுவது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண போதிய முயற்சிகள் எடுக்கப்படவில்லை. சுயநல சக்திகள் முந்தைய அரசுகளைச் சரியான முடிவுகளை எடுக்க விடாமல் செய்திருக்கலாம். மேலும், மருத்துவக் கல்விக்கான அணுகலும் பிரச்சினையாகவே இருந்தது.

இந்த இடைவெளியை நிவர்த்தி செய்ய எங்கள் அரசு பாடுபட்டு வருகிறது. 2014இல் நம் நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் இந்த எண்ணிக்கை 596 மருத்துவக் கல்லூரிகளாக உயர்ந்துள்ளது. இது 54 சதவிகிதம் அதிகமாகும். 2014ஆம் ஆண்டில், நம் நாட்டில் மருத்துவப் பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் பட்டப்படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை 82,000 இருந்தது. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை சுமார் 1 லட்சத்து 48,000 இடங்களாக உயர்ந்துள்ளது.

இது சுமார் 80 சதவிகிதம் அதிகமாகும். 2014ஆம் ஆண்டில், நாட்டில் ஏழு எய்ம்ஸ் அமைப்புகள் மட்டுமே இருந்தன. ஆனால் 2014-க்குப் பிறகு, ஒப்புதல் அளிக்கப்பட்ட எய்ம்ஸ்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், மருத்துவக் கல்வித் துறையை வெளிப்படைத் தன்மையுடன் மாற்றும் வகையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தரத்தில் எந்தவித சமரசமும் இல்லாமல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் அமைப்பதற்கான விதிமுறைகள் தாராளமயமாக்கப்பட்டுள்ளன” என்றார்.

மேலும் அவர், “ஒரு மாநிலத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுவது இதுவே முதன்முறை என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, உத்தரப்பிரதேசத்தில் ஒரே நேரத்தில் 9 மருத்துவக் கல்லூரிகளை நான் திறந்து வைத்தேன். எனவே, எனது சாதனையை நானே முறியடிக்கிறேன். பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வது முக்கியம். அந்த வகையில், ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 2 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. வளர்ச்சித் தேவைகளுக்குச் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய மாவட்டங்கள் இவை. தொலைதூர மலை மாவட்டமான நீலகிரியில் ஒரு கல்லூரி அமைந்துள்ளது” என்று கூறினார்.

தமிழகத்துக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆயுஷ்மான் திட்டத்துக்காக ரூ.3,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்று கூறிய மோடி, “செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய கட்டடம் தமிழ்ப் படிப்புகளை மேலும் பிரபலப்படுத்தும். மாணவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் பரந்த பரப்பை இது கொடுக்கும். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்கத் திட்டமிட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல முயற்சியாகும். தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் செழுமையால் நான் எப்போதும் ஈர்க்கப்படுகிறேன். ஐக்கிய நாடுகள் சபையில் உலகின் மிகப் பழமையான மொழியான தமிழில் சில வார்த்தைகள் பேசும் வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று. பண்டைய காலத்தின் வளமான சமுதாயம் மற்றும் கலாச்சாரத்துக்கான நமது சாளரமாகச் சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. தமிழ் படிப்புகளுக்கான சுப்பிரமணிய பாரதி இருக்கையை பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நிறுவிய பெருமையும் எங்கள் அரசுக்கு உண்டு. எனது நாடாளுமன்றத் தொகுதியில் அமைந்திருக்கும் இந்த இருக்கை தமிழ் மீது அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும். திருக்குறளின் மொழிபெயர்ப்பைக் குஜராத்தியில் நான் அறிமுகப்படுத்தியபோது, காலத்தால் அழியாத படைப்பின் செழுமையான சிந்தனைகள் குஜராத் மக்களுடன் இணைந்திருப்பதையும், பண்டைய தமிழ் இலக்கியங்களில் அதிக ஆர்வத்தை இது ஏற்படுத்தும் என்பதையும் அறிந்து கொண்டேன்” என்று குறிப்பிட்டார்.

“பள்ளிகளில் தாய்மொழி மற்றும் உள்ளூர் மொழிகளில் கல்வி கற்பதை ஊக்குவிக்கிறோம். பொறியியல் போன்ற தொழில்நுட்பப் படிப்புக்களை இந்திய மொழிகளில் மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்யும் பணியை எங்கள் அரசு தொடங்கியுள்ளது. பல பிரகாசமான பொறியாளர்களைத் தமிழ்நாடு உருவாக்கியுள்ளது. அவர்களில் பலர் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் வணிகத் தலைவர்களாக மாறியுள்ளனர். ஸ்டெம் என அழைக்கப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப் படிப்புகளில் தமிழ்மொழி உள்ளடக்கத்தை வளர்க்க உதவுமாறு இந்தத் திறமையான தமிழ் புலம்பெயர் மக்களை நான் அழைக்கிறேன். ஆங்கில மொழி ஆன்லைன் படிப்புகளைத் தமிழ் உட்படப் பன்னிரண்டு வெவ்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கச் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மொழிபெயர்ப்புக் கருவியையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம்” என்று பேசினார் பிரதமர் மோடி.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

வியாழன் 13 ஜன 2022