மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 ஜன 2022

இந்தியாவின் கூட்டாட்சி முறை: ஒரு வரலாற்றுப் பார்வை

இந்தியாவின் கூட்டாட்சி முறை: ஒரு வரலாற்றுப் பார்வை

லூயிஸ் டில்லின்

இந்தியாவின் காலனியாதிக்கத்துக்கு பிந்தைய அரசியல் சாசனம் கூட்டாட்சி தத்துவத்துக்கான புதிய அணுகுமுறையை அறிமுகம் செய்தது. இது சுருக்கப்பட்ட அல்லது குவாஸி கூட்டாட்சி முறை என வர்ணிக்கப்படுகிறது. கூட்டாட்சி மற்றும் பிராந்திய அரசுகள் தங்களுக்கான சொந்த அதிகாரப் பரப்பில் தங்களுக்கான சுதந்திரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் இருந்து விலகியதாலும், மாநிலங்களின் விஷயங்களில் மத்திய அரசு தலையிடுவதற்கான வலுவான முகாந்திரங்களை அளித்ததாலும் இந்தியக் கூட்டாட்சி முறை குறிப்பிடத்தக்கதாக அமைகிறது.

கூட்டாட்சி முறையை ஆழப்படுத்தும் திசையில் இந்தியா சென்று கொண்டிருப்பதாகத் தோன்றிய, 1989 முதல் 2014ஆம் ஆண்டுவரை, அரசியல் பிராந்தியமாக்கல் காலத்துக்குப் பிறகு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவிக்கு வந்த நிலையில், இந்திய அரசியல் சாசனத்தை மத்திய அரசு மயமாக்கும் இடத்துக்கு மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறது.

இந்தியாவின் தனித்தன்மை வாய்ந்த கூட்டாட்சி முறையின் வரலாற்று அம்சங்களை இங்கே ஆராய இருக்கிறேன். மாதவ் கோஸ்லா அண்மையில் குறிப்பிட்டிருந்ததுபோல, 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியா ஜனநாயகமயமாக்கலுடன் அரசியல் சாசன புதுமையாக்கத்திலும் ஈடுபட்டிருந்தது, 20ஆம் நூற்றாண்டின் முன்னுதாரணமாகவும் அமைந்தது. இந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்திய மாதிரி கூட்டாட்சி முறையின் முக்கியத்துவமும் முன்னுதாரணமானது.

வரலாற்று உதாரணங்களுக்குத் திரும்பும்போது, இந்தியக் கூட்டாட்சி முறை என்பது ஏற்கனவே உள்ள முறையின் குறைந்த வடிவம் அல்ல, மாறாக, காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற இந்தியா அந்தக் காலத்தில் எதிர்கொண்ட சவால்களுக்கு ஏற்ற கூட்டாட்சி முறையாகும்.

பிரிவினைக்குப் பிறகு தேசத்தை ஒற்றுமையுடன் வைத்திருப்பது தொடர்பாக அரசியல் சாசன நிர்ணய சபை கொண்டிருந்த கவலைகளிலிருந்து இந்தியாவின் மையப்படுத்தப்பட்ட தன்மை வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்திய அரசியல் சாசனத்தின் மையப்படுத்தப்பட்ட தன்மை அதன் ஜனநாயகமாக்கலின் அங்கமாகவும் இருப்பதாக கோஸ்லா குறிப்பிடுகிறார்.

அரசியல், பொருளாதார அம்சங்கள்

இந்தியாவில் அரசு மற்றும் மக்கள் நலன் தொடர்பான புத்தகத்துக்கான எனது ஆய்வின் அடிப்படையிலும், இந்தியக் கூட்டாட்சி முறை தொடர்பான இன்னொரு நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையிலும், இந்தியாவில் கூட்டாட்சி வடிவத்தில் தாக்கம் செலுத்தும் அரசியல் பொருளாதாரக் காரணங்களை இங்கு ஆய்வு செய்கிறேன். குறிப்பாக, இந்தியக் கூட்டாட்சி முறையின் தனித்துவமான அம்சங்கள் அதன் ஆரம்ப காலத்தில், அகில இந்திய அளவில் தொழில் வளர்ச்சியில் மாகாணங்களுக்கு இடையிலான போட்டியால் ஏற்படக்கூடிய இடரை மீறி, தேசியப் பொருளாதாரத்தை உருவாக்குவதில் இந்திய மூலதன, தொழிற்சங்கத் தலைவர்கள், தேசியவாத அரசியல்வாதிகளின் ஒரு தரப்பினர் மத்தியில் இருந்த விருப்பமே காரணம் என்றும் குறிப்பிட விரும்புகிறேன்.

20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பருத்தி, ஜவுளி, சணல் உற்பத்தி ஆகியவை இந்தியாவின் மிகப்பெரிய தொழில் துறைகளாக இருந்தன. ஜவுளித் துறையில் மாகாணங்களுக்கு இடையே நிலவிய போட்டி தொழிலாளருக்கான செலவுகள், பணியிடச் சூழ்நிலை ஆகியவற்றை மிகவும் அடிமட்டத்துக்குத் தள்ளியது. இந்திய ஜவுளித் தொழிலின் மிகப் பழமையான மையமான மும்பை நகரத்தில் இந்தத் தொழிலின் செயல்பாடுகள் லாபமற்றதாக மாறின. சம்பளக் குறைப்பு, பணி நீக்கங்கள், இந்தத் துறையை “தர்க்கபூர்வமான” மாற்றங்களுக்கு உட்படுத்தும் முயற்சிகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு எழுந்ததில் இந்தத் தொழில் துறையில் அமைதியின்மை ஏற்பட்டது.

ஒரு சில நிறுவன அதிபர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் (அம்பேத்கர் உள்ளிட்டவர்கள்), காங்கிரஸ் தலைவர்கள் சிலர், மோசமாகிக்கொண்டிருந்த இந்தத் தொழில் உறவுகளுக்கு எதிர்வினையாக வேறுபட்ட வழிகளில் அகில இந்திய அளவில் தொழிலாளர் கொள்கை, சமூகப் பாதுகாப்பை ஒருங்கிணைக்கக்கூடிய மத்தியத் தன்மை கொண்ட அரசை முன்வைத்தனர்.

இந்திய அளவில் ஒரே சீராக இருக்கும் வகையில் தொழில், தொழிலாளர் சார்ந்த அணுகுமுறைகள் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கருதினார்கள். புதிய சர்வதேசத் தொழிலாளர் அமைப்பில் உருப்பெற்ற தொழிலாளர்களுக்கான சமூகக் காப்பீடு போன்ற திட்டங்கள் உள்ளூர் முதலாளிகள் மீது கூடுதல் செலவினங்களைச் சுமத்தக்கூடியவை. மும்பை போன்ற மாகாணங்கள் இதுபோன்ற பரிசோதனைகளில் ஈடுபடுவதற்கான வழிகளைக் குறைந்த ஊதியம் வழங்கும் பிராந்தியங்களிலிருந்து எழும் போட்டியானது குறைத்துவிட்டது.

இந்திய அரசு சட்டங்கள் 1919, 1935 இரண்டுமே, தொழிலாளர் கொள்கைக்கான தேசிய ஒருங்கிணைப்பைப் பாதுகாக்கும் வாய்ப்பைக் கொண்டிருக்கும் வகையில் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு, ஆங்கிலேயத் தொழிலாளர் கட்சியின் நெருக்கடியால் கடைசி நேரத்தில் திருத்தப்பட்டன. இது அரசியல் சாசனத்தின் இணைப் பட்டியலில் கொண்டுவரப்பட்டது.

தேசியத் தொழில் மற்றும் தொழிலாளர் கொள்கை உருவாக்குவதைத் தவிர்த்து, தலையிடுவதற்கு பதில் மையமில்லாத அணுகுமுறையை பின்பற்றிவந்த காலனியாதிக்க ஆட்சியாளர்களுக்கு இது திகைப்பை ஏற்படுத்தியது. 1940களில், இந்த அரசியல் சாசன அம்சங்களுடன், தேசிய தொழிலாளர் மாநாடுகளும் நடைபெற்றன. மத்தியில் தொழில் உறவுகள், தொழிலாளர் கொள்கையை வகுக்க, நிறுவனங்கள், தொழிலாளர்கள், மாநிலங்கள் அடங்கிய முத்தரப்புக் குழுவுக்கு இது முன்வடிவாக அமைந்தது.

இந்தியாவின் தனித்த கூட்டாட்சி முறை

இந்திய அரசியல் சட்டம் 1935இன் அதிகாரப் பிரிவு அடிப்படையில் அரசியல் சாசன நிர்ணய சபை அரசியல் சாசன முன்வடிவை உருவாக்கியபோது, இது காலனிய அரசியல் சாசனத்தின் தொகுப்பாகவோ கூட்டாட்சி முறையின் சுருக்கப்பட்ட வடிவமாகவோ இருக்கவில்லை. இந்திய அரசியல் சாசனச் சிற்பிகள், 20ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் நிலவிய அரசியல், பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ற கூட்டாட்சி முறையின் மாறுபட்ட வடிவத்தை ஏற்றுக்கொண்டனர்.

மையப்படுத்தப்பட்ட கூட்டாட்சி முறையை நாடியதன் மூலம் இந்தியா அமெரிக்கா, கனடா போன்ற கூட்டாட்சி நாடுகளில் ஏற்பட்ட கூட்டுச் செயல்பாட்டுச் சிக்கல்களைக் களைய முயற்சி செய்தது.

இந்தியக் கூட்டாட்சி முறையில் மத்தியமாக்கல் அம்சம் வரலாற்று விவாதத்துக்கு மட்டுமானது அல்ல. தேசிய, பிராந்திய அரசியல் அதிகார, கொள்கை வகுக்கும் அதிகாரத்தை நிறுவுவது, எதிர்ப்பது ஆகியவை தொடர்பான பொருளை அவை இன்னமும் வடிவமைத்துக் கொண்டிருப்பதால் இப்போதும் முக்கியமாகின்றன.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, அகில இந்திய அளவில் கொள்கையை ஒருங்கிணைப்பதில் மத்தியமாக்கலின் ஆற்றல் தொடர்பான பார்வையை ஒரு சில விதங்களில் தலைகீழாக மாற்றியிருக்கிறது என்பது ஒரு நகைமுரண். தேசிய அளவில் தொழிலாளர் சட்டங்களை சீர்திருத்த உள்ள தடைகளை எதிர்கொள்ளும் வகையில், சிறிய ஆனால் அரசியல்ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட துறையில் மத்திய தொழிலாளர் சட்டங்களைத் திருத்த, விதிகளைத் தளர்த்த மாநில அரசுகளை மோடி அரசு ஊக்குவித்து வருகிறது. அதே நேரத்தில், இதற்கு முன்னர் மாநில அரசுகள் முக்கிய பங்கு வகித்த அமைப்பு சாராத் துறைகளுக்கான நலத்திட்டங்கள், நேரடி மானிய திட்டத்தை உருவாக்கிச் செயல்படுத்துவதற்கான பெருமையை மத்திய அரசு தனதாக்கிக் கொண்டுள்ளது.

இந்த இரட்டை அணுகுமுறை, தொழிலாளர்கள் நிலையை மோசமாக்கும் போட்டியைத் தடுப்பதில் மத்திய அரசின் கட்டுப்பாட்டு அதிகாரத்தை பலவீனமாக்குகிறது. அதே நேரத்தில் அமைப்பு சாராத் துறையினருக்கு நலத்திட்டங்களை வழங்குவதில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதற்கான மாநில அரசுகளின் தன்மையையும் ஊக்கத்தையும் பலவீனமாக்குகிறது. ஆனால், நலவாழ்வு அம்சங்களில் மத்திய, மாநில அரசுகளின் மோதல் இந்திய அரசியல் சாசனச் சிற்பிகளின் நோக்கத்தைத் தெளிவாக உணர்த்துகிறது. மக்கள் நலன் என்பது மத்திய அல்லது மாநில அரசுகளின் பொறுப்பாக மட்டும் இருக்கக் கூடாது என அவர்கள் கருதினர்.

கட்டுரையாளர் லூயிஸ் டில்லின், கிங்ஸ் இந்தியா இன்ஸ்டிட்யூட்டின் அரசியல் துறைப் பேராசிரியர், இயக்குநர்.

இந்தக் கட்டுரை பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தின், இந்திய மேம்பட்ட ஆய்வுக்கான மையத்தின், இந்தியா இன் டிரான்சிஷன் வெளியீட்டில் முதலில் வெளியானது.

நன்றி: தி ஸ்கிரால்

தமிழில்: சைபர் சிம்மன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

வியாழன் 13 ஜன 2022