மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 ஜன 2022

கவலைக்குரிய மாநிலங்களில் தமிழ்நாடு: மத்திய அரசு!

கவலைக்குரிய மாநிலங்களில் தமிழ்நாடு: மத்திய அரசு!

இந்தியாவில் தமிழ்நாடு உட்பட எட்டு மாநிலங்களில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிப்பு காரணமாக கவலைக்குரிய மாநிலங்களாக மாறி வருகின்றன என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒமிக்ரான் எனும் திரிபு பரவ ஆரம்பித்தது முதல் ஒவ்வொரு மாநிலங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. நாட்டில் கொரோனா பாதிப்பு இரண்டு லட்சத்தையும், ஒமிக்ரான் பாதிப்பு ஐந்து ஆயிரத்தையும் நெருங்கியுள்ளது.

இந்த நிலையில் நேற்று (ஜனவரி 12) டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதார துறை இணைச் செயலர் லாவ் அகர்வால், “இந்தியாவில் டிசம்பர் 30ஆம் தேதி 1.1% ஆக இருந்த கொரோனா பாதிப்பு விகிதம் நேற்று 11.5% ஆக அதிகரித்துள்ளது. 300 மாவட்டங்களில் வாராந்திர கொரோனா பாதிப்பு 5 சதவிகிதத்துக்கு மேல் உள்ளது. 19 மாநிலங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், கேரளா, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், கவலைக்குரிய மாநிலங்களாக மாறி வருகின்றன.

மகாராஷ்டிராவில் டிசம்பர் 22ஆம் தேதி 0.87% ஆக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 22.39% ஆகவும், மேற்கு வங்கத்தில் 1.52%இல் இருந்து 32.18% ஆகவும் அதிகரித்துள்ளது. அதுபோன்றுதான் தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் தொற்று அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் எட்டு மாநிலங்களில், எந்தவொரு மாநிலமும் முழு ஊரடங்கு அமல்படுத்தவில்லை. ஒமிக்ரான் மாறுபாட்டால் அதிகரித்த கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க இரவு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு மற்றும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்தியாவில் தற்போதுவரை 4,868 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் 1,281 பேரும், டெல்லியில் 546 பேரும், கர்நாடகாவில் 479 பேரும், கேரளாவில் 350 பேரும், மேற்கு வங்கத்தில் 294 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 275 பேரும், குஜராத்தில் 236 பேரும், தமிழ்நாட்டில் 185 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவரும் குணமடைந்த ஒரே மாநிலம் தமிழ்நாடு. இங்கு யாரும் ஒமிக்ரான் சிகிச்சையில் இல்லை. ஒமிக்ரான் பரிசோதனையும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் தொற்றால் உலக அளவில் 115 பேர் இறந்துள்ள நிலையில், இந்தியாவில் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார்.

ஐரோப்பாவில் எட்டு நாடுகளில் கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு மடங்குக்கும் மேல் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் தடுப்பு நடவடிக்கைகளில் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.

இவரைத் தொடர்ந்து பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், “ஒமிக்ரான் ஜலதோஷம் போன்றதல்ல, அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. நாம் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா ஒழிப்பில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது” என்று கூறினார்.

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் நேற்று முன் தினம் 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 17,934 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 88,959 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 7,300 பேர் மருத்துவமனையிலும், 82,000 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தலிலும் உள்ளனர்.

சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 7,372 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியாகும் சதவிகிதம் தமிழ்நாட்டில் 11.3 சதவிகிதமாகவும், சென்னையில் 21.3 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

வியாழன் 13 ஜன 2022